விவசாயிகள் சூரியனை வணங்கி பொங்கல் கொண்டாடுவர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வித்தியாசமாக, கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர் மீனவர்கள். இதற்கு சப்த கன்னியர் பொங்கல் என்று பெயர். சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, எமன் ஆகியோரின் அம்சமாக பிறந்தவர்கள் சப்த கன்னியர்கள். அசுரர்களை அழிக்க இத்தேவியர்கள் உதவி புரிந்தனர் என்று புராணம் கூறுகிறது.
பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த கன்னியர்களை வணங்குவதால் கல்வி, சாந்தம், குழந்தை வரம், செல்வ வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தடைகள், கடன் பிரச்னை நீங்கி, ஐஸ்வரியங்களையும் பெற்று நலமுடன் வாழலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தில் கடலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மீனவர்கள், கடல் தொழில் சிறக்க கடல் அன்னையை வழிபட சப்த கன்னிகளுக்கு பொங்கல் வைக்கின்றனர்.
9 முதல் 12 வயது வரை உள்ள 7 சிறுமியர்களை சப்த கன்னியர்களாக தேர்வு செய்து வழிபடுகின்றனர். வழிபாட்டில் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரக செம்புகளோடு, ஏழு வாழை இலையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கின்றனர்.
மோர்ப்பண்ணை கிராம தலைவர் இ.மாடம்புறான் 58, கூறுகையில், 'பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, கிராம கூட்டத்தில் சப்தகன்னிகளான 7 சிறுமிகளை தேர்வு செய்வோம். அவர்களுக்கு பொங்கல் வைப்பது குறித்து பெண்கள் பயிற்சி அளிப்பர். சிறுமிகளும், பயபக்தியுடன் விரதமிருந்து, கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பொருட்களை பயன்படுத்தி பொங்கல் வைத்து படையல் செய்வர்' என்றார்.
முன்னாள் கிராம தலைவர் துரை.பாலன் 48, கூறுகையில், 'ரண பத்திரகாளி கோயிலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கடலுக்கு சென்று நீராடுவோம். சிறிய பாய்மர படகில் பூஜை பொருட்கள் வைத்து நெய்விளக்கேற்றி கடல்நீரில் படகை உலா விடுவோம்.
இந்த கடல் அன்னை வழிபாட்டின் மூலம் தொழில் சிறக்கும். கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக பொங்கலன்று இதை தொன்று தொட்டு கடைபிடித்து வருகிறோம்' என்றார்.
-கே.கார்த்திகை ராஜா