அன்புள்ள அம்மா -
நான், 26 வயது பெண். முதுநிலை கணினி பொறியியல் படித்துள்ளேன். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நானும், கணவரும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதை விட குழந்தை பிறக்காமலிருக்க, கணவருக்கு தெரியாமல் தற்காலிக கருத்தடை முறைகளை உபயோகிக்கிறேன் என்பதே உண்மை.
ஐந்து ஆண்டு கல்லுாரி படிப்பை விடுதியில் தங்கித்தான் படித்தேன். நான் அடங்காபிடாரியாய் இருக்கிறேன் என்ற காரணத்துக்காகதான், என்னை விடுதியில் சேர்த்தனர், பெற்றோர்.
விடுதியில் சேர்ந்த ஆறே மாதத்தில், உடன் படிக்கும் பெண்ணொருத்தி நட்பானாள். என் முரட்டுதனத்தையும், கீழ்படியாமையையும் வெகுவாக ரசித்தாள், தோழி. விடுதி அறைக்குள் இருக்கும்போது ஆண்கள் அணியும் அரைகுறை ஆடைகளை அணிவேன்.
ஒருநாள், எனக்கு சிகரெட்டையும், ஒயினையும் அறிமுகப்படுத்தினாள், தோழி. நானும் ஆணுக்குரிய எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும் என்ற திமிருடன் சிகரெட் புகைத்து, ஒயின் குடித்தேன். சிகரெட் பிடிக்கும்போது பிரளயமாய் இருமல் வந்தது. ஒயின் குடிக்கும்போது குமட்டி, வாந்தி வந்தது.
விடுதியில் சேர்ந்த முதல் ஆண்டு, ஒயினும், இரண்டாவது ஆண்டு, பீர், மூன்றாவது ஆண்டிலிருந்து, ரம் குடிக்க ஆரம்பித்தேன். முதலில் மாதம் ஒருமுறை என்பது, வாரம் ஒருமுறையாகி, அதன்பின், தினம் ஒரு, 'பெக்' குடிக்க ஆரம்பித்தோம்.
படித்து முடித்து, பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு உடன் பணியாற்றியவருடன் காதல் மலர்ந்தது. பெற்றோரிடம் சண்டையிட்டு, எங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வைத்தேன். எங்கள் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னும் குடிப்பழக்கம் தொடர்கிறது. கணவருக்கு தெரியாமல் இருக்க, பிரம்மபிரயத்தன சாகசங்கள் செய்கிறேன். தாம்பத்யம் இருக்கும் நாட்களில் பல் துலக்கி, 'மவுத்வாஷ்' பயன்படுத்தி, கிராம்பு மென்று சமாளிக்கிறேன்.
குடிக்கும் என் சுதந்திரம் பறிபோய்விடுமோ என்று, குழந்தை பெறுவதை தள்ளிப் போடுகிறேன். மாதம் ஒரு முறை, 720 மில்லி ஜின் பாட்டிலை, கள்ளச் சந்தை இளைஞனிடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவேன்.
'நீங்கள் குடிப்பதை உங்கள் கணவரிடம் நான் சொல்லாமலிருக்க, என்னுடன் அவ்வப்போது படுக்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்...' என, 'பிளாக்மெயில்' செய்கிறான், அந்த இளைஞன்.
கணவரிடம் குடி, புகை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கம் எதுவும் இல்லை. கணவர் குடிக்க பழகினால், இருவரும் சேர்ந்து குடிக்கலாமே என, மனம் குயுக்தியாய் யோசிக்கிறது.
இப்படியே போனால் ஒருநாள் பெரும்குடிகாரியாகி ரோட்டில் கிடப்பேனோ... என் குடிப்பழக்கம் கணவருக்கு தெரிந்தால், அவர் விவாகரத்து செய்து விடுவாரோ... என் பெற்றோருக்கு தெரிந்தால், உறவு வட்டத்திலிருந்து துாக்கி எறியப்பட்டு விடுவேனோ...
தொடர்ந்து குடித்தால் மலடி ஆகிவிடுவேனோ, பார்க்கும் வேலையிலிருந்து விரட்டப் படுவேனோ... மிரட்டலுக்கு பயந்து, கள்ளச் சந்தை இளைஞனிடம் சோரம் போய் விடுவேனோ... தொடர்ந்து இளைஞனின் நண்பர்களின் ஆசைகளுக்கு இரையாகி விடுவேனோ?
இவ்வாறு ஆயிரக்கணக்கான கேள்விகள், என்னை வேட்டையாடுகின்றன. எனக்கு குடியை அறிமுகப்படுத்திய விடுதியறை தோழியை சபித்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன செய்தால் எனக்கு விடிவுகாலம் பிறக்கும், சொல்லுங்கள் அம்மா!
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
தற்சமயம் தமிழகத்தில் ஆண்கள், 27.3 சதவீதமும், பெண்கள், 1.6 சதவீதமும் குடி பழக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
விவாகரத்து பெற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், சம உரிமையை தவறாக புரிந்து கொண்டோர், உயர்தட்டு மக்களோடு கை குலுக்குபவர், அசுர வேகத்தில் பறக்கும் மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் போட்டி போட்டு பறப்போர், ஆண்களுடன் முட்டி மோதி குடிக்கின்றனர்.
ஒரே அளவு ஆல்கஹாலை ஆணும் பெண்ணும் குடித்தால், பெண்ணின் ரத்தத்தில் அதிக அளவு ஆல்கஹால் தேங்கி விடுகிறது. காரணம், சம எடை ஆணை விட பெண்ணுக்கு நீர் சத்து குறைவு. அத்துடன், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு, ஆல்கஹால் பாதிப்பை அதிகப்படுத்துகிறது.
குடிப்பழக்கமுள்ள பெண்ணுக்கு, மார்பக புற்றுநோயும், இதயநோயும் எளிதில் வருவதுடன், ஆணை விட கல்லீரல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. குடிப்பழக்கமுள்ள பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்.
மகளே, நான் சொல்லும் வழிகளை கடைப்பிடித்து போதை அரக்கனிடமிருந்து நிரந்தர விடுதலை பெறு.
* கள்ளச் சந்தை இளைஞனிடமிருந்து போதை பானத்தை வாங்குவதை உடனடியாக நிறுத்து. மொபைல் எண்ணை மாற்று. அவன் உன்னை நேரிலோ, மொபைலிலோ தொடர்பு கொள்ளும் எல்லா சாத்தியங்களையும் கத்தரி
* உன் குடிப்பழக்கத்தை பற்றி கணவனிடம் மூச்சு விடாதே. தாம்பத்யத்தை அதிகப்படுத்து. தற்காலிக கர்ப்பத்தடை முறைகளை உடனடியாக கைவிடு
* தனிமையில் இராதே. உறவுகளிடமும், நட்புகளிடமும் அன்பு பாராட்டு
* குடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்போது, பழச்சாறு அருந்து அல்லது வயிறு நிறைய சாப்பிடு
* இலவசமாய் குடியை மறக்க செய்யும், 'கார்னர் ஸ்டோன்' சேவை நிறுவனம், சென்னை திருமுல்லைவாயலில் இருக்கிறது. தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறலாம்.
மொபைல் எண்: 99944 74888/ 99944 73888
* சென்னையில் மட்டும், குடிப்பழக்கத்திலிருந்து மீள செய்யும் குழுக்கள், 200க்கும் மேல் உள்ளன. அவற்றில், 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இணையதளத்தில் தேடினால் பொருத்தமான குழுக்கள் காண கிடைக்கும்.
மேற்சொன்ன இருவழிகள் அல்லாமல், மன நல நிபுணரை அணுகி, ஆலோசனை பெறு.
குடிப்பழக்கத்தை கைவிட்டு, அழகான குழந்தைகள் இரண்டு பெற்று, கணவருடன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் வேண்டப்பட்ட பெண்ணாக, சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்