முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடந்த டைனோசர் உடல் பகுதியில், டைனோ குட்டியை உருவாக்கிய விஞ்ஞானி யோகிபாபு, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார். அதை பள்ளிக்கு எடுத்து சென்ற போது ஒரு மாணவன் காம்பசால் குத்திவிட்டான். இனி -
வகுப்பறையில் டைனோவின் அலறல் கேட்டு அதிர்ச்சியில் திரும்பினான் சந்திரஜெயன்.
அதை குத்தியவன் வைத்திருந்த காம்பஸ் நுனியில் ரத்தம் வழிந்தது.
பதபதைப்புடன் டைனோவை கவனமாக துாக்கினான் சந்திரஜெயன்.
அதன் முதுகுப் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டியது.
உள்ளங்கையால், ரத்தத்தை நிறுத்த முயன்றான்.
பதறியபடி வந்த ஆசிரியை, குத்திய மாணவனை கண்டித்தார்.
''என்ன காரியம்டா செய்த...'' என்றபடி கைப்பையிலிருந்து, 'வாட்டர் புரூப் பான்ட் எய்டை' எடுத்தார். அதை உரித்து, காயத்தின் மேல ஒட்டினார். ரத்தம் வழிவது நின்றது.
மிரண்டிருந்த டைனோ, இயல்பு நிலைக்கு திரும்பியது.
''கோபம் இருந்தா, என்னை குத்த வேண்டியது தானே; டைனோவை எதுக்கு குத்துன...'' என்று அமைதியாக கேட்டான் சந்திரஜெயன்.
தலை குனிந்தான் அந்த மாணவன்.
''டைனோவை ஒரு கால்நடை மருத்துவரிடம் காண்பி. காயம் ஆறவும், கிருமி தாக்காம இருக்கவும், ஊசி போடுவார்...'' என்றார் ஆசிரியை.
டைனோவை துாக்கி, கால்நடை மருத்துவமனைக்கு ஓடினான் சந்திரஜெயன்.
பைக்குள் இருக்கும் மிருகம் எது என அறியாமல், ''என்னப்பா... உன் வளர்ப்பு பூனைக்கு உடம்பு சரியில்லையா...'' என்றார் கால்நடை மருத்துவர்.
ஒன்றும் பேசாமல் டைனோவை எடுத்து வெளியே விட்டான்.
அதிர்ந்து போனார் மருத்துவர்.
''என்னப்பா இது... சின்னதா செய்த டைனோசர் மாதிரில்ல இருக்கு; வெளியில எடுத்திட்டு போப்பா...''
''பயப்படாதீங்க... இது என் வளர்ப்பு மிருகம் டைனோ; என் விஞ்ஞானி மாமா பரிசளித்தது. இன்னைக்கி வகுப்புக்கு எடுத்துட்டு போயிருந்தேன்; ஒரு மாணவன் காம்பசை வெச்சு குத்திட்டான்...''
தயங்கியபடி அதை நெருங்கினார் மருத்துவர்.
லேசாக உறுமியது.
''பார்த்தியா... உறுமுறதே... என் விரலை கடிச்சு துப்புற மாதிரி இருக்கு...''
''டைனோ... இவர் கிட்ட விளையாடாதே... உனக்கு மருத்துவம் பார்க்க போறாரு...''
சாந்தமானது டைனோ; சிரிப்பது போல முகத்தை வைத்துக்கொண்டது.
''பாரு... என் மூஞ்சிய மாதிரியே, அது மூஞ்சிய வெச்சு, வலிப்பு காட்டுது...''
''டாக்டர்... அது மூஞ்சியே அப்படித் தான்; சமாதானமா பாக்குது... கவனியுங்க...''
''அப்படியா சொல்ற...''
டைனோவை ஆழமாக பார்த்தார் மருத்துவர்.
நாக்கை சுழற்றி கண்ணடித்தது டைனோ.
''ஏ அப்பா... கண்ணடிக்குது...'' என்றபடி பேன்ட் எய்டை உரித்தார்; உரிய மருந்திட்டு, 'ட்ரசிங்' செய்தார்; ஆன்டிபயாடிக் ஊசி போட்டார்.
''இன்னும் ரெண்டு நாளைக்கு ஊசி போடணும்; காயத்து மேல தண்ணி படாம பாத்துக்க... மாத்திரை தரேன்... நுணுக்கி சாப்பாட்டுல கலந்து கொடுத்துரு...''
''நன்றி டாக்டர்...''
''என் வாழ்நாள்ல ஒரு டைனோசருக்கு வைத்தியம் பாப்பேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்லை; ரொம்ப கொடுத்து வெச்சவன்...''
''டைனோவுக்கு தகுந்த மருத்துவம் பார்த்தீங்க... நன்றி...''
''உன் வளர்ப்பு மிருகம் பேரென்ன சொன்ன...''
''டைனோ...''
''அது கூட ஒரு செல்பி எடுத்துக்கவா...''
''தாராளமா எடுத்துக்கோங்க...''
டைனோவுடன் செல்பி எடுத்தார் மருத்துவர்.
''என் மகளிடம் காட்டுவேன்...''
''மகிழ்ச்சி... நாங்க புறப்படுறோம்...''
டைனோவுடன் கிளம்பினான் சந்திரஜெயன்.
வீட்டுக்குள் பூனைப்பாதம் வைத்து நடந்தான் சந்திரஜெயன்.
''நில்லுடா...''
அப்பா இரைந்தார்.
நின்றான்.
''பள்ளிக்கூடத்துக்கு டைனோவை துாக்கிட்டு போகாதேன்னு கூறினேன்... கேட்டியா...''
''ஏன்... என்னாச்சு...''
''தெரியாத மாதிரி நடிக்காத; டைனோவை, உன் வகுப்பு தோழன் காம்பசால் குத்தி காயப்படுத்திட்டான் இல்ல...''
''கால்நடை மருத்துவர் கிட்ட அழைத்து சென்று மருத்துவம் பார்த்திட்டேன்; இப்ப டைனோ நல்லா இருக்கு...''
''அது வீட்டுக்கு வந்ததிலிருந்து, 'திடுக்... திடுக்...' சம்பவங்கள் நடக்கின்றன. நம்ம வீட்டை தாக்க வந்து, பக்கத்தில் விளையாட்டு மைதானத்தை விண்கல் தாக்கிடுச்சு. தோட்டத்திற்குள் அத்து மீறிய பாம்பை கடித்து குதறி, உன் வளர்ப்பு மிருகங்களை டைனோ காப்பாத்துச்சு...
''டைனோவை தெரு நாய்கள் கடிச்சு குதற பார்த்தபோது, தீவிதா வந்து காப்பாத்திட்டா; இப்ப, உன் வகுப்பு தோழன் காம்பசால் குத்திட்டான். பிரச்னை இதோடு நிக்காது; எதாவது ஒரு கட்டத்துல டைனோவை யாராவது கொல்ல முயற்சிக்கக்கூடும்; அதன் சாவுக்கு நீயே மறைமுக காரணமாகிடாதே...''
- தொடரும்...
- வஹித்தா நாசர்