அன்புள்ள அம்மா —
வயது: 40. திருமணமாகி, 14 ஆண்டுகள் ஆகின்றன. மனைவியின் வயது: 38. எங்களுக்கு இரண்டு குழந்தைகள். சிவில் இன்ஜினியரான நான், சொந்தமாக, 'கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி' நடத்துகிறேன்.
இடைப்பட்ட நேரங்களில் எண்கணித ஜோதிடமும், வாஸ்துவும் கணித்து கூறுவேன். உள்ளூரில் எந்த பிரச்னை என்றாலும், பத்திரிகைகளில் வாசகர் கடிதம் எழுதுவேன்; அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து முறையிடுவேன். ஆர்.டி.ஐ., ஸ்பெஷலிஸ்ட். ஊருக்குள் என்னை பெரிய வி.ஐ.பி.,யாக மதிக்கின்றனர்.
வீட்டுக்கு வெளியே எனக்கு ராஜமரியாதை இருந்தாலும், மனைவியால், 'கழுவி கழுவி' ஊற்றப்படுகிறேன். மனைவிக்கு, சமையலில் உதவலாம் என புகுந்தால், 'இது, 'ஹோம் டிபார்ட்மென்ட்' இதில் மூக்கை நுழைச்சு என் நேரத்தையும், சமையலையும் பாழ் பண்ணாதே. எட்டிப்போ...' என தாளிப்பாள்.
மனைவிக்கு ஆசையாய் புடவை வாங்கி வந்தால், முன்னும் பின்னும் புரட்டி பார்த்து, 'இதென்ன மேஜை விரிப்பை வாங்கிட்டு வந்து புடவைங்கிற. இத மனுஷி கட்டுவாளா...'- என்பாள்.
காலையில் படுக்கையிலிருந்து எழ தாமதமாகி விட்டால், 'ஒரு வாழைப்பழ சோம்பேறி எனக்கு புருஷனா வந்து வாய்ச்சிருக்கான். உங்கம்மா உன்னை ஒழுங்கா வளர்க்காம என் கழுத்தை அறுத்திட்டா...' என, அலுத்துக் கொள்வாள்.
மகன் - மகளை திட்டும்போது கூட, 'அப்பனை உரிச்சு வச்சிருக்குக. மதமதன்னு நிக்காம போய் அவங்கவங்க வேலைகளை பாருங்க...' என்பாள்.
புதிதாக எதாவது ஒரு காரியத்தை ஆரம்பிக்கப் போகிறேன் என மனைவியிடம் கூறினால், 'அவசரக் கொழுக்கட்டை அவசர கொழுக்கட்டை. எதையாவது அரைவேக்காடுதனமாய் ஆரம்பிச்சு பல்பு வாங்காதே...' என்பாள்.
வெளியாட்கள் யாராவது என் பக்கத்தில் இருந்தால், மரியாதை றெக்கை கட்டி பறக்கும்.
'எங்க சார், அமெரிக்க ஜனாதிபதியா இருந்திருக்க வேண்டியவர். தவறி இந்தியாவுல பிறந்துட்டார்...' என்பாள். வஞ்சபுகழ்ச்சி செய்கிறாளோ என்ற சந்தேகம், எனக்குள் எழத்தான் செய்யும்.
உறவினர், நண்பர் மத்தியில் எனக்கு ராஜமரியாதை தருவாள். உண்மையில், நான் முட்டாளா, அறிவாளியா என, எனக்குள் சந்தேகம் அதிகரிக்கிறது. மனைவியின் இரண்டு விதமான நடத்தைகளுக்கு என்ன காரணம்? அவளிடம் இதுபற்றி கேட்டால் கமுக்கமாக சிரிக்கிறாள்.
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
உலகம் பிறந்ததிலிருந்து இதுவரை, மனைவிக்கு, 'ஹீரோ'வாக தெரியும் கணவன், பிறக்கவே இல்லை. எல்லா கணவன்களும் காமெடியன், வில்லன்களே. பொதுவாக எல்லா ஆண்களும், பல முகமூடிகளை பொருத்திக் கொண்டே சமூகத்தில் நடமாடுகின்றனர். பலர் முகமூடி அணிந்து உண்மையான முகத்தை மறந்து விடுகின்றனர் அல்லது தொலைத்து விடுகின்றனர்.
ஓர் ஆண், முகமூடி இல்லாமல் இருக்குமிடம் அவன் வீடே. ஓர் ஆணின் எதிர்மறை ஆளுமைகள் அனைத்தும், ஒரு மனைவிக்குதான் தெரியும். மனைவியிடம், 'பாஸ் மார்க்' வாங்கினவனே, உண்மையில் சாதனை மனிதன்.
மனைவி ஒருமையில் அழைப்பது, உன் மீதான காதலாலே. ஒரு போலீஸ்காரர் தன் மகனை, 'திருட்டுப்பயலே' என, கொஞ்சுவதில்லையா? அப்படிதான் மனைவியின் வசவுகளும். அவள் உன்னை வன்முறையாக கொஞ்சுகிறாள். 24 மணி நேர வேலைப்பளு தரும் மன அழுத்தத்தை உன்னிடம்தானே இறக்கி வைப்பாள்.
சமையலறையில் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் நீ செய்யும் தொந்தரவுகளை தவிர்க்கவே, உன்னை வெளியே நெட்டித் தள்ளுகிறாள். மனைவிக்கான புடவையை நீயே எடுத்து, உன் ஆணாதிக்க புத்தியை ஏன் வெளிக்காட்டுகிறாய்... அவளின் ஆடைகளை அவளே தேர்வு செய்யட்டும்.
சோம்பேறி என பேர் வாங்காமல் காலையிலேயே எழுந்து, உன் குழந்தைகளுக்கு நீ ஒரு முன்னுதாரணமாக திகழக் கூடாதா... நீ புதிதாய் ஆரம்பிக்கும் காரியம் சரியாக நடக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வால், உன்னை முடுக்கி விடுகிறாள், மனைவி.
கணவன் - மனைவிக்குள் வெளிப்படையான, நக்கீரதனமான விமர்சனங்கள் இருத்தல் நலம். இல்லையென்றால், அங்கு அன்னியோன்யம் நிலவவில்லை என்றே பொருள். நகைச்சுவை உணர்வு இருந்தால், கணவன் - மனைவி வம்புதும்பு இல்லாது குடும்பத்தை நடத்தலாம். மனைவி, 'கமென்ட்' அடித்தால், சிரித்தபடியே நீயும் பதில், 'கமென்ட்' கொடு.
'ஆமா செல்லம், எங்கம்மாவுக்கு என்னை வளர்க்க தெரியல. எங்கம்மா இடத்தில் நீ இருந்து என்னை நல்லா வளர்க்க பாரு... நான் அவசரக் கொழுக்கட்டை, நீ பால் கொழுக்கட்டையாக்கும்... குழந்தைகள், உன்னையும் என்னையும் சேத்துதான் உரிச்சுவச்சு பிறந்திருக்குக. எனக்கு மட்டும் தனி கிரெடிட் கொடுக்காதே செல்லம்...' என, கூறலாம்.
பொதுவாக மனைவியின் ஆவலாதிகளை கேட்டு, நிவர்த்தி செய். நான், 'பெரிய ஆள்' என்ற பந்தாவை வீட்டுக்குள் கழற்றி வை. உறவினர், நண்பர் மத்தியில், உன்னை கண்ணியமாக நடத்தும் அவளுக்கு நன்றி கூறு. நீரடித்து நீர் விலகாது மகனே, அமைதிப்படு. வீட்டுக்கு வீடு வாசற்படி!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்