கால்நடைகளை வளர்ப்போர் அவற்றின் உபாதைகளை முதலிலேயே கண்காணித்தால் நோய் தீவிரமடைவதற்கு முன் அவற்றை குணப்படுத்தி மீட்கலாம்.
காலை, மாலை தீவனம் அளிக்கும் பொழுது 5 நிமிடங்கள் அவற்றின் நடவடிக்கைகளை கவனித்தாலே போதும். தீவனம் அளிக்கும் பொழுது அசை போடாமை, விழுங்குவதில் மாற்றம், மெதுவாக அசை போடுதல், ஒரு பக்கமாக அசை போடுதல், வாயில் தீவனத்தை வைத்துக் கொண்டே இருத்தல், வாந்தி எடுக்க முயற்சி செய்தல் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
வாய்க்கட்டு உலர்ந்து இருத்தல், கண் இமைகளில் வீக்கம், நாசித் துவாரம் விரிந்திருத்தல், கண்களில் நீர் வடிதல், மூக்கில் இருந்து நீர் அல்லது சளி வடிதல், உமிழ்நீர் அதிகமாக வடிதல், தலையில் வீக்கம், தாடை வீக்கத்தை கவனிக்கலாம். வயிறு பெருத்தல், உப்புசம், குடலிறக்கம், வீக்கம், ஒரு பக்கம் மட்டும் வீக்கம், தோல் காய்ந்து இருத்தல், நிணநீர் முடிச்சு வீக்கம் போன்ற மாற்றங்களை கவனிக்க வேண்டும்.
கறவை மடி பஞ்சு போன்று மிருதுவாகவும். இளஞ்சிவப்பு நிறத்துடனும் இருக்கும். அதிக கூடாகவும், நன்கு சிவந்தும், பால் கறக்க அனுமதிக்காமலும் இருந்தால் மடி நோயின் ஆரம்ப அறிகுறி. பால் நீர்த்தோ, திரிதிரியாகவோ, ரத்தம் இல்லது சீழ் கலந்தோ இருந்தால் மடி நோய் உள்ளதற்கான அறிகுறி. உடனடியாக கால்நடை டாக்டரை அணுகுவது நல்லது. இனப்பெருக்க உறுப்புகளில் சீழ், ரத்தம் வடிதல், வீக்கம், சினைத் தருணத்தில் மட்டுமின்றி தினமும் கண்ணாடி போன்ற திரவம் வடிந்தாலும் சிகிச்சை அவசியம்.
வித்தியாசமாக மூச்சிரைத்தல், மூச்சுத் திணறல், மூச்சு விடும் பொழுது சத்தம் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். சிறுநீர் போகாமல் இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைந்த அளவு கழித்தல், நிறம் மாறிய சிறுநீர் கழித்தால் உடனடி கவனிப்பு தேவை. சாணம் இடும் போது ஆங்காங்கு சிறுசிறு குழிகளாக சாணத்தின் வட்ட வடிவம் முழுவதும் காணப்பட்டால், மாடுகளில் செரிமானமின்மை ஏற்பட்டுள்ளதென அர்த்தம். கழிச்சலின் போது நீர்த்தன்மையுடனும் ஆசன வாயை சுற்றியும் மடிக்கும் இடையேயுள்ள பகுதியில் சாணம் அதிகமாக ஒட்டியிருக்கும்.
பால் கறக்க வரும் போது எழுந்திருக்காமல் சோர்ந்து படுத்திருந்தால் மருத்துவ உதவி தேவைப்படுகிறது என அர்த்தம். தள்ளாடும் நடை, கால்களை தூக்கிக் கொண்டு இருத்தல், சாய்த்து நடப்பதை கவனிக்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.
பேராசிரியர் உமாராணி
கால்நடை சிகிச்சை வளாகம்
கால்நடை மருத்துவ கல்லுாரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தேனி.
kamleshharini@yahoo.com