ஒருசமயம், குறுகலான பாதை ஒன்றில் காசி மன்னரும், கோசல தேச மன்னரும் எதிரெதிரே, தேர்களில் வந்து கொண்டிருந்தனர். இருவரும் நெருங்கிய போது, யாராவது ஒருவர் வழியை விட்டு ஒதுங்கி நின்றால் தான், அடுத்தவர் போக முடியும் என்ற நிலை.
இருவரில் யார் வழி விடுவது? இருவருமே பெரியவர்கள். இருவரின் தேரோட்டிகளும் கீழே இறங்கினர்.
'எங்கள் தேரில், காசி மன்னர் இருக்கிறார். ஆகையால், எங்கள் தேருக்கு வழி விடுங்கள்...' என்றார், ஒரு தேரோட்டி.
'எங்கள் தேரிலும் மன்னர் தான்; அதுவும், கோசல மன்னர் இருக்கிறார். நீங்கள் தான் வழி விட வேண்டும்...' என்றார், மற்றொரு தேரோட்டி.
'பரமேஸ்வரனே குடியிருக்கும் காசிக்கு மன்னர், எங்கள் அரசர்...' என்றார், ஒருவர்.
'பகவானே ஸ்ரீராமராக அவதரித்த கோசல நாட்டு மன்னர், எங்கள் மன்னர்...' என்றார், மற்றொருவர்.
'சரி, வயதில் யார் பெரியவரோ, அவருக்கு மற்றவர் வழி விட வேண்டும்...' என்றார், ஒரு தேரோட்டி. மற்றொரு தேரோட்டியும் அதை ஒத்துக்கொண்டார்.
விசாரித்ததில், இரு அரசர்களும் சம வயது உடையவர்கள் என்பது தெரிந்தது. வேறு வழி என்ன?
'யாருடைய நாடு பெரியதோ, அவருக்கு மற்றவர் வழி விட வேண்டும்...' என்று, இரு தேரோட்டிகளும் பேசி முடிவு எடுத்தனர்.
பார்த்தால், இரு அரசர்களின் ஆளுமைப் பகுதியும் சம பரப்பளவில் இருந்தன.
'சரி, அடுத்த வழியைப் பார்க்கலாம். இரு அரசர்களில் யார் அதிகமாக நல்ல குணம் உடையவர்களோ, அவருக்கு அடுத்தவர் வழிவிட வேண்டும்...' என்று அடுத்த தீர்மானத்தை எடுத்தனர், தேரோட்டிகள்.
'எங்கள் அரசர், நல்லவருக்கு நல்லவர்; கெட்டவருக்குக் கெட்டவர்...' என்றார், கோசல மன்னரின் தேரோட்டி.
'எங்கள் அரசர் அப்படியில்லை, நல்லவருக்கு நல்லவர்; கெட்டவருக்கும் நல்லவர். ஏனென்றால் அவர் அனைவர் மீதும் அன்பு காட்டுபவர்...' என்றார், காசி மன்னரின் தேரோட்டி.
அதைக் கேட்ட கோசல மன்னர், தன் தேரோட்டியிடம், 'அப்படியென்றால், அனைவர் மீதும் அன்பு செலுத்தும் காசி மன்னர் தான், என்னை விட உயர்ந்தவர். ஆகவே, அவருக்குத் தான் நாம் வழிவிட வேண்டும். நம் தேரை ஒதுக்கி நிறுத்து, அவர் செல்லட்டும்...' என்று, காசி மன்னருக்கு வழி விட சொன்னார்.
தேரோட்டியும் அப்படியே செய்தார். காசி மன்னரின் தேர் சென்றது.
அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தும் கதை இது. அனைவர் மீதும் அன்பு செலுத்த முடிகிறதோ, இல்லையோ குறைந்தபட்சமாக, நம்மைச் சுற்றி வீட்டில்-, அலுவலகத்தில் இருப்பவர்களிடமாவது, நாம் அன்புடன் இருக்க முயல்வோம்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
விளக்கை ஏற்றும்போது, வீட்டின் பின் வாசல் கதவை மூடி விட வேண்டும்