விஜய் பக்கம் திரும்பிய, இயக்குனர்கள்!
இதுவரை, 65 படங்களில் நடித்துள்ள விஜய், 66வது படம் மூலம் தெலுங்கு சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்கிறார். இதையடுத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் பிரமாண்ட படங்களை இயக்கி வெளியிடும் இயக்குனர்கள், விஜயை வைத்து படம் இயக்க, ஆர்வமாகி வருகின்றனர். அந்த வகையில், முதல் தெலுங்கு படத்தில், விஜய் நடிக்கத் துவங்குவதற்கு முன்பே, அல்லு அர்ஜுன் நடித்த, புஷ்பா படத்தை இயக்கினார், சுகுமார். அடுத்தபடியாக, விஜயை வைத்து, ஒரு மெகா, 'பான் இந்தியா' படம் இயக்குவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், விஜய்க்கு பொருத்தமான கதையை தயார் செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவிற்குள் விஜய், 'என்ட்ரி' கொடுப்பதற்கு முன்பே, அங்குள்ள மெகா பட இயக்குனர்கள், அவர் பக்கம் திரும்பி நிற்பதால், டோலிவுட்டின் மேல்தட்டு, 'ஹீரோ'கள், 'ஷாக்' ஆகியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
'ரூட்'டை மாற்றும், ராஷ்மிகா!
இதுவரை முன்வரிசை, 'ஹீரோ'களுடன், 'டூயட்' பாட வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வந்த, ராஷ்மிகா மந்தனா, தன், 'ரூட்'டை மாற்ற துவங்கி இருக்கிறார். 'படத்துக்கு படம், கவர்ச்சி உடை அணிந்து நடித்தால், நடிக்க தெரியாத, 'டம்மி பீஸ்' நடிகை என்று, முத்திரை குத்தி விடுவர். அதன் காரணமாக, இனிமேல் முன்னணி, 'ஹீரோ'வுடன் நடிக்க வேண்டும் என்பதை விட, முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். கவர்ச்சியை வெளிப்படுத்துவதை விட, என் திறமையை வெளிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். தற்போது, ஹிந்தியில், அமிதாப் பச்சனுடன் நடித்து வரும் படம், என்னை சிறந்த, 'சென்டிமென்ட்' நடிகையாக வெளிப்படுத்தும். அதேபோல், தென்னிந்திய படங்களிலும் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போகிறேன்...' என்று, 'ஸ்டேட்மென்ட்' விடுத்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த அறிவிப்பு, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு, அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது!
— எலீசா
பூர்ணாவின், 'ஓப்பன் டாக்!'
திருமணமான நடிகையரே 'வெயிட்'டான வேடம் இருந்தால் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வரும் இந்த காலகட்டத்தில், பூர்ணா அதிலிருந்து மாறுபட்ட நடிகையாக இருக்கிறார். 'கதாநாயகி, வில்லி, குணசித்திர வேடம் எதுவாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், என் வேடத்திற்கும் கதையில் ஓரளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும். அந்த வகையில், 'நச்'சுன்னு நாலு காட்சி இருந்தாலும் போதும்; அந்த வேடத்தை தவிர்க்காமல் நடிப்பேன். ஏற்கனவே, தலையில் மொட்டையடித்து நடித்தேன்; சிறுவனுக்கு அம்மாவாக, கர்ப்பிணியாக என, பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். அதனால், அடுத்தபடியாக பாட்டி வேடம் கிடைத்தாலும் தாராளமாக நடிப்பேன். அந்த வகையில், 'இமேஜ்' என்ற வட்டத்திற்குள் சிக்காத நடிகையாக இருக்கவே விரும்புகிறேன்...' என்று, சினிமா வட்டாரங்களில், 'ஓபன் ஸ்டேட்மென்ட்' வெளியிட்டுள்ளார். வந்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்!
—எலீசா
இளசுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும், மடோனா செபஸ்டியன்!
மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர், மடோனா செபஸ்டியன். அந்த பரபரப்போடு கோலிவுட்டுக்கு வந்தவர், ஏக கெடுபிடி போட்டு நடித்ததால், சில படங்களோடு, அம்மணியை ஏறக் கட்டினர். தொடர்ந்து கை கொடுப்பதாக சொன்ன, 'ஹீரோ'களும் கை விட்டனர். இதனால், 'கணுக்கால் கவர்ச்சியை கூட காட்ட மாட்டேன்...' என்று கறாராக பேசி வந்தவர், இப்போது, 'படுகவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்...' என்று சொல்லி, கமர்ஷியல் இயக்குனர்களை துரத்துகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மடோனாவை ஒப்பந்தம் செய்துள்ள ஒரு இயக்குனர், 'மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்த நயன்தாரா, பில்லா படத்தில், இளவட்ட ரசிகர்களுக்கு சூடு காட்டி கொந்தளிக்க வைத்தது போன்று பொங்கி எழ வேண்டும்...' என்று சொல்ல, 'டபுள் ஓ.கே., துக்கடா உடையணிந்து, இளசுகளை துவம்சம் செய்யப் போகிறேன்...' என்கிறார். மலை விழுங்கி மாரியாத்தாளுக்கு உரல் சுண்டைக்காய்!
எலீசா
60வது வயதில் நிறைவேறிய, ஆசை!
தமிழ் சினிமாவில், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என்று, பல காமெடியன்களுக்கு ஜோடியாக நடித்த கோவை சரளா, இப்போது இளவட்ட காமெடியன்களுடனும் நடித்து வருகிறார். அதோடு, அம்மா வேடங்களில் நடித்தாலும், காமெடி கலந்த வேடங்களிலேயே நடித்துள்ள கோவை சரளாவுக்கு, 'அநீதிக்கு எதிராக பொங்கி எழும் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட கால ஆசை, இப்போது ஒரு படத்தில் கிடைத்துள்ளது. அதில், 65 வயது பாட்டியாக நடிக்கும் நான், பேத்திக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்கி எழும் தைரியமான வேடத்தில் நடித்திருக்கிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* 'மாநாடு படம் வெற்றி பெற்றதை அடுத்து, கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும், வெந்து தணிந்தது காடு படம், என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும்...' என்கிறார், சிம்பு.
அவ்ளோதான்!