மலையும் மலை சார்ந்த கிராமம், கழுகாசலமூர்த்தியாக குடவரையில் முருகப்பெருமான், தென்னகத்தின் எல்லோரா வெட்டுவான் கோயில், நேர்த்தியாக செதுக்கிய சமண சிற்பங்கள், இதயத்தில் இறங்கும் இளம் தென்றல், பாசம் காட்டும் கிராமத்தினர்... என 'தொன்மையில் தொலைந்திருக்க ஒரு தொல்லியல் தேசமாக' திகழும் துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு நம்மை அழைத்து செல்கிறார் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் மதுரை ஆசைதம்பி.
குடவரை கழுகாசலமூர்த்தி கோயில் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகு மலையில் கழுகாசலமூர்த்தி குடவரை கோயில் பிரபலம். கழுகாசலமூர்த்தி என்ற சுப்பிர மணியராக மயில் வாகனத்தில் வீற்றுள்ள முருகப்பெருமான் உடன் வள்ளி, தெய்வானை உள்ளனர். கருவறை மலை பாறைக்குள் இருப்பதால் மலையே கோபுரமாக திகழ்கிறது. வனத்தில் இருந்த சீதையை கவர வந்த ராவணன், தடுத்த ஜடாயுவின் இறக்கையை வெட்டினான்.
சீதையின் குரல் கேட்டு வந்த ராம, லட்சுமணன் ரத்த காயத்துடன் ஜடாயுவை காண பின் அது இறந்தது. ராமரே சடங்கு செய்தார். ஜடாயு சகோதரரும், கழுகு முனிவருமான சம்பாதி சடங்கு செய்ய முடியவில்லை என ராமரிடம் வருந்தினார்.
'தென்னாட்டில் 300 அடி உயர மலை குகையில் உள்ள முருகனை வணங்கி பாவம் போக்கு' என சம்பாதியிடம் ராமர் கூறினார். சம்பாதி கழுகுமலையில் தங்கி 1 முகம், 6 கை கொண்ட முருகனை வணங்கி பாவம் போக்கினார். இதனால் 'கழுகுமலை' என பெயர் பெற்றது. தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் சிறப்பாக நடக்கும்.
தென்னக எல்லோரோ
கழுகுமலை மேல் கீழ்நோக்கி 25 அடி ஆழம் பாறையை சதுரமாக குடைந்து 8 ம் நுாற்றாண்டில் முற்கால பாண்டியர்கள் கலை பாணியில் கட்டிய வெட்டுவான் கோயில் எல்லோரா கைலாசநாதர் கோயில் போலவே உள்ளதால் தென்னகத்தின் எல்லோரா' என்பர். முற்றுப்பெறாத இக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம் உள்ளன. உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, மத்தளம் வாசிக்கும் தட்சிணா மூர்த்தி, விமானம் தாங்கும் பூதகணங்கள் ஆகிய சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. விமான மூலைகளில் நந்தி, யாழி வரிசை, கபோதகம், கொடுங்கை, கந்தர்வர்கள் தலையுடன் கூடிய கூடுகள் என கலையழகு சிற்பங்கள் காண கண் கோடி வேண்டும்.
ருத்ராட்ச லிங்கமும் சுழலும் துாணும் கோயில் நுழைவாயிலின் சில மீட்டர் துாரத்தில் மேல் தளத்தில் ஒரு லட்சம் ருத்ராட்சங்களில் வடிவமைத்த சிவலிங்கம் உள்ளது. கொடிமரம் அருகே அரை வட்டமாக மேற்புறம் பாதி சுழலும் கல் துாண் உள்ளது.
கீழ்புற துாணில் மேற்புற சுழலும் கல் பொருத்திய தொழில்நுட்பம் அதிசயமானது. மீன்கள் துள்ளும் தெப்பக்குளத்தில் உள்ள பசு சிற்பத்தின் வாய் வழி மழைநீர் விழுவது அழகு. மலை உச்சியில் உள்ள ஒரு துளையில் எலுமிச்சை பழம் போட்டால் அது நேராக கருவறையில் வந்து விழும் என்றும், திருவிழா பூஜை நேரம் தெப்பக்குளத்தில் கழுகு சுற்றி வரும் என்றும் பக்தர்கள் கூறுவதுண்டு.
சமண சிற்பங்களும் பெண்கள் பல்கலையும்
தமிழகத்தில் சமணர்களின் முக்கிய பள்ளிகளில் ஒன்றான கழுகுமலையில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் உள்ளிட்ட 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்களின் கீழே உருவாக்கியவர்கள் பெயர் வட்டெழுத்துகளில் பொறிக்கப் பட்டுள்ளன. 'ஏனாதி', 'காவிதி' போன்ற சிறப்பு பெயர் பெற்றவர்களும் சிற்பங்கள் செதுக்கியுள்ளனர். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக மலையில் பெண்களுக்காகவே ஒரு பல்கலையை சமணர்கள் நடத்தி இருக்கிறார்கள் என்பது சிறப்பு.
எப்படி செல்வது
மதுரை - கோவில்பட்டி: 104 கி.மீ., அங்கிருந்து கழுகுமலை 22 கி.மீ., உணவருந்த ஓட்டல்கள் உண்டு.
தங்கும் வசதி: கோவில்பட்டியில்
- த.ஸ்ரீனிவாசன்
எம்.கண்ணன்