அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (16)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
00:00

முன்கதை சுருக்கம்: பொள்ளாச்சி முத்துராமன் குறித்து அப்பா ராமலிங்கத்திடம் ஆராதனா கேட்க, பழைய நினைவுகளில் மூழ்கினார்-

ராத்திரி முழுக்க ராமலிங்கத்திற்கு துாக்கமே வரவில்லை. 'மெஸ்' நடத்தும் ஒரு சாதாரண பெண் என, சுகந்தியை நினைக்க முடியவில்லை. அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. எப்பேர்பட்ட அழகு?
'எங்கேயோ பார்த்துகிட்டு இருக்கீங்களே போதுமா...' என, ரசத்தை ஊற்றியபடியே சுகந்தி கேட்டது, கல்லாவில் உட்கார்ந்து காசு வாங்கிய அழகு, முத்து முத்தாக நோட்டில் எழுதியது என, எல்லாவற்றையும் மறுபடி, மறுபடி நினைத்து, ரசித்தான்.
பொட்டல் நிலத்தில் பொழுதைப் போக்கும் இந்த வேலை போரடிக்கிறது என்று நினைத்திருந்தவன், இப்போது மாறி விட்டான். இன்னும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இந்த ஊரிலேயே இருக்கலாம் என தோன்றியது.
இப்போதெல்லாம் அவன் காலி நிலத்தில் கட்டிலில் உட்கார்ந்து இருக்கும் நேரம் குறைந்து விட்டது. பல நாட்கள், காலையில் பசி இல்லை என்றாலும், 'மெஸ்'சுக்கு போவதையே வழக்கமாக்கிக் கொண்டான். நாலு இட்லியை ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாப்பிட்டான்.
சுகந்தியின் ஒவ்வொரு செய்கையையும் அணு அணுவாக ரசித்தான். எவ்வளவு நாள் இப்படியே இருப்பது? ஒருநாள் காசு கொடுக்க போனபோது, துணிந்து சொல்லி விட்டான். 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. வர்றேன்...' என்று அவள் பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பினான்.
அதிர்ச்சியாக இருந்தது, சுகந்திக்கு.
'அடப்பாவி எவ்வளவு தைரியம். இதுக்காகத்தான் மூணு வேளையும் இங்கே சாப்பிட வரானா? எங்கிருந்து வர்றான். எந்த ஊர்க்காரன்...' பலவிதமாக யோசித்தபடியே வேலையில் மூழ்கினாள்.
கொஞ்சம் நாள், 'மெஸ்'சுக்கு வரவில்லை, ராமலிங்கம்.
'நல்லதா போச்சு. அந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கடை பக்கம் வராமல் இருப்பதே நல்லது...' என்று நினைத்தபடியே மற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

ஒருநாள், மெதுவாக இருமியபடி வந்தான், ராமலிங்கம். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை, வலது கையில் கட்டு போட்டிருந்தது. முகம் வீங்கி இருந்தது. ஒரு பெஞ்சில் வந்து உட்கார்ந்தான். உள்ளே இருந்து மோர் எடுத்து வந்த சுகந்தி, ராமலிங்கத்தை பார்த்தாள். அவன் வாசல் பக்கம் பார்த்தபடி இருந்தான்.
'என்ன ஆச்சு இந்த ஆளுக்கு... வலது கையில் கட்டு, முகம் வீங்கிப்போய், எங்கயாவது விழுந்துட்டானா?' என்று யோசித்தபடி, அவன் முன் இலையைப் போட்டு, தண்ணீர் வைத்தாள்.
'என்ன ஆச்சு?' கேட்டாள்.
'ஒண்ணுமில்ல...'
'கொஞ்ச நாளா வரலை?'
'அடிபட்டிருக்கு. மனசுக்கு சரின்னுபட்டதால. நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லிட்டேன். அதுக்காக உங்க அண்ணன்கிட்ட சொல்லி என்னை அடிக்கணுமா?'
'என்னது, எங்க அண்ணன் உங்கள அடிச்சாரா?'
'ம்... 'எவ்வளவு தைரியம் இருந்தா முத்துராமன் தங்கச்சியை பார்த்து அழகா இருக்கேன்னு சொல்லுவ? வந்தோமா சாப்பிட்டோமாங்கற மாதிரி இருக்கணும்'ன்னு, கையை முறுக்கி அடிச்சாரு. அழகை ரசிக்கிறது தப்பா... அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?'
தவித்தாள், சுகந்தி.
'இத பாருங்க நீங்க சொன்னதை நான் எங்க அண்ணன்கிட்ட சொல்லவே இல்ல...'
'குண்டா பெரிய மீசை வச்சிருப்பாரே, அவர் தானே உங்க அண்ணன்?'
'இல்லை இல்லை... இதை பாருங்க...' கல்லா மேஜை டிராயரை இழுத்து, பர்சில் இருந்த முத்துராமன் படத்தை எடுத்து காட்டியவள், 'இவர் தான் என் அண்ணன். இவரா அடிச்சாரு?' என்றாள்.
மிகவும் சாந்தமாக இருந்த முத்துராமனை பார்த்தான்.
'இவர் இல்லை. ஆனா, நான் உங்ககிட்ட சொன்ன விஷயம், என்னை அடிச்ச ஆளுக்கு எப்படி தெரியும். யார்கிட்டயாவது சொன்னீங்களா?'
யோசித்தாள், சுகந்தி.
அன்னிக்கு இவன் போறதுக்கும், விறகு கொண்டு வந்து போடுற சுடலை வருவதற்கும் சரியாக இருந்தது. ஆளைக்காட்டி அவனிடம் சொன்னாள்.
'அவன் வேலையா இது? அவன் தான் குண்டா பெரிய மீசை வெச்சுகிட்டு இருப்பான். ஐயையோ... சரி யார்கிட்டயும் சொன்னதா காட்டிக்க வேண்டாம்...' என்று நினைத்துக் கொண்டவள், 'யார் அடிச்சது, என்னன்னே புரியல. சரி சாப்பிடுங்க...' என்று உள்ளே போனாள்.
அவன் இடது கையால் பிசைந்து சாப்பிட கஷ்டப்படுவதை, சமையற்கட்டிலிருந்து பார்த்தாள்.
'சே... இந்த ஆள் சொன்ன விஷயத்தை நான் சுடலைக்கிட்ட சொன்னது தப்பு. சாதாரணமா சொன்னதுக்கே சுடலை இப்படி அடிச்சுருக்கானே...' என்று, தினசரி அவன் கடைக்கு வரும்போதெல்லாம், அவளுக்கு தோன்றியது.
நாளாக நாளாக, ராமலிங்கத்தின் கை காயம் ஆறிக்கொண்டே வந்தது. அவர்கள் பரஸ்பரம் விசாரித்து, சிரித்து, சகஜமாக பேச ஆரம்பித்தனர்.

கண்ணாடி முன் அதிக நேரம் நின்று, 'அவன் சொன்னது சரிதான்' என்ற மாதிரி பார்த்து சிரித்துக் கொண்டாள், சுகந்தி.
அவன் கடைக்கு வர கொஞ்சம் தாமதமானாலும் இருப்பு கொள்ளாமல் தவித்தாள். அவன் நினைவுகள் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தன. அவன் தங்கி இருக்கும் இடத்தை வந்து பார்த்தாள். அவள் வீடு இருக்கும் இடத்தை அவன் வந்து பார்த்தான்.
'நீங்கள் தங்கியிருக்கிற இடம் சவுகரியமா இருக்கா?'
'பொட்டல் நிலத்தில் ஒரு குடிசை... சவுகரியமாவா இருக்கும்?'
'வேற இடம் கிடைச்சா தங்கிக்க முடியுமா... இல்ல இங்கேதான் இருக்கணுமா?'
'அடிக்கடி பார்க்கிற மாதிரி ஒரு இடம் கிடைச்சா சவுகரியம் தான்...' என்று சிரித்தான்.
அவளும் சிரித்தபடியே போய் விட்டாள்.
அவர்கள் இருந்த தெருவிலேயே ஒரு மாடி வீடு காலியாக இருந்தது. அண்ணனிடம் சொல்லி அந்த இடத்தை ராமலிங்கத்துக்கு ஏற்பாடு செய்தாள். இரண்டு பேரும், வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டனர். சுகந்தியின் காதல் மவுனமாக, கவுரவமாக வளர்ந்து கொண்டே வந்தது.

சென்னையில், ராமலிங்கம் வீடு களையிழந்திருந்தது. தினசரி பூஜைகள் இல்லை; ஆட்கள் வந்து போவது குறைந்தது. கலகலப்பாக இருக்கும் அம்பிகாவும், அர்ச்சனாவும் முற்றிலுமாக மாறிப் போயினர்.
திடீரென, 'அவனை மறக்க முடியல, மறக்க முடியல...' என வெறிபிடித்தவள் மாதிரி கத்துவாள்; எல்லாவற்றையும் துாக்கி போட்டு உடைப்பாள், அம்பிகா. பிரமை பிடித்த மாதிரி ஒரே ஒரு சின்ன விளக்கை போட்டு கொண்டு அறையிலேயே இருப்பாள், அர்ச்சனா. அவள் பேசுவது குறைந்து விட்டது.
மூன்று பேர் மனதிலும் விக்ரம் ஏற்படுத்தி இருந்த காதலின் தாக்கம், அவர்களை நடைபிணமாக ஆக்கியிருந்தது. மூவரில், ஏன் எதனால், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் உறுதியாக இருந்தாள், ஆராதனா.
விக்ரமின் மொபைல் போன் ஒலித்தது.
''ஆராதனா பேசுறேன்.''
''தெரியுது, சொல்லு.''
''இன்னைக்கு, நான் மட்டும் உன்ன பார்த்து பேசணும்.''
''இப்போ வெளியூர்ல இருக்கேன்.''
''மறுபடியும் நம்பணுமா.''
''நிஜமா சொல்றேன். நாளைக்கு எங்க, எத்தனை மணிக்குன்னு சொல்லு, வரேன்.''
''ஈ.சி.ஆர்.,ல இருக்கிற எங்க பண்ணை வீட்டு விலாசம் அனுப்புறேன்.''
''தாங்க்ஸ்... நானும் நிறைய பேசணும்; வரேன்.''

மப்பும் மந்தாரமுமாக இருந்தது, வானம். ஆராதனா அனுப்பிய விலாசத்தை வைத்து, பண்ணை வீட்டுக்கு காரில் வந்து இறங்கினான், விக்ரம்.
போர்டிகோவில் ஒரு பெரிய கார் இருந்தது.
காரைப் பூட்டி, ''ஆராதனா வந்துவிட்டாளா, எங்கே?'' என்று தேடினான், விக்ரம்.
''ஐயா, அவங்க பின்னாடி இருக்காங்க,'' என்றான், தோட்டக்காரன்.
மாடர்னாக இருந்தது பண்ணை வீடு. மரங்கள், பூச்செடிகள், நீரூற்றுகள், பெரிய பெரிய கருங்கல் சிற்பங்கள், நடுவில் அழகான சின்ன கண்ணாடி வீடு. பின்பக்கம் புல்வெளி, தென்னை மரங்கள், சின்ன சின்ன பெஞ்சுகள், கடல் அலையின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
விக்ரம் வந்ததை கவனிக்கவில்லை. அலையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள், ஆராதனா. தொண்டையை கனைத்தான். மெதுவாக திரும்பியவளின் நினைவில், கேரளா சந்திப்புகள் வேகவேகமாக வந்து அலை மாதிரி திரும்பிப் போயின.
அவள் கண்களில், 'படுபாவி, எப்படி எல்லாம் பொய் சொல்லி நம்ப வச்சு ஏமாத்தினே?' என்ற கோபம் தெரிந்தது. கைகளை மூடித் திறந்தாள். கண்களில் நீர் கோர்த்திருந்தது.
''அம்பிகாவும், அர்ச்சனாவும் ஹாஸ்பிடல்ல இருந்தாங்க... தெரியுமா? ஒருத்தி, கையை வெட்டிகிட்டா. ஒருத்தி, அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை சாப்பிட்டா. அம்மாவும், அப்பாவும், ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.
''வீட்ல நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போச்சு. உனக்கு மட்டும் பாதிப்பு இல்லையா? நீ ஏன் எதுவும் செஞ்சுக்கலைன்னு கேட்கிற மாதிரி இருக்கு, நீ பார்க்கறது,'' என்றாள், ஆராதனா.
''மூவரில் நீ கொஞ்சம் புத்திசாலி. பார்வையிலேயே சில விஷயங்களை புரிஞ்சுக்கிற... வெரி குட்!''
''உன் பாராட்டு தேவையில்லை. நீ யாரு, உன் நோக்கம் என்ன, எதுக்கு எங்க மூணு பேரையும் காதலிச்ச... பொள்ளாச்சி முத்துராமன் பேரை கேட்டதும், ஏன் எங்க அப்பா நிலைகுலைந்து போனார்... இது எல்லாத்துக்கும் எனக்கு பதில் தெரியணும்... சொல்லு,'' என்றாள்.
தொடரும்.
கோபு பாபு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X