'மீன் பொள்ளிச்சது' என்பது கேரளாவில் மீனில் தயார் செய்யும் வித்தியாசமான மெனு.
மீனின் இறைச்சி வாசனை வாழை இலையோடு சேரும் போது கொஞ்சம் சுவை கூடி பிரமிக்க வைக்கும் என்கிறார் மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த கீதா. 'மீன் பொள்ளிச்சது' செய்முறையை கீதா விளக்குகிறார்...
பெரிய வாவல் மீன் வாங்கும் போதே கடைக்காரர்களிடம் நடுநடுவே கீறி விட்டு வாங்கினால் மீனுக்குள் மசாலா நன்றாக இறங்கும். 2 ஸ்பூன் மிளகாய்த்துாள், கொஞ்சம் மஞ்சள் துாள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் பூண்டு விழுது, 2 ஸ்பூன் எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மசாலா கலவை தயாரிக்க வேண்டும்.
மீனுடன் உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்த பின் கழுவி மசாலா கலவையை பூச வேண்டும். மசாலாவில் 20 நிமிடம் ஊறிய பின் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி அரை பதத்திற்கு மீனை இருபுறமும் பொறித்து எடுக்கவும்.அடுத்ததாக மீன் பொளிச்சது மசாலா தயாரிக்க வேண்டும். 3 வெங்காயம், 2 தக்காளி, 2 பச்சைமிளகாயை பொடிதாக வெட்ட வேண்டும். தலா ஒரு ஸ்பூன் பூண்டு விழுது, மிளகாய்த்துாள், மல்லித்துாள், மிளகுத்துாள், சீரகம், அரை ஸ்பூன் மஞ்சள் துாள், கரம்மசாலா, 100 மில்லி கெட்டி தேங்காய்ப்பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய் ஒரு கரண்டி, உப்பு தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு விழுது ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள்துாள், மிளகாய் துாள், கரம்மசாலா, மல்லித்துாள் சேர்த்து வதக்கி தக்காளியை சேர்க்கவேண்டும்.
அனைத்தும் நன்றாக மசிந்ததும் தேங்காய்ப்பால், மிளகு தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரிந்ததும் உப்பு சேர்க்க வேண்டும். மசாலா கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி விடலாம்.
வாழை இலையின் இரு புறமும் தீயில் வாட்டி இளகியதும் வேகவைத்த மசாலாவை மீன் வடிவத்திற்கே தடவி அதன்மேல் பொறித்த மீனை வைத்து மீனின் மேல்புறமும் மசாலா தடவ வேண்டும்.
இலையை நான்காக மடித்து நுாலில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து இருபுறமும் தலா ஏழு நிமிடம் வேக விட வேண்டும். வாழை இலையின் மணமும் மசாலாவின் மணமும் மீனுக்குள் ஊடுருவி ருசியின் புதிய அத்தியாயத்தை நமக்குள் ஏற்படுத்தும் என்றார்.