எழுத ஆரம்பித்த பின், பல விஷயங்களுக்குப் பெருமையும், பூரிப்பும் அடைய முடிந்திருக்கிறது. இதன் மூலம் பிரபலங்கள் பலரின் அறிமுகங்கள், நட்பு, தொடர்புகள் கிடைத்துள்ளன.
பள்ளிப் பருவத்தில், 'கல்கண்டு' இதழ் என்றால் உயிர். தமிழ்வாணனின் மர்மக் கதைத் தொடரும், கேள்வி பதிலும், துணுக்குகளும், பாட்டி வைத்தியமும் விடாமல் நம்மைத் துரத்தும்.
தமிழ்வாணனுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பிய, லேனா தமிழ்வாணனுடன், 35 ஆண்டு பழக்கம்.
வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ போகும்போது, அங்குள்ள முக்கிய இடங்கள், பிரபலங்கள், சந்திக்க வேண்டிய நபர்களை பற்றிய குறிப்புகளை சேகரித்து, சந்தித்து, பிறகு அவர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துகிறார்.
கடித சோம்பேறிகளுக்கு மத்தியில், லேனா ஒரு விதிவிலக்கு; எல்லாருக்கும் உடனடி பதில். நல்லது கண்டால் பாராட்டுக் கடிதம். திறமைகளை இவர் ஊக்குவிக்க தவறுவதில்லை. அதே மாதிரி, திட்டமிடுதலிலும், 'ஸ்பெஷலிஸ்ட்!'
அவரது வழிகாட்டுதல் பல சந்தர்ப்பங்களில் எனக்கும் உதவி இருக்கிறது.
'கல்கண்டு' இதழில் தொடருக்காக, அவரை அணுகினேன்.
'நீங்க, நன்றாக எழுதுகிறீர்கள். இருந்தாலும், எழுத்தாளரின் பிரபலத்தை வைத்து தான், தொடர்கதை மூலம் விற்பனை அமையும். உங்களது தற்போதைய பிரபலம் அதற்கு போதாது...' என்பதை ஒளிவு மறைவின்றி புரிய வைத்தார், லேனா.
அதோடு விட்டு விடாமல்--, 'தினமலர் - வாரமலர் இதழில் நீங்க நிறைய சிறுகதைகள் எழுதுகிறீர்களே... தொடர் கதைக்கு முயலுங்கள்; அதன், 'ரீச்'சே தனி...' என்று, ஊக்கம் தந்தார்.
அதன்பின், 'கல்கண்டு' இதழில் தொடர்கதை எழுதினது பெருமை, பூரிப்பு.
அதேபோல, எழுத்து மட்டுமின்றி, குடும்ப மற்றும் வேலை விஷயங்களிலும், சரியான ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார், லேனா.
நல்ல வேலை, அத்துடன் பத்திரிகைகளின் மூலம் வருமானம் என்றாலும் கூட, அரபு நாடுகளின் சம்பாத்தியத்துடன் ஒப்பிட முடியாதே. என்னுடன் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிந்தவர்கள், குவைத்துக்கு பாய்ச்சல் எடுக்க, என் குடும்பத்திலும் கிள்ள ஆரம்பித்தனர்.
நானும் முயற்சிக்க, குவைத் பெட்ரோலியம் கம்பெனியில் வேலை கிடைத்தது.
இருப்பினும், அங்கு போனால், எழுத்து தடைபடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
'எழுத்தில் வேண்டிய அளவிற்கு பெயர் எடுத்திருக்கிறீர்கள். அப்புறம் என்ன கவலை, உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எழுதலாம். அரபு நாட்டு சம்பாத்தியம் நிச்சயம் குடும்பத்தை உயர்த்தும்; கவலைபடாமல் கிளம்புங்கள். போகும் முன், சிறுகதைகள், தொடர் சுருக்கங்கள் கொடுத்து விடுங்கள்...' என்று உற்சாகப்படுத்தினார், வாரமலர் இதழ் பொறுப்பாசிரியர்.
அங்கிருந்து இப்போது பணி ஓய்வு பெற்று வந்ததும், என்னை அழைத்து, எதிர்பார்க்கக்கூடிய சில நடைமுறை பிரச்னைகளை அறிவுறுத்தி, ஆலோசனைகள் சொல்லி இருக்கிறார், லேனா.
குவைத்தில், எங்கள் விழாக்களுக்கு, லேனா வேறு சில பிரபலங்களை அனுப்பி வைத்திருந்தாலும், அவர் அத்தனை சீக்கிரம் குவைத்திற்கு வந்துவிடவில்லை; சாக்கு போக்குகள் சொல்லியபடியே இருந்தார்.
பிறகு, இளையராஜா குவைத் வந்தபோது, அவருடன் வந்து, அவருக்கு வேண்டிய பக்குவத்தில் பழகி, குளிர்வித்தார். தன் கவுரவம், பெயர் பற்றி கவலைப்படாமல் இசைஞானியின் மனம் கோணக் கூடாது என்று, லேனா பார்த்துப் பார்த்து பழகினது அற்புதம்.
குவைத் விழாக்களுக்கு நட்சத்திரங்களை அதிக பணம் கொடுத்து, நாங்கள் அழைப்பதில்லை. அதற்கு காரணம், அங்குள்ள சட்டதிட்டம் மற்றும் கலைஞர்களுக்கு பெரும் சம்பளம் என்றால், அப்புறம் அறக்கட்டளைக்கு உதவ ஒன்றும் மிஞ்சாது.
எனவே, உள்ளூரில் திறமையானவர்களை ஊக்கப்படுத்தும் விதம் கலை நிகழ்ச்சிகள்; தேவையானால், சிறிய பட்ஜெட்டில், 'டிவி' கலைஞர்களை அழைப்போம். சிறப்பு விருந்தினர் தான் பிரதானம் என்பதால், அகில இந்திய அளவில் அறியப்படுகிறவர்களை பட்டியலிட்டு அணுகுவோம்.
நிகழ்ச்சிக்கு ஒரு வி.ஐ.பி., தான் தேவை என்றாலும், யாருக்கு அந்த தேதிகளில் சவுகரியப்படும் என தெரியாது என்பதால், நேர நெருக்கடி கருதி, ஒரே நேரத்தில் பலருக்கும் கல் எறிந்து வைப்பதுண்டு. அதில் விழும் முதல் கனியை பயன்படுத்தலாம் என்பது திட்டம்.
அந்த மாதிரி ஒரு சமயம், பிரதமர் இந்திராவின் மருமகளான மேனகா, நடிகர்கள் கமல், விஜயகாந்த், மூவருக்கும் விண்ணப்பித்திருக்க, சோதனையாக மூவருமே சம்மதித்து விட்டனர்; எங்களுக்கு மண்டகப்படி.
மூவருமே விசேஷமானவர்கள் தான். அப்போது விட்டால் பிறகு கிடைப்பரா என தெரியாது. யாரை அழைப்பது, யாரை தவிர்ப்பது என, மகா குழப்பம்!
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்