விதைகள் சட்டம் 1966 பிரிவு 5ன் படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் மட்டுமே சான்றுவிதை உற்பத்தி செய்ய இயலும். எல்லா பயிர்களிலும் சாத்தியமில்லை.
விதை உற்பத்தி செய்யப்பட உள்ள நிலத்தில் ஏற்கனவே வேறு பயிர் இருந்தால் தண்ணீர் பாய்ச்சி செடிகள் வளர்ந்தபின் உழவு செய்து அழித்த பின் விதைக்க வேண்டும். வீரிய ஒட்டுரகங்களில் ஒரே விகிதத்தில் வயல் முழுவதும் ஆண், பெண் செடிகளை அடையாளப்படுத்தி விதைக்க வேண்டும்.
விதைத்த பின் 35 நாட்களுக்குள் அல்லது பயிர் பூப்பதற்கு முன் தங்களது பகுதியில் உள்ள விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதைத்த அறிக்கை பதிவு செய்யவேண்டும். நெல்லுக்கு மட்டும் பயிர் பூப்பதற்கு 5 நாட்கள் முன்பு வரை பதிவு செய்யலாம். ஒவ்வொரு விதைப்பு அறிக்கைக்கும் ரூ.25 பதிவு கட்டணம் உண்டு. ஒரு விதைப்பிலும் அதிகபட்சமாக 25 ஏக்கர் வரை பதியலாம். விதைப் பண்ணையின் இருவேறு பகுதிகள் 50 மீட்டருக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப் பட்டாலோ தனித்தனி அறிக்கை தேவைப்படும்.
வயலாய்வின் பொது விதைச்சான்று அலுவலர் முதலில் விதைப் பண்ணை பரப்பை ஆய்வு செய்வார். பதிவு செய்த பரப்பை விட விதைப் பண்ணை பரப்பு வீரிய ஒட்டு ரக மற்றும் தாயாதி விதைகளில் 10 சதவீம் வரையிலும், இதர இனங்களில் 20 சதவீதம் வரையிலும் அதிகமாக இருக்கலாம். கூடுதல் பரப்புக்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். விதை ஆதாரம் சரியானதா என ஆராய்ந்து விதைச்சான்று அலுவலர் உறுதி செய்வார். தவறென்றால் தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்படும்.
சான்று நிலையில் மட்டும் விதைப்பயிருக்கு இடையூறு இல்லாத நிலையில் ஊடுபயிர் சாகுபடி அனுமதிக்கலாம். வயல் தரம் தேறிய நிலையில் இறுதி வயலாய்வில் மகசூல் கணிப்பு மேற்கொண்டு அறுவடைக்கு ஆய்வாளர் அனுமதிப்பார். இரு மறு ஆய்வுகள் அனுமதிக்கப்படும்.
விதைப்பண்ணை அமைக்க வேண்டுமெனில் அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களிலிருந்து சான்று பெற்ற விதைகளை வாங்க வேண்டும். அதிக விதை நெல் வாங்கும் போது அனைத்து மூடைகளும் ஒரே ரகமாக உள்ளனவா என கவனிக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேல் ரகங்கள் வாங்கினால் தனியே வைத்து பயன்படுத்தலாம். வெவ்வெறு நாட்கள் மற்றும் இடங்களில் நாற்று விடலாம்.
விதை உற்பத்தி பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரகம் மற்றும் கலப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி கலவன்களை அகற்ற செய்ய வேண்டும். ரகங்களை தனித்தனியாக அறுவடை செய்து கதிரடித்து காயவைக்க வேண்டும். சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கப்படும் போது முதலில் வெளிவரும் நெல் விதைகளில் ஒரு மூடையினை விதைக்காக பயன்படுத்தாமல் கழிவு நெல்லுடன் சேர்க்க வேண்டும். மூடைகளின் மேல் ரகத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.
சுஜாதா,
பேராசிரியர் விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை
வேளாண்மைக் கல்லுாரி
மதுரை