அப்பாவின் மஞ்சள் பை!
இது பணப்பை அல்ல
ஏழைகளுக்கு உதவும்
கர்ண பை
அப்பாவின் ஆன்மாவுடன் கலந்த
புண்ணிய பை!
எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
துவைத்து துவைத்து மெருகு குறைந்தாலும்
இறுதி வரை அப்பாவுடன்
பயணித்த மனிதநேய பை!
மூக்குக்கண்ணாடிக்கும், கவிதைத்தாள்களுக்கும்
அடைக்கலம் தரவில்லை
பேருந்தின் இருக்கையை முன்பதிவு
செய்த அதிசய பை!
அமெரிக்க டூரிஸ்டர் - அரிஸ்டோகிராட் - வி.ஐ.பி.,
விதவிதமான, 'பிராண்டுகள்' மார்க்கெட்டில்
தனித்து நிற்பதென்னவோ மஞ்சப் பையே!
சாயம் மங்கினாலும்
காதறுந்தாலும் அப்பாவால்
புத்துணர்வு பெற்று
இறுதி வரை உற்ற தோழனாய்
பவனி வந்ததும் மஞ்சப்பையே!
பூட்டு - சாவி வேண்டாம்
மூச்சு முட்டும், 'ஜிப்' தேவையில்லை
சக மனிதரின் நேர்மையை
பறைசாற்றும் பாசமிகு பை!
மஞ்சள் பை - அப்பாவின் மூன்றாவது கை
கிராமத்து அப்பாக்களின் நம்பிக்கை
எளிமையின் வலிமை காட்டும் தும்பிக்கை!
உலகம் போற்றும் தமிழனின்
முத்திரை பதிக்கும்
கலாசார பை!
மறு பிறவி எடுத்து வந்த மஞ்ச பையே
அப்பாவையும் மீண்டும் அழைத்து வா...
மறதி நோய் பாதித்த மனைவியும்
மறக்காத புத்திரர்களும்
அவருக்காக காத்திருக்கிறோம்!
மருத்துவர் ஜெ.சங்குமணி,
மதுரை.