அன்புள்ள பிளாரன்ஸ் அம்மாவுக்கு...
என் வயது, 15; 10ம் வகுப்பு படிக்கும் மாணவன்; தந்தை ஒரு விவசாயி; தாய் இல்லத்தரசி. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி இருக்கின்றனர்.
சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பள்ளிக்குச் சென்று கொடியேற்றுவதை பார்த்திருக்கிறேன். மாணவர்களின் அணிவகுப்பில் பங்கேற்று, சல்யூட் அடித்து, இனிப்பு தின்று திரும்பியிருக்கிறேன்; நெஞ்சில் தேசிய கொடியை மிக அழகாக சூடியிருக்கிறேன்.
எனக்கு ஒரு சந்தேகம்...
நாட்டுப்பற்று என்றால் என்ன... குடிமகனின் கடமைகளாக என்னென்ன கடைபிடிக்க வேண்டும்.
அன்புள்ள மகனே...
நாடு என்பது, அதன் குடிமகனுக்கு தந்தை போல... நாட்டுப்பற்று என்பது, சார்ந்திருக்கும் நாட்டின் மீது, காதலும், பக்தியுமாக இணைந்து சக மனிதர்களுடன் ஏற்ற தாழ்வின்றி கை கோர்த்து வாழ்வதாகும்.
நாட்டில் இன, கலாசார, அரசியல் ரீதியான ஒன்றிணைப்பு தேவை. நாட்டுப்பற்று என்பது, நாட்டின் மீதான விசுவாசம், அபிமானம் என்று கூறலாம். நாட்டில் எவ்வளவு பிரச்னை மற்றும் பின்னடைவுகள் இருந்தாலும் நேசிக்க வேண்டும்; அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
நாட்டுப்பற்று என்பது, தேசிய கொடிக்கு வணக்கம் கூறி, தேசிய கீதம் பாடுவது மட்டுமல்ல; நாட்டை சரியான பாதையில் அழைத்து செல்வதும், வலிமையாக்குவதும் தான். அது அனைவரும் இணைந்து பாடும் பாடல் போன்றது. நம்நாட்டில், 130 கோடி மக்களும் ஒருமித்து கோரசாய் பாட வேண்டும்.
இந்தியா, மனித நாகரிகத்தின் தொட்டில்; மொழிகளின் பிறப்பிடம்; சரித்திரத்தின் தாய்; பாரம்பரியத்தின் பாட்டி; இதை எல்லாம் உணர வேண்டும்.
நாட்டுப்பற்று மிக்க நாடுகளில், முதலிடம் வகிப்பது அமெரிக்கா; இங்கு, 41 சதவீதம் பேர் மிகுந்த பற்றுடன் இருக்கின்றனர். இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில், 35 சதவீதம் பேர் பற்றுடன் இருக்கின்றனர்.
கண்மூடித்தனமான பற்று உள்ளவர்களும் உண்டு. உலகில் மற்ற நாடுகள் அனைத்தும், தன் தாய் நாட்டுக்கு கீழே என்ற மனோபாவம் கொண்டவர்கள். இவர்களிடம் பேரினவாத உணர்வு மிகுந்திருக்கும்; பிற நாட்டினரை அடிமைப்படுத்தும் கொடூர குணமும் இருக்கும்.
ஆக்கப்பூர்வமான நாட்டுப்பற்று உள்ளவர்கள், பிறநாட்டவரை சகோதரர்களாக மதிப்பர். அவர்களிடம், நல்ல குணம் இருந்தால், மனம் விட்டு பாராட்டுவர்; உலக சமாதானமே சர்வதேச பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு என்ற கொள்கையை கொண்டிருப்பர்.
சிறந்த குடிமகனாக திகழ, சில கட்டளைகளை தெரிந்து கொள்...
* எல்லா பிறப்பு, இறப்புகளையும் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும்
* மதம், மொழி, மாநிலம் தாண்டிய சகோதரத்துவம் பேண வேண்டும்
* ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், குடிமை பொருட்கள் வழங்கல் கார்டு போன்றவையின் அவசியம் கருதி பெற்றுக்கொள்ள வேண்டும்
* அரசுப்பணியாளருக்கு, லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்
* சாலை விதிகளை மதிக்க வேண்டும்
* அரசு நிலத்தை ஆக்கிரமித்தல் கூடாது
* ஓட்டு போடுதல், குடிமகனின் அடிப்படை கடமை
* நாட்டின் அடையாளமாக திகழும் தேசிய கீதம், கொடி, நதி, மலர், பழம், மரம், மிருகம், பறவையை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்
* இந்திய குடிமகன் என்ற விதத்தில் பங்களிப்பை சிறப்பாக செய்ய வேண்டும். இவற்றை கடை பிடித்தலே நாட்டுப்பற்றுக்கு அழகு சேர்க்கலாம்!
- அன்புடன், பிளாரன்ஸ்.