கடிகார முள் இரவு, 7:00 மணியை கடக்கத் துவங்கியதும் ஒருவித பரபரப்பு, அந்த கிராமத்திற்குள் படரத் துவங்கிவிடும். விஜய் நடித்த, பூவே உனக்காக படத்தில், அந்த பெரியவர் பாடத் துவங்கி விடுவார் என்ற பயத்தால், மக்கள் ஓடி ஒளிவரே, அதே நிலைதான் சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது.
காரணம், குடிகாரக் கோவிந்தன், கோழி பெருமாள், அலப்பறை என, வாய்க்கு வந்த பெயரால் அழைக்கப்படும், பெருமா சாமிதான். அவன் என்ன அவ்வளவு மோசமா?
ஊரார் அனைவரும், 'பத்தரைமாத்து தங்கம்ய்யா...' என்பர். அனைவருக்கும் எடுப்பும் துடுப்புமா இருக்கக் கூடியவன். செய்த வேலைக்காக கை நீட்டி காசு கொடுன்னு கேட்கத் தெரியாதவன்; கொடுத்தாலும் வேண்டாமென மறுத்து விடுவான்.
வயித்துக்கு ஒருவேள சாப்பாடும், சாயங்காலம், ஒரு டம்ளர் காபித் தண்ணியும் போதும். இதுவும் கிடைக்காவிட்டாலும் விழுந்து விழுந்து வேலை பார்த்துக் கொண்டு தான் இருப்பான்.
'போறப்ப எதக் கொண்டு போகப் போறோம். எத்தனையோ பெருசுக போய் சேர்ந்தாலும், இதில எத்தனைப் பேரை இன்னிக்கு வரையும் பேசிக்கிட்டு இருக்கோம். நான் போனதுக்கப்புறமும் உங்க வீட்ல நடக்கிற ஒவ்வொரு நிகழ்விலும் என்னை நெனக்கத்தானே செய்வீங்க. அது போதும்...' என்பான், பெருமா சாமி.
படிப்பறிவில்லாத தற்குறி தான். பேச ஆரம்பித்தால், பாண்டியத்துவம் பெற்றவர்கள் பேசுவது போலிருக்கும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த பெருமா சாமியை கண்டு தான், ராத்திரி நேரத்தில், ஊரே ஒண்ணு சேர்ந்து ஊரடங்கு செய்யுது.
வானிலை அறிவிப்பில் சொல்வது போல், பெருமா சாமி விவகாரத்திலும், 'ஏய் நம்மத் தெருவ தாண்டி, இப்ப கீழத் தெருவாண்டை போயிக்கிட்டிருக்கான்'னு யாராவது ஒருவர் அவனைப் பற்றி, 'லைவ் கமென்ட்ரி' கொடுத்து கொண்டிருப்பர்.
பகலெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்யும் பெருமாசாமி, இப்போது, இரவானதும் சரக்கை ஏத்திக்கிறான். கை சுத்தமான அவனிடம், கொஞ்ச காலமாக இரவு நேரங்களில் வாய் சுத்தமாக இல்லை.
எதிரில் வந்து சிக்கியவனிடம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த குடும்ப சண்டையை ஒண்ணுவிடாம பேச ஆரம்பித்து விடுவான். சிக்கினவன் தப்பி ஓட முற்பட்டால், 'பொறு மாப்பிளே, கொஞ்சம் கேளேன். நீயும் கொஞ்சம் கேளேன்'ன்னு சொல்லியே, அஜித் பட கருணாஸ் மாதிரி ஆகி... ரத்தமில்லாம கழுத்தை கீழே விழ வெச்சிருவான் என்ற பயம்.
அந்தக் கிராமத்தில், பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும், அனைவரும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு உறவு முறை சொல்லிதான் ஊருக்குள் நடமாடுவர். 40 வயசுக்கு கீழுள்ளவர்கள் எல்லாரும் பெருமா சாமிக்கு, மாப்பிள்ளைகள். அதுக்கு மேலுள்ளவர்கள் மாமாமார்கள். 60 வயதைத் தொட்டவர்களிடம், அப்பா உறவு முறை.
பெண்களிடமும் அதே ரேஞ்சில் தான். சின்னப் பிள்ளைகள் என்றால் தாயீ, அக்கா, பெரியாத்தா இப்படி வயசுக்கேத்த வரிசைக்கிரமம்.
ஞாயிற்றுக் கிழமைகளில், ஊர்த் திடலில் நடக்கும் கோழி சந்தையில், கோழி வியாபாரி; விவசாய வேலை நேரங்களில், விவசாயக் கூலி; வெளி வேலை இல்லாத நேரங்களில், செட்டியார் தேனீர் கடைக்கு, ஊர் கிணற்றிலிருந்து தண்ணீர் சுமந்து கொண்டிருப்பான்.
எந்த நேரத்தில் எப்படி அவதாரம் எடுத்திருந்தாலும், இரவு நேரத்தில் அவன் எடுப்பது, குவாட்டர் கோவிந்தன் அவதாரம் தான்.
அவனது சிறு வயதிலேயே அப்பாவும், அம்மாவும் போய் சேர்ந்துட்டதால், விக்கித்து கிடக்காமல் உழைக்க புறப்பட்டவன்.
'நல்ல பயதான். நம்ம ஊரு பயலாவும் இருக்கான். அவன மாதிரி, பாவப்பட்ட ஒருத்தியை பார்த்து அவனுக்கு முடிச்சு வெச்சுட்டா, கெட்டிக்காரத்தனமா குடும்பத்த நடத்துவான்...' ஊர் நாட்டாமைச் சொன்ன வார்த்தைகளை ஏற்றனர், ஊர் மக்கள்.
'ஏல மாப்ள, உனக்கு பொருத்தமான ஜோடியாத்தான் இருப்பால... எயக்கியம்மாவை பிடிச்சிருந்தா சொல்லு... சட்டுபுட்னு முடிச்சு வெச்சிருதோம்'ன்னு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கூறினர்.
'அப்பன் ஆத்தா இல்லாத எனக்கு, அந்த இடத்தில நீங்க தான இருக்கீங்க... நீங்க சொன்னா சரிதான்...'என்று, தலை கவிழ்ந்தான், பெருமா சாமி.
எயக்கியம்மாள கண்ணுல பொத்தி வெச்சு பார்த்துக்கிட்டான்; அவளும் புருஷனை முந்தானையில் முடிஞ்சு வெச்சிருந்தாள். வாரத்துக்கொரு நாள் டவுன்ல போயி படம் பார்க்கிறது. பெரிய ஓட்டல்ல போயி சாப்பிட்டு வர்றது. ஊரே உச்சி மோந்து பாராட்டவும் செய்தது. ஒரு சில மனங்கள் மட்டும் எச்சில் துப்பியது.
இன்ப வானில் சிறகடித்துக் கொண்டிருந்த ஜோடிகள் மீது யார் கண் பட்டதோ...
நாட்டாமை வீட்டுத் தோட்டத்தில் பாத்திக் கட்டி... தண்ணீ பாய்ச்சி, பொழுது சாய்ந்த நேரத்தில் களைப்போடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான், பெருமா சாமி.
பதை பதைப்போடு வந்த பக்கத்து வீட்டு செல்லப்பா, அவனை வழி மறித்து, ஊர்க்கிணத்தில் விழுந்து எயக்கியம்மாள் இறந்து கிடந்த செய்தியை சொன்னான்.
'குடும்பத் தகராறு - இளம்பெண் தற்கொலை' காவல்துறையின் விசாரணை முடிவு பெற்றது.
பிணப் பரிசோதனை முடித்து எயக்கியம்மாள் உடலை அவனிடம் ஒப்படைத்தபோது, அங்கிருந்த காவலர் ஒருவர், 'நல்லா விசாரிச்சுப் பாரு... இது தற்கொலைன்னு எனக்குத் தெரியல...' என்றார்.
அன்று இரவிலிருந்து தான் பெருமா சாமி, 'குவாட்டர்' கோவிந்தனாக உருவெடுக்கத் துவங்கினான்.
'காலையில நாட்டாமை தோட்டத்து வேலைக்கு புறப்பட்டபோது கூட, சிரிச்சுக்கிட்டுதானே வழி அனுப்புச்சு. அதுக்கடுத்து என்ன நடந்துச்சு?' எப்படி யோசிச்சாலும் அவனால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
போஸ்ட்மார்ட்டம் நடந்த இடத்தில் இருந்த காவலரைப் சந்தித்து, 'சாமி, என் எயக்கியம்மாவை யாரோ கொலை செஞ்சிருக்கும் அறிகுறியிருக்குன்னு என் மனசுல படுது...' என்றான்.
'சந்தேகத்தை காட்டிக்காம ஊருக்குள்ள ஒவ்வொருத்தர்கிட்டேயும் பேச்சுக் கொடுத்துப் பாரு. எங்காவது ஒரு மூலையில ஒனக்கு தகவல் கிடைக்கலாம். அப்படி கிடச்சா, உடனே என்கிட்ட வந்து சொல்லு. இந்தக் கேசை எப்படி கொண்டு போறேன்னு பாரு...' என்றார், அவர்.
அன்றிலிருந்து தான் ஊர்க்காரர்களிடம் அதிகமாக வாய் கொடுக்க ஆரம்பித்தான், பெருமா சாமி.
போதையில பேச்சுக் கொடுத்தா பெருசா எடுத்துக்க மாட்டாங்க என்பது, அவன் கையில் எடுத்திருக்கும், 'டெக்னிக்!'
இந்த உள்ளடி ரகசியம் தெரியாத மக்கள் தான், பெருமா சாமியைக் கண்டதும், ஓடி ஒளிந்தனர்.
செட்டியார் கடைக்கு தண்ணீ எடுத்துக் கொடுத்ததும், காசை வாங்கிய பின் அங்கிருந்து உடனே இடத்தை காலி செய்து விடும் பெருமா சாமி, இப்போது, இரண்டு மூணு மணி நேரமுன்னு அங்கேயே காத்து கிடக்கத் துவங்கினான்.
கட்டுனவ கண்கலங்க வெச்சுட்டு போயிட்டதால், பய இப்படி கிடப்பதாக, ஊர்க்காரர்கள் நினைத்தனர்.
டீ கடைக்கு வருபவர் பேசும் சொற்களை காதுக்குள் திணித்துக் கொண்டான். எங்கிருந்தாவது ஒரு தகவல் வரும் என்ற நம்பிக்கை. வரவேண்டும் என்ற அவனது வேண்டுகோள். நாட்கள் விடிவதும், அடைவதுமாய் கழிந்து கொண்டிருந்தது.
அன்று சாயங்காலம் கருக்கலுக்கு முன், பெருமா சாமி வேலை செய்து கொண்டிருந்த நாட்டாமை தோட்டத்துக்கு, பாட்டில், பொட்டலம், மல்லிகைப் பூன்னு சகல சம்பத்தோடும் வந்து சேர்ந்தான், நாட்டாமையின் கைத்தடி, ரெங்கன்.
நாட்டாமைக்கு, 'ஆல் இன்' அழகு சுந்தரம் இவன் தான்.
'எல சாமி... வேலை முடிஞ்சுதுன்னா வெரச நடையைக் கட்டு. இன்னிக்கு நாட்டாமை, தோட்டத்துல தங்கப் போறாக. ராப்பொழுது இங்க தான்...' குறிப்புணர்த்தினான், ரெங்கன்.
நாட்டாமை, தோட்டத்துக்கு வராருன்னா அப்படியும் இப்படியும் இருப்பார் என்ற ஊரறிஞ்ச ரகசியத்தை தெரிஞ்சு வெச்சிருப்பவன், பெருமா சாமி.
'பெரிய இடத்து சமாசாரம்; நமக்கெதுக்கு பொல்லாப்பு...' என்று அங்கிருந்து நடையைக் கட்டினான், பெருமா சாமி.
அவன் போய்க் கொண்டிருப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான், ரெங்கன். மனதில் எதோ ஒரு கழிவிரக்கம் இருப்பதுபோல், அவனது முகம் காட்டிக் கொண்டிருந்தது.
இரவு-
சுயமாக நிற்க முடியாத அளவில் கால்கள் பின்னி நடைபோட, வாய் குழறி தட்டுத் தடுமாறி வந்து கொண்டிருந்தான், பெருமா சாமி.
இடுப்பிலிருக்கும் குழந்தைக்கு, நிலா காட்டி சோறுாட்டிக் கொண்டிருந்த இரண்டொரு அம்மணிகள், பெருமா சாமி வருவதைக் கண்டதும், அவசர அவசரமாக தங்கள் வீட்டுக்குள் புகுந்து, கதவை சாத்தத் துவங்கினர். அந்த போதையிலும், இதை கவனிக்கத் தவறவில்லை, பெருமா சாமி.
'ஹூம்... அந்த பயம் இருக்கணும்...' என்று சொல்லியபடி அந்த இடத்தை கடந்தான்.
'எலா... இன்னும் வீடு போய் சேரலியா?'
சத்தம் வந்த திசையை பார்த்தான், பெருமா சாமி.
'எப்படியிருந்த பய, பணியலன்னதும் பலியாடாக்கிட்டாரே... அவரு குடும்பத்துக்கு ஒண்ணுமில்ல, இந்த பாவிப் பயதான் இப்படி குடிகாரனா அலைஞ்சு திரியுறான்...' தன்னையும் அறியாமல் ரெங்கனின் வாயிலிருந்து வார்த்தைகள் சற்று பலமாகவே வந்தது.
'யாருண்ணே...'
பெருமா சாமியின் கேள்வியால் சில விநாடி தடுமாறிப் போன ரெங்கன், சுதாரித்து, 'ஒண்ணுமில்ல... நான் எதையோ நெனச்சு எதையோ புலம்பிக்கிட்டிருக்கேன். ஒழுங்கா வீடு போய் சேரு. காலங்கார்த்தால அய்யா தோட்டத்துல தென்னங்குலையெல்லாம் வெட்ட வேண்டிருக்கு...' என்று எச்சரிப்பது போல் சொல்லி சமாளித்தான்.
வெள்ளென தோட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் பார்வையில், தென்னை மரத்தடியில் கட்டில் போட்டு படுத்திருந்த நாட்டாமை மீது, காற்றில் சில காய்கள் உதிர்ந்து விழுந்து கிடந்த காட்சி தென்பட்டது. அப்படி விழுந்திருக்கும் காய்கள், மூஞ்சி முகரையில் பட்டு, நாட்டாமை போய் சேர்ந்து விட்ட செய்தி பரவி, தோட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர், ஊர் மக்கள்.
பெருமா சாமி மட்டும், செட்டியார் கடைக்கு தண்ணீர் எடுத்து நிரப்பும் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தான்.
ந. திருனேலியான்