பாடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
00:00

மதிய உணவு வேளை, சாப்பாட்டுக் கேரியரை மேசையில் வைத்து செந்தில் பிரித்த நேரம், மொபைல் அழைத்தது.
அண்ணன் ஜெயராமன் அழைப்பை பார்த்ததும், 'திக்'கென்றது. என்ன சொல்ல அழைக்கிறான் என்பது தெரியும். அனிச்சையாக கைகள், கேரியரை மூடி, ஓரமாக நகர்த்தின.
இனி சாப்பிட முடியாது. எதிர்பார்த்தது தான், 'அம்மா போய் விட்டாள் போலிருக்கிறது...'
எனக்கு எந்தவித அதிர்ச்சியோ, துக்கமோ ஏற்படவில்லை. மாறாக, அம்மா சீக்கிரம் போனால் போதும் என்று தான் வேண்டிக் கொண்டேன். வயது: 80. ஒரு மாசமாக படுக்கையில் கிடந்து, வேதனையை அனுபவித்தாள்.
போன வாரம் போய் பார்த்தபோது, அம்மா நம்மை விட்டுப் போய் விடுவாளோ என்ற படபடப்பை விட, அவளுடைய வேதனைகள்தான் நெஞ்சைப் பிழிந்தது.
யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. அப்படிப்பட்ட அம்மா, இப்படி அனுபவித்து தான் சாக வேண்டுமா என, விதியின் மீது கோபம் வந்தது.
''ஹலோ, செந்திலு.''
''சொல்லுண்ணே.''
''அம்மா போயிட்டாடா... இப்பத்தான், 10 நிமிஷத்துக்கு முன் உயிர் விட்டுச்சு.''
''ம்.''
''என்னமோ... அவஸ்தைப்பட்டுப் போய் சேர்ந்துட்டு. இன்னும் இருந்தாலும் கொடுமையைத்தான் அனுபவிச்சிருக்கும். ஆண்டவன் இப்பவாவது கூட்டிக்கிட்டானே. எல்லா ஏற்பாடுகளையும் நான் கவனிக்கிறேன். நீ, உடனே கிளம்பி வா,'' என சொல்லி, தொடர்பை துண்டித்தான்.
கேரியரை எடுத்து பையிலேயே வைத்து, எம்.டி.,யிடம் அனுமதிப் பெற்று, உடனே கிளம்பினேன். வீட்டை நோக்கி காரை செலுத்தும்போது, மனதில் பெரும் தவிப்பு. காரணம், அம்மாவின் இறப்பு அல்ல; மனைவி சுகன்யாவைப் பற்றிய நினைப்பு.
சுகன்யாவிடம் சொன்னால், 'நீங்க மட்டும் போயிட்டு வாங்க' என்பாளா... அவள் அப்பா இறந்தபோது, நான் இப்படித்தானே சொன்னேன். அது, அவளுடைய மனதில் இருக்கத்தானே செய்யும். மறந்திருந்தால், சமயம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டுவாளே.
அவள் அப்பாவின் இறப்பிற்கு முதலில் அப்படி சொன்னாலும், பிறகு போனேன். அதைப்போல், வேண்டுமென்றே, 'நீங்க மட்டும் போங்க... நான் வரலை...' என்று, அவளிடம் கெஞ்ச வேண்டும் என்பதற்காகவே, 'பிகு' செய்வாள்.
காரணம், அன்றைக்கு அவள் அப்பா செத்தபோது, 'இதப்பார் சுகன்யா... வயசானா எல்லாம் போய் சேர வேண்டியது தான். நீ போ, இன்னைக்குன்னு பார்த்து எனக்கு ஆபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங். முக்கியமான ஆளே நான் தான். என்னால அங்க இங்க நகர முடியாது.
'இதை சாக்கு வச்சு நான் வந்தேன்னா, எனக்கு அடுத்து இருக்குறவன் ரொம்ப ஈசியா என் இடத்தை, எனக்கான முக்கியத்துவம் எல்லாத்தையும் எடுத்துப்பான். நீ மட்டும் போயிட்டு வா...'
'என்னங்க இப்படி சொல்றீங்க, என் தங்கை கல்யாணத்துக்கு கூட நீங்க வரலை; எதையோ சொல்லி சமாளிச்சேன். ஆனா, இது சாவு. மத்த மருமகன்களெல்லாம் என்ன சொல்வாங்க?'
'இதப்பார்... உங்க மத்த மருமகன்கள் மாதிரி நான் இல்லை. பெரிய கம்பெனியில் பெரிய பதவியில இருக்கேன். என்னோட அவங்களை, 'கம்பேர்' பண்ணாதே...'
'எப்படியாவது பாடி எடுக்கற நேரத்துக்காவது வந்து தலையைக் காட்டுங்களேன். ப்ளீஸ்... இல்லாட்டி எல்லாரும் என்னை வார்த்தையாலேயே கொன்னுடுவாங்க...' கெஞ்சி, அழுதாள்.
மாமனாரின் சாவுக்கு போகக் கூடாதென்ற எண்ணமெல்லாம் கிடையாது. குறிப்பாக, மனைவியின் வீட்டில் பந்தாவை அதிகம் காட்டும் நான், மற்ற மருமகன்களை விட படிப்பு, பதவி எல்லாவற்றிலும் சிறந்தவன் என்ற உயர்வை காட்டி, கொஞ்சம், 'பிகு' செய்தேன்.
அதையே இப்போது சுகன்யா செய்தால் என்ன செய்வது, அவளை எப்படி எதிர் கொள்வது எனத் தெரியாமல் தவித்தேன்.

வீட்டு வாசலில் காரை நிறுத்தினேன். கதவு திறந்தே இருந்தது. உள்ளே நுழைந்தபோது, பெரிய பை ஒன்றில் அவசர அவசரமாக துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள், சுகன்யா. ஓசைக் கேட்டு நிமிர்ந்தவளுடைய முகம் கண்ணீர் தடயங்களுடன், சிவப்பேறிய கண்கள்; அழுதிருப்பாள்.
''என்னங்க... பெரிய மாமா போன் பண்ணினதுமே, நமக்கு வேண்டிய துணிமணிகளை, 'பேக்' பண்ணிட்டேன். கிளம்பலாமா,'' என்றாள்.
அந்த பதில் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. எல்லாவற்றையும் மறந்து விட்டாளா... சுகன்யா அப்படிப்பட்டவள் அல்ல. எதிராளி ஒன்று சொன்னால், ஒன்பது சொல்லும் குணம் படைத்தவள்.
ஒருவேளை அங்கே போய் என் மானத்தை வாங்கப் போகிறாளா... கண்டிப்பாக அதான் நடக்கப் போகிறது. ஏனென்றால், நான் அப்படித்தானே செய்தேன்.

காரில் கிளம்பினோம்.
இறப்பு செய்தியால் இருவருக்குமிடையே இருந்த மவுனம் விலகி, சுகன்யாவின் அப்பா இறந்தபோது நடந்ததையே மறுபடியும் ஞாபகப்படுத்தியது.
சுகன்யாவின் அப்பா இறந்தபோது தாமதமாகத்தான் சென்றேன். உள்ளே சென்று, பாடியை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, வாசலில் போட்டிருந்த பந்தலில் நான்கு பேருடன் அமர்ந்து விட்டேன்.
ஆனால், மற்ற இரு மருமகன்களும், தங்கள் மனைவியருக்கு ஆறுதல் சொல்வதோடு, பாடியை எடுப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டனர். இடையிடையே சொந்தக்காரர்களிடமும், மாமனாரின் அருமை பெருமைகளை சொல்லி, துக்கப்பட்டனர்.
ஏனோ என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை. சாதாரண நாட்களிலேயே பெரும்பாலும் மாமனார் வீட்டிற்கு வர விரும்ப மாட்டேன். அப்படியே வந்தாலும் எதிலும் ஒட்டாமல், மாப்பிள்ளை என்ற முறுக்குடன் இருந்து கிளம்பி விடுவேன்.
மச்சான்கள் இருவருக்கும் வயது குறைவு. விபரம் தெரியாதவர்கள். அதனால், இரு மருமகன்களும் பொறுப்புடன் செயல்பட்டனர். ஆனால், நான் எதிலும் ஒட்டாமல், ஒரு ஓரமாக அமர்ந்து, செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த செய்கை, எல்லாரும் ஒரு மாதிரியாக என்னை பார்க்க வைத்தது.
பாடியை அடக்கம் செய்து வந்த பின், மனைவி, மச்சான்களை ஆறுதல் படுத்துவதிலும், அடுத்தடுத்த நாட்களில் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றிய கலந்துரையாடல்களில் ஊரார் மற்றும் சொந்தக்காரர்களிடம் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர், மற்ற மருமகன்கள். ஆனால், நானோ இவை எவற்றிலும் ஈடுபடாமல் அதைப்பற்றியே பேசாமல், 'சுகன்யா... நான் கிளம்பறேன். நீ இருந்து, பார்த்துட்டு வா...' என்றேன்.
'என்னங்க... நாளைக்கு பால் தெளிக்கணும். நாளை மறுநாள் சடங்கு இருக்கு. என் தம்பிங்க சின்ன பசங்க. நீங்க உடனே கிளம்பினா எப்படி?'
'என்ன நீ... என் வேலைகளைப் போட்டுட்டு இங்க உட்கார்ந்து உன் அக்கா புருஷன்க மாதிரி, பொண்டாடாட்டிங்க அழும்போதெல்லாம் கண்ணீரைத் தொடைச்சிக்கிட்டு இருக்க சொல்றியா... எனக்கு பதிலா உன் அத்தான்களையே உன் கண்ணீரயும் தொடைச்சுவிட சொல்லு. நான் கிளம்பறேன்...' என, கிளம்பி விட்டேன்.
அதன்பின், கருமாதிக்கு கூட, கடைசி நேரத்திற்கு சென்று, ஒதுங்கி நின்று கலந்துகொண்டு வந்துவிட்டேன்.
எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்த சுகன்யா, என் நடவடிக்கைகளை பேசி, குத்திக் காட்டினாள். சொந்தக்காரர்கள் என்னை பேசிய பேச்சு, மற்ற மருமகன்கள் பேசிய வார்த்தைகள் எல்லாவற்றையும் தினம் ஒருமுறையாவது பேசாவிட்டால் அவளுக்கு தலை வெடித்துவிடும்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுகன்யாவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். ஆண்டுதோறும் கிராமத்திற்கு சென்று அண்ணன் குடும்பத்துடன் தீபாவளி மற்றும் பொங்கல் கொண்டாடும் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். மே மாத விடுமுறைக்கு செல்வதையும் மெல்ல குறைத்தாள்.
அம்மா உடம்புக்கு முடியாமல் கிடப்பது அறிந்து, அம்மாவின் அருகிலேயே அவளுடைய மரணம் வரை இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அதையே அண்ணனும் சொன்னபோது, இவள் முந்திக்கொண்டு, 'நீங்க வேற மாமா... அவருக்கு ஆபிசுல நேரமே கிடையாது. பெரிய பொறுப்பெல்லாம் இவர் தலையில தான்...' என சொன்னது, என் பெருமைபாடுவதாக இல்லை, குத்திக்காட்டுவதாகத்தான் இருந்தது.
இதோ, அம்மா போய் விட்டாள். அங்கே போய் எப்படி நடந்துக் கொள்ளப் போகிறாளோ... என்னைப் பழி வாங்க வேண்டுமென்று, நான் நடந்து கொண்ட மாதிரியே இவளும் நடந்து கொண்டால்... அது எத்தனை அவமானம்.
அம்மாவின் காரியங்களை கிராமம் பாராட்டும் வகையில் நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவள் இறந்த துக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அந்த மரியாதையை கெடுத்து விடுவாளோ என்ற பயம் ஒரு பக்கம் என்னை பந்தாடியது.
நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என்னை முந்தி உள்ளே சென்ற சுகன்யா, எதிர்கொண்ட என் அண்ணன் மனைவியை கட்டியணைத்து அழுதாள்.
பெண்மணிகளின் கூட்டம் கீழே வட்டமாக அமர்ந்து, ஒருவர் தோள்மேல் ஒருவர் கைகளைப் போட்டு ஒப்பாரியுடன் அழுது கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் அவளும் இணைந்து அழுதது, அவளை அசல் கிராமப் பெண்ணாகக் காட்டியது.
நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சுகன்யாவா ஒப்பாரி பாடுகிறாள். அம்மாவிற்காக அழ மறந்து சிலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
கிராமங்களில் சாவு வீட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது. மாமியார் இறந்து விட்டால் பிணத்தின் அருகே மருமகள்கள் இருக்க வேண்டும். துக்கம் விசாரிக்க வரும் பெண்களை கட்டிப்பிடித்து அழவேண்டும். இதை மருமகள்கள் செய்யாவிட்டால், கிராமத்தினர் கேவலமாக பேசுவதோடு அதை பெரும் அவமரியாதையாகக் கருதுவர்.
என் அம்மாவின் அருகேயே இருந்தாள், சுகன்யா. அதைப் பார்க்கப் பார்க்க என் மனம் உடைந்து சிதறியது. அம்மாவைக் குளிப்பாட்ட ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க பெண்கள் கிளம்பும்போது, முதல் ஆளாக குடத்தை எடுத்து நடந்தாள்.
வீட்டுக்குள்ளே செருப்பு போட்டு நடக்கும் சுகன்யா, வெற்றுப் பாதங்களுடன் ஆற்றங்கரை வரை சென்றது... கொஞ்சமும் வெட்கப்படாமல் இடுப்பில் குடத்தை சுமந்து, வேட்டி நிழலில் பெண்களுடன் பெண்களாய் வந்தது... அம்மாவை உட்கார வைத்து குளிப்பாட்டும்போது கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் முன்னின்று செய்தது...
என்னை மாறி மாறி செவுளில் அறைந்து தள்ளியது.
எத்தனைதான் கோபம் இருந்தாலும், கணவனின் சொந்தங்களை தன் சொந்தங்களாக நினைக்கும் சுகன்யா எங்கே... மாப்பிள்ளை முறுக்கைக் காட்டிய நான் எங்கே...
இனி, எப்படி சுகன்யாவிடம் மன்னிப்புக் கேட்பது என்று யோசிக்கத் துவங்கினேன்.

ஆர். சுமதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுஜா பள்ளிகரணை இதொரு கதை. சுத்த அறுவை. வளவளா கொழ கொழ...
Rate this:
Girija - Chennai,இந்தியா
09-ஜன-202219:44:54 IST Report Abuse
Girijaசூப்பர்,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X