சென்னை, அயனாவரம், மைலப்ப தெரு, மாநகராட்சி பள்ளியில், 1963ல், 3ம் வகுப்பு படித்த போது, பள்ளிக்கு எதிரே சிறிய வீட்டில் குடி இருந்தோம்.
வகுப்பு ஆசிரியை கிருஷ்ணவேணி துணிச்சலானவர்; கண்டிப்புடன் இருப்பார். அவரிடம் பேசவே பயப்படுவர். எதிர் வீட்டில் வசித்ததால், பள்ளி நேரத்துக்கு பின், என் பெற்றோரிடம் நன்கு பழகிவந்தார்.
ஒரு நாள், மதிய உணவு இடைவேளையில், 'உன் அம்மாவிடம் சொல்லி, பொரியலோ, ஊறுகாயோ வாங்கி வா...' என்று கூறினார். ஓடிச் சென்று கிண்ணத்தில் ஊறுகாய் வாங்கி கொடுத்தேன். அன்று பிற்பகல் அவரது வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வீட்டு பாடத்தை சோதித்தார்.
நான் சிறு தவறு செய்திருந்ததை கவனித்தவர், 'ஐந்து நிமிடம் வகுப்புக்கு வெளியில் நில்...' என, தண்டனை கொடுத்தார். தண்டனை முடிந்ததும், 'ஊறுகாய் வாங்கி வரச் சொன்னேன் என்பதற்காக, உன் விருப்பத்துக்கு விட்டு விடுவேன் என நினைக்காதே... படிப்பு வேறு... உதவி வேறு...' என கண்டிப்புடன் கூறினார்.
என் வயது, 66; பொதுத்துறை வங்கியில், உயர் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். 'எந்த பதவி வகித்தாலும், அதற்கேற்ப கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்; வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டக் கூடாது' என்பதை அந்த ஆசிரியை செயலில் இருந்து கற்றேன்.
மறக்க முடியாத அந்த முதல் பாடம், வாழ்வு பயணத்தில் பயன்படுகிறது!
- வி.ராஜேந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 94440 73849