தித்திக்கும் தைப்பொங்கல் என்றாலே திகட்டாத சர்க்கரை பொங்கல், கரும்பு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வயலில் வாழும் உழவர்கள் மட்டுமின்றி அரண்மனை வாசம் செய்யும் அரச குலத்தினரும் அக்காலத்தில் விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.
அந்த காலத்தில் அரண்மனையில் பொங்கல் விழா எப்படி கொண்டாடப்பட்டது என நடிகை ரஞ்சனா நாச்சியாரிடம் கேட்டோம்.
யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?
ராமநாதபுரம் அரண்மனை ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசு தான் நடிகைரஞ்சனா நாச்சியார். எம்.டெக்., சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் முதன் முதலில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
பின்னர் 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ஏமாளி, ஹீரோ, இரும்புத்திரை, பில்லா பாண்டி, வேட்டை நாய், கிப் ஆப் தமிழாஉட்பட 15 படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இனி அவரே தொடர்கிறார்...
எனது தாய் மீனவர்த்தினி நாச்சியார் 67.
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ராஜா பாஸ்கர சேதுபதியின் மகன் பாண்டி மகாராஜாவின் பேத்தியாக பிறந்து ராமநாதபுரம் அரண்மனையில் வளர்ந்தவர்.
எங்கள் குடும்பத்தில் நாச்சியார் என்ற பெயர் எல்லோருக்கும் இணைந்திருக்கும். அதன்படி என்னோடும் நாச்சியார் இணைந்தது.
தமிழர்களின் வீரத் திருவிழா, உழவர்களின் நன்றி திருவிழா பொங்கல் பண்டிகை. இதனை அரண்மனையில் ராஜாக்கள் விமரிசையாக கொண்டாடியுள்ளனர். ராமநாதபுரம் அரண்மனையில் பொங்கல் அன்று அரண்மனை அந்தப்புரத்தில் நடுப்பகுதியில்(உள் முற்றம்) 9 அல்லது 11 பானை என ஒற்றை இலக்கம் வரும் வகையில் பொங்கலிடுவார்கள்.
சூரிய உதயத்திற்கு முன் பொங்கலிட்டு பொங்கும் போது குலவையிட்டு, சங்கநாதம் எழுப்பப்படும். முக்கியமாக பால் பொங்கும் நேரத்தில் மன்னர்கள் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சி தெரிவிப்பார்களாம். அந்த சத்தம் தான் அரண்மனையில் பொங்கல் வைத்தற்கான அடையாளம்.
அதன்பின் அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் பொங்கலிடுவார்கள். ராஜா சொத்துக்களில் இருந்து விளைந்த நெல் 1000 மூடைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அதனை அரண்மனை வாசிகள், வேலை பார்ப்பவர்கள்,பொதுமக்களுக்கு வழங்குவர். அதோடு புத்தாடைகள் வழங்கப்படும்.
மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். அதன் பின் ராஜா மக்களை சந்திக்கும் நிகழ்வு தற்போதுள்ள ராமலிங்க விலாசம் முன்பு உள் மைதானத்தில்நடக்கும்.
அப்போது ஒயிலாட்டம், மயிலாட்டம், குத்துச்சண்டை, சிலம்பாட்டம், சேவல் சண்டை, கும்மி, தேவராட்டம் என நடக்கும். இந்த நிகழ்வின் போது மாப்பிள்ளை கல் துாக்குவது முக்கியமாக நடக்கும். அதில் வெற்றி பெறுவோருக்கு ராஜா பரிசு வழங்குவார். மாப்பிள்ளை கல்லை துாக்கி ராஜாவிடம் பரிசு பெற அப்போதெல்லாம் கடும் போட்டி இருக்குமாம். இப்போது அந்த 'மாப்பிள்ளை கல்லே' இல்லாமல் போனது. காணும் பொங்கல் அன்று உறவினர்கள், திருமணமாகி வெளியூர் சென்றவர்களை வரவழைத்து அசைவ உணவு விருந்து வழங்கப்படும். அரிசி வழங்குவது, நெல்மூடைகள் வழங்குவது அப்போது இருந்தது.
இன்று அரண்மனையில் 9 பானை, 11 பானையில் பொங்கலிடுவது இல்லை. துப்பாக்கி சுடுவது இல்லை. அதே நேரம் குலவை, சங்கநாதம் எழுப்பப்படுகிறது. இன்றும் அரண்மனையில் வேலை செய்பவர்கள், சுற்றி உள்ளவர்களுக்கு புத்தாடை, அரிசி, பருப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது.
அன்று 9, 11 என ராணிகள் இருந்ததால் தான் அப்படி பானைகள் வைத்துள்ளனர். அதே நேரம் அரண்மனைக்கு வெளியே ஏராளமான பொங்கல் வைப்பார்கள். இப்போதும் 100 பானைகள் வரை பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
-எஸ்.பழனிச்சாமி