கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு, எந்த தொற்று நோய்க்கும் எதிரான தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு போடுவதில்லை; கொரோனா தடுப்பூசியும் அப்படித் தான். ஆனால், கர்ப்பம் உறுதியான மூன்று மாதங்களுக்கு பின், அவசியம் எல்லா கர்ப்பிணிகளும் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
குழந்தை பெற்ற பின், உடனடியாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட தாயிடம் இருந்து, தாய்ப்பால் வழியாக நோய் எதிர்ப்பு அணுக்கள் குழந்தைக்கு சென்றிருப்பது, சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே எந்தவித தயக்கமும் இல்லாமல், தடுப்பூசி செலுத்திய பின், தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம்.
இதுவரையிலும் கொரோனா தடுப்பூசி போடாத இளம்பெண்கள், உடனடியாக போட்டுக் கொள்ளலாம். இதில் எந்தவித பக்கவிளைவும், பாதிப்பும் இல்லை என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனால், கர்ப்பிணிகளும், பாலுாட்டும் பெண்களும் தயக்கம் இல்லாமல், இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும்.
ஒமைக்ரான் பரவலில், தடுப்பூசி போடாதவர்கள் தான் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தை பெற்ற இளம்பெண்கள் தடுப்பூசி போடுவதால், அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்கள் மூலம் குழந்தைக்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
டாக்டர் கீதா ஹரிபிரியா,
மகப்பேறு மருத்துவர்,
பிரசாந்த் மருத்துவமனை, சென்னை.