ஜன., 23, நேதாஜி பிறந்ததினம்
குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' நுாலிலிருந்து:
இரண்டாம் உலகப்போர் உச்சநிலையிலிருந்த சமயம், இந்திய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது மற்றும் இந்திய மக்கள் வரிப்பணத்தையும், மற்ற செல்வங்களையும், போருக்காக, பிரிட்டிஷ் அரசு செலவழிப்பதை கண்டித்து, போராட்டம் நடத்தினார், சுபாஷ் சந்திரபோஸ்.
போசை அவர் போக்கில் விட்டால், பின்னாளில் பெரிய அளவிலான கிளர்ச்சியை உருவாக்குவார். முக்கியமாக, போரில், பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்தியர்கள் ஈடுபடுவதை தடுக்க, பிரசாரம் செய்வார் என்று பயந்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக அவரை கைது செய்தது.
இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு போஸ் திட்டமிட்டிருந்த சமயத்தில், கைது நடவடிக்கைக்கு உள்ளானது, அவரை வருத்தமடையச் செய்தது. சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். விளைவு, போசின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானது.
சிறைக்குள் போசின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால், பெரிய கிளர்ச்சி ஏற்படக்கூடும் என்பதால், அவரை எப்படியாவது சாப்பிட வைக்க முயற்சி செய்தனர், காவலர்கள்.
நவ., 26, 1940ல், வங்காள கவர்னருக்கும், பிரிமியருக்கும் ஒரு கடிதம் எழுதினார், போஸ்.
'என்னை, சட்ட விரோதமாக கைது செய்திருக்கிறீர்கள். என் எதிர்ப்பை பல வழிகளில் காட்டி விட்டேன். இறுதியாக, உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன். நான் இருக்கும் நிலைமையில் இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.
'இந்த கடிதத்தை கிழித்து விடாமல், பின் வரும் சந்ததியினர் படிப்பதற்கு ஏதுவாக, இதை அரசின் கோப்புகளில் வைக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை, நான் அமைதியாக மடிவதை யாரும் தடுக்கக் கூடாது. பலாத்காரமாக உணவு செலுத்தக் கூடாது. என் பலம் உள்ளவரை நான் உயிர் வாழ்கிறேன்...' என்று எழுதியிருந்தார்.
போசின் எடையும், உடல் நலனும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. பிரிட்டிஷாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வேறு வழியின்றி, போசை விடுதலை செய்தனர். ஆனால், அவருடைய ஒவ்வொரு அசைவும் உளவுத்துறையினரால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது.
டாக்டர். மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' நுாலிலிருந்து:
இந்திய தேச விடுதலைக்காக பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
விடுதலை வேட்கையில் ஆர்வம் கொண்ட பலரும், அவரை அழைத்து உரையாற்ற கூறினர். அப்படி ஒரு சமயம், இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில், வெள்ளையரின் போக்கை கண்டித்து பேசினார், நேதாஜி.
அப்போது அங்கிருந்த ஒரு வெள்ளைக்காரர் எழுந்து, 'நேதாஜி, நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளும்... பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒருபோதும் சூரியன் மறைந்ததில்லை...' என்று உறுமினார்.
அதைக்கேட்ட நேதாஜி, 'நீர் சொல்வது ஒருவகையில் உண்மை தான்.
ஏனெனில், கடவுள் இருட்டில் கூட பிரிட்டிஷ்காரர்களை நம்புவதில்லை...' என்று பதில் சொன்னார்.
'ஆனைக்கும் அடி சறுக்கும்' என்பது நேதாஜிக்கு தெரிந்ததால் தான், ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். எதிரிகளின் இடத்தில் நின்று கொண்டே அவர்களுக்கு எதிராக கர்ஜித்தது, நேதாஜியின் துணிச்சலுக்கு சான்று.
நடுத்தெரு நாராயணன்