படிப்பினை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
00:00

''ராஜி, டிபன் ரெடியாம்மா... பசங்க வர நேரமாச்சு,'' குரல் கொடுத்தான், ரவி.
''ரெடி, வந்ததும் சாப்பிடட்டும். பிறகு வகுப்பு ஆரம்பிக்கலாம்,'' என்றாள், ராஜி.
சரியாக, 5:00 மணிக்கு நான்கு சிறுவர்கள் வந்தனர். சுடச்சுட பகோடாவும், தேனீரும் குடித்த பின், வகுப்பு ஆரம்பித்தது.
உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தான், ரவி. மிகச்சிறந்த ஆசிரியன். மாணவர்களிடையே நல்ல மதிப்பு. பெற்றோர்களும் அவன் அருமையை அறிந்தனர். நேர்மையானவன். மாணவர்களுக்கு பாடத்துடன், நல்ல பண்பையும் கற்றுக் கொடுத்தான்.
வசதியில்லாத குழந்தைகளுக்கு, வாரத்தில் ஐந்து நாட்கள் டியூஷன் எடுத்தான். செவிக்கு உணவுடன், வயிற்றுக்கும் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரே பெண், ராகினி. 8ம் வகுப்பு படிக்கிறாள்.
'இந்த மாதிரி எப்போதும் ஓசி டியூஷன் தான் எடுக்கிறீங்க. நமக்கும் ஒரு பெண் இருக்கா. அவளுக்குன்னு எதுவும் சேர்க்க வேண்டாமா?' என, அடிக்கடி கேட்பாள், ராஜி.
'ராகினி புத்திசாலி. அவளை நல்லா படிக்க வைக்க வேண்டியது, நம் கடமை. அதுதான் அவளுக்கு நாம் கொடுக்கிற பெரிய சொத்து. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா...' என்பான், ரவி.
''உங்க பள்ளிக்கூடத்திலே படிக்கிற வசதியான பசங்களோட அப்பா, அம்மா என்ன வேலையிலே இருக்காங்கன்னாவது உங்களுக்கு தெரியுமா?'' கேட்டாள், ராஜி.
''தெரிஞ்சுண்டு நான் என்ன செய்யப் போறேன்... எனக்கு அவங்களாலே ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை.''
ரவியின் பதிலைக் கேட்டு, வெறுத்து அந்த இடத்தை விட்டுப் போனாள், ராஜி.
ராகினிக்கு அப்பா என்றால் உயிர். ரவிக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் பெண்ணுடன் பேசுவான். பாடத்துடன் பகுத்தறிவையும் ஊட்டி வளர்த்தான். ராகினியும், வகுப்பில் முதல் மாணவியாக இருந்தாள். நல்ல குரல் வளம். பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி எல்லாவற்றிலும் முதல் பரிசு தான்.
'ராகினி, உன்னை நினைச்சா பெருமையாய் இருக்கு. ஆனால், உனக்கு தலைக்கனம் மட்டும் வரவே கூடாது. உன்னை விட சிறந்தவர்கள் நிறைய பேர் உண்டு. இதை மட்டும் மறக்காதே...' ரவி அடிக்கடி சொல்லும் அறிவுரை இது.
அப்படியும், ராகினி வளர வளர, கூடவே கர்வமும் வளர்ந்தது. தனக்கு நிகரில்லை என்ற மாதிரிதான் நடந்து கொண்டாள். தனக்கு ஈடாக சாதிக்காதவர்களை மட்டமாக நினைத்தாள். அவளை நினைத்து, ராஜிக்கு மிகவும் கவலை தான்.
ஒருமுறை, அப்பாவின் நண்பரது மகளான அபர்ணா, மும்பையிலிருந்து அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.
வழக்கம் போல அவளிடம், ''நான் காலேஜ் செஸ் சாம்பியன்... நிறைய போட்டிகளில் ஜெயித்திருக்கிறேன்,'' ஜம்பம் அடித்துக் கொண்டாள், ராகினி.
மென்மையாகச் சிரித்து, ''என் வாழ்த்துக்கள் ராகினி,'' என்றாள்.
அவள் கிளம்பியவுடன், ''கொஞ்சம் அசமஞ்சம் மாதிரி இருக்கா. என் செஸ் சாம்பியன்ஷிப் பற்றி சொன்னவுடன் அசந்து போயிட்டா,'' என்றாள், ராகினி.
''மனிதர்களை பார்த்தவுடன் எடை போடும் வழக்கத்தை விடு. அவள், இந்தியாவின், 'நேஷனல் பாட்மிண்டன் சாம்பியன்'னு உனக்கு சொன்னாளா... நீதான் ஜம்பமடிச்சுக்கற. நீ விளையாட்டு செய்திகள் படித்தால்தானே தெரியும்,'' என்றாள், ராஜி.
''உன் அட்வைஸை ஆரம்பிச்சுடாதே. நீ எனக்கு உண்மையிலேயே அம்மாவான்னு சந்தேகமாயிருக்கு,'' என்றாள், ராகினி.
அன்று இரவு, ரவியிடம் நடந்ததைச் சொன்னாள், ராஜி.
''இப்படியே வளர்ந்தால் இவள் வாழ்க்கை எங்கே போய் முடியும். இவளுடைய அறிவுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை அமையவில்லை என்றால், இவள் தன் கணவனை மதிக்க மாட்டாளே,'' என புலம்பினாள்.
''காலம் அவளுக்கு புரிய வைக்கும். கவலையை விடு,'' என்றான், ரவி.
பி.காம்., முடித்த ராகினி, நிறைய மதிப்பெண்கள் எடுத்து, மாகாணத்திலேயே முதலாவதாக தேறியிருந்தாள்.
''ராகினி... மேலே என்ன செய்வதாக உத்தேசம்,'' கேட்டான், ரவி.
''அப்பா... எனக்கு எம்.பி.ஏ., படிக்கணும்ன்னு ஆசை. வங்கியிலிருந்து கடன் கிடைக்கும். நான் வேலைக்குப் போன பிறகு அடைத்தால் போதும்,'' என்றாள், ராகினி.
''அது முடிய இரண்டு ஆண்டுகள். அதுக்கப்பறம் வேலைக்குப் போகணும். ஒரு வழியா, 60ம் கல்யாணம்தான் பண்ணிக்கணும். இவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம், ரவி. மேலே படித்தால், அதுக்கும் மேலே படித்த பையனைத் தேடணும்,'' குறுக்கிட்டாள், ராஜி.
''ராஜி... வேளை வந்தால் எல்லாம் தானா நடக்கும். ராகினி, நீ, 'அப்ளை' பண்ணும்மா,'' என்றான், ரவி.
எம்.பி.ஏ., படிக்க, குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் இடம் கிடைத்தது.
அவளுக்கு, 'ஏசி' பெட்டியில் டிக்கெட் வாங்கியிருந்தான், ரவி. அஹமதாபாத்திற்கு பயணமானாள். நிறைய புத்திமதிகள் சொல்லி அவளை அனுப்பி வைத்தாள், ராஜி.
அந்த பெட்டியில், அவளுடன் இரண்டு ஆண்களும், ஒரு நடுத்தர வயது பெண்ணும் பயணம் செய்தனர். படித்த பெண்மணி ஆன அவள், தன் பெயர் கீதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். இருந்தும், தன் தாய் வயதை ஒத்த பெண்ணுக்கு என்ன தெரியும் என்பது போல நடந்து கொண்டாள், ராகினி.
''நீ ஏன் எம்.பி.ஏ., படிக்க முடிவு செய்தாய் ராகினி,'' கேட்டாள், கீதா.
''பி.காமில் மாகாணத்திலேயே முதலாவதாக வந்தேன். எம்.பி.ஏ., நுழைவுத் தேர்விலும், 10வது ராங்க். அஹமதாபாத்தில் எம்.பி.ஏ., சேரணும்ன்னு ஆசை. நண்பர்கள் நிறைய பேருக்கு சீட் கிடைக்கலே,'' என, தன் பெருமையை ஜம்பமடித்து வந்தாள், ராகினி.
ராகினியை அழைத்துப் போக, அவள் ஹாஸ்டலில் இருந்து மூன்று சீனியர்கள் வந்திருந்தனர். அவர்கள் கீதாவை பார்த்ததும், 'ஹலோ மேடம்... உங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. விடுமுறை எப்படி இருந்தது?' என்று கேட்டனர்.
அவர்களிடம் சிறிது நேரம் பேசி, விடை பெற்றாள், கீதா.
வழியில் ராகினி, ''யாரது, உங்களுக்கு தெரிந்தவங்களா?''
''ராகினி, உன்னுடன் இவ்வளவு நேரம் பயணம் செஞ்சாங்களே, அவங்க யாருன்னு சொல்லலியா?'' கேட்டாள், ரமா.
''அவங்கதான் பைனான்ஸ் லெக்சரர். 'ஹார்வர்ட் பிசினஸ்' ஸ்கூலில் படிச்சிருக்காங்க... ப்ரிலியண்ட் லேடி,'' என்றான், ஸ்ரவண்.
ராகினிக்கு, 'ஷாக்' அடித்தது.
தன்னைப் பற்றி ஜம்பம் அடித்துக் கொள்ளத்தான் நேரம் சரியாக இருந்தது. கீதாவை எங்கே பேச விட்டாள்.
கீதா மேடம், தன்னைப் பற்றி என்ன நினைப்பார்... நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது. அவளுடைய திமிருக்கு, முதல் அடி.
நாட்கள் ஓடின. படிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தன்னை தவிர உலகத்தில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர் என்பது ராகினிக்கு புரிந்தது.
ரோஹன் என்ற மாணவன் தான், எப்போதும் முதலாவதாக வந்தான். 6 அடி உயரத்தில் அழகுடன், அறிவானவன் மேல், எல்லா பெண்களுக்கும் ஒரு கண். ராகினிக்கும், அவனுக்கும் படிப்பு சம்பந்தமாக அடிக்கடி வாக்குவாதம் வரும். ஒருநாள், அவனை கடுமையாக பேசினாள், ராகினி.
''ராகினி, உன் அழகையும், அறிவையும் நான் மதிக்கிறேன். உன்னை மனதார நேசித்தேன். ஆனால், உன் ஆணவத்தை நான் வெறுக்கிறேன். எனக்கு வாய்க்கும் மனைவி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நீ ஒரு உதாரணம்,'' என்றான், ரோஹன்.
அவமானம் தாங்க முடியாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள், ராகினி. அவளுடைய திமிருக்கு, இரண்டாவது அடி.
தன்னையும் அறியாமல் ரோஹனிடம் ஈர்ப்பு எப்போது ஏற்பட்டது என, புரியாமல் தவித்தாள். ஆனால், தன்மானமும், ரோஷமும் அவளை மன்னிப்பு கேட்கவிடவில்லை. கூடியவரை ரோஹனிடம் வாக்குவாதத்தை தவிர்த்தாள். படிப்பும் முடிந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய கம்பெனியில், ராகினிக்கு வேலை கிடைத்தது. வேலை மும்முரத்தில் கூட அவளுக்கு எப்போதாவது ரோஹனின் ஞாபகம் வரும். அவன் எங்கே இருப்பான், திருமணம் ஆகியிருக்குமா என்று யோசிப்பாள்.
ஒருநாள், சினேகிதி ஷீலாவை யதேச்சையாக சந்தித்தாள், ராகினி. பழைய விஷயங்களை பேசினர்.
''ராகினி, இங்குதான், 'மெக்கன்ஸீ கம்பெனி'யில் பெரிய வேலையில் இருக்கான், ரோஹன். உன்னைப் பற்றி கேட்டான். அவன் நம்பர் தரேன். பேசுறியா?'' கேட்டாள், ஷீலா.
''நான் ஏன் முந்திக் கொண்டு பேசணும்... அவனுக்குத் தோணினால் பேசலாமே,'' என்றாள் ராகினி.
''உன் பிடிவாதம் இன்னும் உன்னை விடலை. எதுக்கும் நம்பரை மெஸேஜ் பண்றேன்,'' என்றாள், ஷீலா.
ஒரு வாரத்திற்கு பின், ராகினியின் கம்பெனியில் புதிதாக வேலையில் சேர்ந்தான், நவீன். அவனும் அஹமதாபாத்தில் தான் எம்.பி.ஏ., படித்திருந்தான். துளியும் கர்வம் இல்லாமல் எல்லாருடனும் பணிவுடன் பழகினான்; ராகினிக்கு இரண்டு வருடம் ஜூனியர்.
புதிய புராஜெக்ட்டை நவீன் அல்லது ராகினிக்கு கொடுப்பதா என்று யோசித்துக் கொண்டிருந்தார், எம்.டி.,
இருவரையும் அழைத்து, ''இந்த புராஜெக்ட் சம்பந்தமான விபரங்கள் இரண்டு பைலிலும் இருக்கு. நீங்க இரண்டு பேரும் தனித்தனியாக, 'ரிபோர்ட்' தயார் பண்ணுங்க. அதைப் படித்துப் பார்த்தபின், யாருக்கு இந்த புராஜெக்ட்டை கொடுப்பதுன்னு முடிவு பண்றேன்,'' என்று, இருவரிடமும் ஒவ்வொரு பைலை கொடுத்தார்.
நவீன் இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கான். அவனுக்கு என்ன தெரியும்? அதனால், தனக்குதான் அந்த புராஜெக்ட்ன்னு முடிவு செய்திருந்தாள், ராகினி.
இரண்டு நாளில், 'ரிபோர்ட்' தயார் செய்து கொடுத்தனர்.
இருவரையும் கூப்பிட்டு, நவீனுடைய, 'ரிபோர்ட்'டை ராகினிக்கும், அவள், 'ரிபோர்ட்'டை நவீனிடமும் கொடுத்து, ''படித்து, நீங்களே யாருக்கு கொடுப்பதென்று முடிவு செய்யுங்கள்,'' என்றார், எம்.டி.,
நவீனின், 'ரிபோர்ட்'டை படித்த ராகினி, அசந்து போனாள். அவள் கவனிக்காமல் விட்ட சிறு சிறு விஷயங்களைக் குறிப்பிட்டு, அவைகளை எப்படி தவிர்ப்பது என்றும் விளக்கியிருந்தான்.
''சார், இது ஒரு, 'ப்ரிலியண்ட் ரிபோர்ட்!' நவீனுக்கு அனுபவம் இல்லை. அதனால், என் 'ரிபோர்ட்' தான் சிறப்பா இருக்கும்ன்னு நினைத்தேன். ஆனால், திறமைக்கு அனுபவம் தேவையில்லை, பொறுமையும், பக்குவமும் தான் தேவை என்பதை நிரூபித்து விட்டான். என்னை விட அவன் தான் இந்த புராஜெக்ட் எடுத்து நடத்த தகுதியானவன்,'' என்றாள், ராகினி.
நவீனை அனுப்பிவிட்டு, ராகினியை இருக்கச் சொன்னார், எம்.டி.,
''நீ ரொம்ப புத்திசாலிதான். ஆனால், மற்றவரின் திறமையைப் புரிந்து, அதை மெச்சுவதுதான் ஒரு உண்மையான திறமைசாலிக்கு அழகு. ஒருவரை பார்த்ததும், எடை போடக் கூடாது. இப்போது தான் நீ ஒரு உண்மையான திறமைசாலியாக மாறியிருக்கே,'' என்றார்.
ராகினிக்கு, இது மூன்றாவது அடி.
''ஆமாம் சார், இப்போதுதான் புரிந்து கொண்டேன். எனக்கு அதைப் புரிய வைத்ததற்கு நன்றி,'' என்றாள், ராகினி.
'இதைத்தானே அம்மா எப்பவும் சொல்லுவாள்... என் திமிரினால் ரோஹன் போன்ற ஒரு மாணிக்கத்தை இழந்து விட்டேனா, அவன் என்னுடன் பேசுவானா...' யோசித்தபடியே நடந்தாள். மொபைல் போனில் அம்மா. சிறிது நேரம் பொதுவாக பேசினாள்.
திடீரென்று, ''அம்மா, நீ எப்பவும் சொல்லுவியே... ஒரு ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு. இப்பதாம்மா புரிஞ்சுது. என்னை விட புத்திசாலிகள், நிறைய சாதித்தவர்கள் ரொம்ப பேர் இருக்காங்க.''
''ராகினி, என்னம்மா ஆச்சு... ஏன் இப்படி பேசறே?'' என்றாள், ராஜி.
''பயப்படாத, எனக்கு ஒண்ணுமில்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அடிக்கடி சொல்லுவியே, இப்போ நான் தயார். ஆனா, நான் விரும்புகிறவர் தயாரான்னு தெரிஞ்சிக்கிட்டு, மறுபடியும் போன் பண்றேன்,'' என்றாள், ராகினி.
'திமிரையெல்லாம் உதறி, நீ விரும்பிய நல்ல குணமுடைய பெண்ணாக மாறிவிட்ட என்னை ஏற்றுக் கொள்வாயா...' என்ற நினைப்பில், ரோஹன் நம்பருக்கு போன் செய்தாள்.

பானு சந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X