முன்கதை சுருக்கம்: பொள்ளாச்சி முத்துராமன் என்ற பெயரை ஞாபகம் உள்ளதா என, விக்ரம் கேட்கவும் அதிர்ச்சியடைந்தார், ராமலிங்கம். அம்பிகா, அர்ச்சனா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, விக்ரம் கூறிய அந்த நபர் யார் என அப்பாவிடம் கேட்டாள், ஆராதனா-சென்னை-
'ராமலிங்கம்...' என, ரியல் எஸ்டேட் கம்பெனி முதலாளி கூப்பிட்டார். ஆபிசின் முன் அறையில் எழுதிக் கொண்டிருந்த, 29 வயது இளைஞன் ராமலிங்கம், முதலாளி அறைக்கு போனான்.
'ராமலிங்கம், ஒரு ஏழெட்டு மாசம் நீ பொள்ளாச்சி பக்கத்துல இருக்குற பெரிய நெகமத்துல இருக்கணும்...'
'புராஜெக்ட்டா ஐயா?' தயங்கி கேட்டான், ராமலிங்கம்.
'ஆமா... அங்க ரெண்டு ஏக்கர் இடம் இருக்கு. விஸ்தாரமா, 'கெஸ்ட் ஹவுஸ், காட்டேஜ்' கட்டி விக்கலாம்ன்னு இருக்கேன்...'
'நல்ல விஷயம் தான் ஐயா!'
'இப்ப அந்த இடம் பொட்டலா இருக்கு. எவனாவது வந்து குடிசையை போட்டுக்கிட்டு, கட்டடம் கட்டிட்டாலோ, போலீஸ், கோர்ட் கேஸ் அது இதுன்னு உயிர் போயிடும்...'
'ஆமாங்கய்யா... திருச்சில கூட நம்ம இடத்துல பெரிய பிரச்னை ஆயிடுச்சே...'
'ஆமா, அதுக்கு தான் உன்ன போக சொல்றேன். நம்ம நிலத்துல ஒரு குடிசையை போட்டுக்க, வேலி போட்டுக்க, கார்ப்பரேஷன்ல, அரசாங்க ஆளுங்கள பார்க்குறது எல்லாம் நீ கவனிச்சுக்க...'
'சரிங்க...'
'அஸ்திவாரம் போடுற வரை நீ அங்கேயே இரு. செலவுக்கு மதியம் என்கிட்ட பணம் வாங்கிக்க. சரியா?'
'சரிங்க முதலாளி...'
முதலாளி கூறியதை ஏற்று, அன்று, 'ரிலீஸ்' ஆகும், 'தலைவர்' படத்தை பார்க்க முடியாத வருத்தத்துடன் ஊருக்கு கிளம்பினான், ராமலிங்கம்.
முதலாளி உத்தரவுபடி, நெகமம் கிராமத்தில் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் நிலத்தை சுற்றி உறுதியான தடுப்பு வேலி போட்டுக் கொண்டான்.
ஆங்காங்கே நாலைந்து அடர்த்தியான மா மரங்கள் இருந்தன. மற்றபடி அது பொட்டல் வெளி.
நிலத்தின் ஓரத்தில் இருந்த வேப்ப மர நிழலை ஒட்டி அவனுக்கு ஒரு குடிசை. அதில், கட்டில், -நாற்காலி. வேலை ஆரம்பிக்கும் வரை காவல் வேலை.
சாப்பாடு தான் பெரிய பிரச்னையாக இருந்தது. சற்று துாரத்தில் ஒரு டீக்கடை. காலையில் கல்லு மாதிரி இட்லி, வடை; பகலில் காரமான தக்காளி சாதம்; இரவில், புரோட்டா தான் அங்கு வழக்கமாக கிடைக்கும். 15 நாட்கள் இதை சாப்பிட்ட திலேயே அவனுக்கு வயிறு கெட்டு போன மாதிரி இருந்தது.
வீட்டு சாப்பாடு மாதிரி கிடைக்க கூடிய, 'மெஸ்' இருந்தால் பரவாயில்லை என நினைத்து, தேட ஆரம்பித்தான்.
பொள்ளாச்சி சந்தையில் எப்போதும் போல் கூட்டம். பழக்கடை, காய்கறிகள் கடை, வளையல் ரிப்பன், மளிகை கடைகள், குடை ராட்டினம், பஞ்சு மிட்டாய் என ஏகப்பட்ட கடைகள்.
'முத்துராமா... என்னப்பா ரெண்டு பை நிறைய காய்கறி, மளிகை எல்லாம் ஏதாவது விசேஷமா?' முத்துராமன் முதுகில் தட்டி, ஒரு பெரியவர் கேட்டார்.
'இல்லைய்யா, நாளைக்கு சம்சாரத்தோட திதி...'
பெரியவர் கொஞ்சம் வருத்தமாக, 'எத்தனாவது வருஷம்?'
'மூணாவது வருஷம்ங்க...'
'பாவம் ஒரே வாரம் காய்ச்சல் வந்ததுல எல்லாம் முடிஞ்சு போச்சு...'
'ஆமாய்யா...'
'பையன் எங்க?'
திரும்பி பார்த்தான், முத்துராமன்.
'அங்க பாருங்க, பஞ்சு மிட்டாய் சாப்பிட்டுகிட்டு இருக்கான். டேய் விக்ரம், இங்க வா...'
ஓடி வந்த சிறுவன் விக்ரமின் கன்னத்தை தட்டிக் கொடுத்தார், பெரியவர்.
'முத்துராமா, இந்த பையனுக்காக வாவது நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் பா. உனக்கு என்ன, 31 - 32 வயசு தானே ஆவுது. யோசிச்சு பாரு...' என்றார்.
'வேண்டாம் யா, என் தங்கச்சி சுகந்தி இருக்கா இவனை பார்த்துக்க. அது போதும்...'
'ஏம்பா நாளைக்கு அந்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகி போயிட்டா?'
'என் பையன்னா அவளுக்கு உயிர்ங்க. அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா...'
ராமலிங்கத்தின் கண்ணில் பட்டது அந்த, 'மெஸ்!' கூட் ரோட்டில் ஆல மர நிழலில் ஒரு சாயம் போன போர்டில், 'முத்துராமன் மெஸ் - சைவம்' என்று பெரிதாகவும், வலது பக்க மூலையில் கொஞ்சம் சின்னதாக, 'உரிமையாளர் பொள்ளாச்சி முத்துராமன்' என்றும் இருந்தது. தென்னை ஓலை கூரை வேய்ந்த ஹோட்டல்.
உள்ளே போனான், ராமலிங்கம். சுத்தமாக இருந்தது; நல்ல வெளிச்சம். 10 பேர் சாப்பிட வசதியாக மர பெஞ்சு, டேபிள். கடைக்குள் நுழையும் இடத்தில் வலது பக்கம் ஒரு டேபிள், சேர்-, கல்லா. கல்லா பக்கத்தில், 'சாப்பிட்டவுடன் இலையை வெளியே போடவும்' என்ற பலகை இருந்தது.
சமையலறை பின்பக்கம் இருந்தது.
ஐந்து பேர் உட்கார்ந்திருந்தனர். இரண்டு பேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். காத்திருந்தவர் முன் வாழை இலை போட்டு, டம்ளரில் தண்ணீர் வைத்தான், ஒரு பையன்.
மர பெஞ்சில் உட்கார்ந்தான், ராமலிங்கம்.
'அக்கா, சாம்பார்...' என்றான், சாப்பிட்டு கொண்டிருந்த இருவரில் ஒருவன்.
'வரேன், பொறுமையா இரு... எனக்கென்ன பத்து கையா இருக்கு?' என்றபடி, சமையல் கட்டிலிருந்து சாம்பார் வாளியுடன் வெளியே வந்தாள், சுகந்தி.
திடீரென மின்னல் அடித்த மாதிரி மிரண்டு போனான், ராமலிங்கம். அப்படி ஒரு அழகை அவன் இதுவரை பார்த்ததில்லை.
எளிமையான மஞ்சள் கலர் பாவாடை, ரவிக்கை, சிகப்பு தாவணி. இடுப்பு வரை பின்னி விடப்பட்ட நெளிநெளியான கூந்தல், பளிச்சென்ற பல் வரிசை, பெரிய அகலமான கண்கள், கூர்மையான மூக்கு, நியாயமான உயரம், அதற்கேற்ற உடலமைப்பு, மாநிறம், சுறுசுறுப்பு.
'அடேயப்பா... இந்த சின்ன ஊரில் இப்படி ஒரு தேவதையா? முதல் தடவை பார்த்ததிலேயே எனக்குள் இவ்வளவு பாதிப்பை உண்டாக்கி விட்டாளே...' என்று பேச்சு வராமல் உறைந்து போயிருந்தான்.
'என்ன வேணும் உங்களுக்கு... அளவு சாப்பாடா, முழு சாப்பாடா?'
அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில், அவள் கேட்டது எதுவுமே அவன் காதில் விழவில்லை.
'உங்களத்தானே... என்ன வேணும்?'
இரண்டாம் முறை கொஞ்சம் கோபமாக கேட்டபடி டேபிளை தட்டினாள். நினைவுக்கு வந்த ராமலிங்கம், 'எது
வேணா குடுங்க...' என்றான்.
அவளாகவே முழு சாப்பாட்டை கொண்டு வந்து பரிமாறினாள். ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடி சாப்பிட்டான். பேசவில்லை, சாப்பிட்டு முடித்தவர்களிடம் பணம் வாங்க கல்லாவில் உட்கார்ந்தாள்.
'அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சீக்கிரம் சாப்பிட்டு போகக் கூடாது...' என முடிவு செய்தான். சாப்பாடு இறங்கவில்லை.
அவள் வந்து பரிமாற வேண்டும் என்பதற்காகவே, இரண்டு முறை சாம்பார், ரசம் சாதம் எல்லாம் சாப்பிட்டான்.
அவன் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருந்தான். அவள் ரூபாய் நோட்டுகளையும், சில்லரைகளையும் எண்ணியபடி, 'சார், கொஞ்சம் சீக்கிரம் சாப்பிடுங்க. சுத்தம் செய்யணும்...' என்றாள்.
இஷ்டமில்லாமல் சாப்பிட்டு முடித்தவன், பணம் கொடுக்கும்போது வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான்.
'காலைல டிபன் உண்டா?'
'ம்...' என, அவள் நோட்புக்கில் ஏதோ எழுதியபடி சொன்னாள்.
'சாப்பாடு எத்தனை மணி வரைக்கும்?'
'மூணு மணி வரைக்கும்...'
'ஞாயிற்றுக்கிழமை உண்டா?'
அதுவரை நிமிர்ந்து பார்க்காதவள் லேசாக முறைத்து, 'வெளியே போர்டு இருக்கு. பார்த்துக்குங்க...' என்று, சமையலறை பக்கம் போய் விட்டாள்.
ராசக்காபாளையத்தில், மளிகை கடை மற்றும் மருந்து கடை நடத்தி வந்தான், முத்துராமன். சுகந்திக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று, ஐந்து வயது விக்ரமை தன்னுடன் தினமும், 'டிவிஎஸ் 50'ல் அழைத்து போய் விடுவான். 'மெஸ்'சை கண்ணும் கருத்துமாக சுகந்தி நடத்தி வந்தது, அவனுக்கு சவுகரியமாக இருந்தது.
தாயில்லா விக்ரமுக்கு உயிர், உலகம் எல்லாமே அத்தை தான். சாப்பாடு போட, குளிப்பாட்டி விட, துாங்க வைக்க, உடம்பு சரியில்லை என்றால் கவனிக்க என, எல்லாவற்றிற்கும் அத்தை வேண்டும்.
அத்தையோடு, 'மெஸ்'சில் இருக்க
விட மறுக்கிறாரே என, அவனுக்கு எப்போதுமே அப்பா மேல் கோபம் உண்டு. அதனால், 'டிவிஎஸ் 50'ஐ, 'பஞ்சர்' ஆக்க இரண்டு முறை முயன்று தோற்று
போனான்.
- தொடரும்
கோபு பாபு