அல்லிகளும், குளங்களும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அல்லிகளும், குளங்களும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
00:00

மொபைல் போனில் அம்மா அழைக்கவே, எடுத்த பூட்டை அப்படியே வைத்து, ''சொல்லுங்கம்மா,'' என்றான், குமார்.
''கண்ணு குமாரு... எப்புடிடா இருக்குற, சாப்புட்டியா?'' என்று எப்போதும் போல அன்பு பொங்கும் வார்த்தைகளால் கேட்டாள், அம்மா.
''நல்லா இருக்கேம்மா... சாப்பிட்டேன்; வேலைக்கு கிளம்பிட்டுருக்கேன். நீ, பாபு, அக்கா எல்லாரும் நலம் தானே,'' என்றான்.
வார்த்தைகளுக்கு இடையே இருந்த தயக்கத்தையும், கவலையையும் அம்மாவால் எப்படி புரிந்து கொள்ள முடியாமல் போகும்!

''ஒம்புண்ணியத்துல எல்லாரும் சுகம் தான். பாபுவுக்கு பிறந்த நாள் பரிசா, கலர், பிரஷ், போர்டுன்னு அனுப்புனல்ல, அவன், அம்புட்டு சந்தோஷமா ஊரு பூரா சுத்தி சுத்தி வந்து, 'என் மாமன் அனுப்புனது, என் மாமன் அனுப்புனது'ன்னு கும்மாளம் தான்... சொன்னா நீயும் சந்தோஷப்படுவன்னு தான் போன் போட்டேன் கண்ணு.''
''அப்படியா, ரொம்ப மகிழ்ச்சிம்மா. இந்த மாமாவால இப்போதைக்கு இவ்வளவுதான் செய்ய முடியுது. பார்க்கலாம், காலம் வரும். அவன நல்லா படிக்கச் சொல்லும்மா.''
''கண்டிப்பா சொல்றேன் கண்ணு... குமாரு, நீ எப்புடிப்பா இருக்குற... கோவமா எங்க மேல, உன் கனவெல்லாம் எங்களாலதான செதஞ்சு போச்சு... நெனச்சா, எனக்கு ஒறக்கமே வரலடா கண்ணு,'' தழுதழுத்தாள், அம்மா.
தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட மாதிரி இருந்தது. கண்களை ஒரு கணம் மூடி, தலையை உதறி, இயல்பு நிலைக்கு வந்தான்.
''அம்மா... உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன், என்னைப்பத்தி எந்தக் கவலையும் வேண்டாம் உனக்கு... 'விரும்புனது கெடைக்கலென்னா கெடச்சத விரும்ப வேண்டியது தான்' தெரியுமில்ல, பழைய சினிமா வசனம். நான் அப்படித்தான்.
''சினிமால ஏதோ ஒரு துறையில சாதிக்கணும்ன்னு வெறியா இருந்தேன் தான்... அனுமன்மலை கிராமத்தையும், உன்னை, அக்காவை, பாபுவையும் விட்டு வந்தேன் தான்... எட்டு வருஷம் நாய் படாத பாடு பட்டேன்... இப்ப, புத்தன் மாதிரி அறிவுல தெளிவு வந்துட்டுது.
''சினிமாவுக்கு நானும், எனக்கு சினிமாவும் சரி வராதுன்னு, பருத்தி ஆலை சூப்பர்வைசரா நிம்மதியா இருக்கேன். சம்பளம் பெரிசா இல்லே; தனி மனித வாழ்க்கை; ஒரே அறையில சமையல், துாக்கம், குளியல் எல்லாம். ஆனாலும், எம் மனசு அடங்கி, அமைதியா இருக்குது. ஓம்மேல சத்தியம், போதுமா... இனி, நீ இந்த விஷயத்துல மூக்கை உறிஞ்சக் கூடாது... சரியாம்மா?''
''சரிப்பா... முடிஞ்சா இந்த தீவாளிக்காச்சும் ஊர் பக்கம் வந்துட்டுப் போ... வெச்சுடவா தங்கம், உடம்ப பார்த்துக்கப்பா.''

ஊரில், அல்லிக்குளம் நிறைய தாமரைகளும், தவளைகளும் இருக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. உடனே, போய் பார்க்க வேண்டும். பூட்டை எடுத்தபோது, வாசலில் நிழல் தெரிந்தது.
சந்திரன் நின்றிருந்தான்.
'சந்திரனா... கறுத்து, முகம் இறுகி, ஒற்றைக்கொம்பு போல... என்ன இப்படி ஆகிவிட்டான்?' என நினைத்தபடி, ''சந்திரா... உள்ளே வாப்பா,'' என்று, அவன் கைபற்றினான், குமார்.
மதுவின் நெடி, குமாருக்கு வயிற்றைப் புரட்டியது.
பதில் சொல்ல முடியாமல் சந்திரனின் தலை ஆடியது. சுவரைப் பற்றிக் கொண்டான்.
''குமார்... என்னடா உலகம், என்ன ஊருடா இது?'' என்றபடியே கட்டிலில் தொப்பென சரிந்தான், சந்திரன்.
''இரு... மொதல்ல தண்ணி குடி.''
ஒரு குவளை நீரை ஒரே விழுங்கில் குடித்தான்.
''குமாரு... இதெல்லாம் ஊரே இல்லடா... நம் தலை எழுத்து, சினிமா சினிமான்னு பைத்தியம் பிடிச்சு ஓடியாந்தோம்... சினிமா, நம்மள வேட்டை ஆடுது... நான் தோத்துட்டேண்டா குமாரு.''
விம்மி அழும் நண்பனை வெறுமையுடன் பார்த்தான். என்ன, நான் குடிக்கு அடிமை ஆகவில்லை அவ்வளவு தான். மற்றபடி, அவனும் இதே சந்திரன் நிலைமையில் தானே இருந்தான்.
எவ்வளவு வாசிப்பு, எவ்வளவு திரைக்கதைகள், எவ்வளவு அயல் சினிமாக்கள், எவ்வளவு கனவுகள்... இன்று விடிந்து விடும், இன்று வெள்ளி முளைக்கும் என்று வானத்தைப் பார்த்து மயங்கிக் கிடந்த நாட்கள் தான் எத்தனை... தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என்று காத்துக் கிடந்த வாசல்கள் தான் எத்தனை?
திடீரென மார்பில் அடித்து, ''நேத்து வெளியான மாயன் உலகம் பார்த்தியா, 100 கோடி பட்ஜெட்; அவ்வளவு ரகசியமா எடுத்திருக்காணுக... என் கதைடா குமாரு... இவன் வீட்டு வாசல்ல போன வாரம் கூட, சீக்காளி மாதிரி எட்டு மணி நேரம் நின்னிருந்தேன்டா... இப்படி மோசம் பண்ணிட்டானே...'' என்றான், சந்திரன்.
''நமக்கு இது புதுசா, 'டிஸ்கஷன்'ல எவ்வளவு ஐடியா கொடுப்போம்... ரெண்டு, 100 ரூபாய்க்கு. பெரிய சினிமால, பெரிய 'ஷாட்'ல, நம்ம ஐடியா வரும்... அவ்வளவு கை தட்டல் கேட்கும்... ஆனா, கண்ணீரும், வலியும் தான் நமக்கு மிச்சம். விடு சந்திரா...
''இது, சினிமா காத்து... இதை எதிர்த்து பறக்க நாம வலிமையான பருந்தோ, கழுகோ இல்லை. ஆனால், நம் கையில் பட்டம் இருக்கு; அதை பறக்க விடலாம். அதை புரிஞ்சுகிட்டேன் சந்திரா. இல்லை இல்லை, என்னை நானே புரிஞ்சுகிட்டேன்.
''இப்ப நான் விடுகிற பட்டம் தான், குடும்பத்தை காப்பாத்துது, என்னையும் காப்பாத்துது. உனக்கும் இது புரியும், இதை ஒப்புக்கிட்டதால நாம தோல்வியாளர்கள் இல்லே... கொஞ்சமாவது முயற்சி செய்தோம் இல்லையா... கனவுகளை முயன்று பார்க்காம தோக்கறதுதானே உண்மையான தோல்வி... என் அனுபவத்துல இருந்து சொல்றேன் நண்பா... சரியா?''
பதில் சொல்லாமல் வெறுமையாக ஜன்னல் வழியே பார்த்தான், சந்திரன்.
''இனி, நீ என் கூடவே எவ்வளவு காலம் வேணும்னாலும் இரு... உன் மனசு கொஞ்சம் சரியாகட்டும்... உனக்கு, என் கம்பெனியிலேயே வேலை கேக்குறேன். லெமன் ரைஸ், ஊறுகாய், சிப்ஸ் இருக்கு. பசிக்கறப்ப சாப்பிடு; நிம்மதியா உறங்கு; மனம் தெளியட்டும். 6:00 மணிக்கு சந்திக்கலாம். கிளம்பறேன், சந்திரா.''
எப்போதும்போல, கைகள் வேலையில் இயங்கிக் கொண்டிருந்தாலும், உணர்வுகள் சுணங்கிக் கிடந்தன. நண்பனுக்கு இது மிகக்கொடிய காலம். தாண்டி வருவது மிகக் கடினம். அசாத்திய மன உறுதி வேண்டும். தீராத துயரத்தை சொந்த பொறுமையால் மட்டுமே தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
தன்னையே தீயிலிட்டு வருத்தி, ஒரு யட்சன் போல, உண்டாக்கிய கனவுகளை தானே தீயிலிட்டுப் பொசுக்கி விட வேண்டும். மிகப்பெரிய சாகசம் இது; நயாகரா அருவியின் மேல் ஒரு கொடிக்கயிறு கட்டி நடப்பது போல... அந்தக் கொடிய கணப் பொழுதுகளைப் பொறுமையாகக் கடந்து வரட்டும், சந்திரன்.
மொபைல் போன் அழைத்தது.
''குமார்... ரகுபதி பேசறேன், சந்திரனை பார்த்தியா?'' என்று எடுத்த எடுப்பில் நண்பனின் பதற்றமான குரல்.
''ஆமாம்டா ரகு... நான் வேலைக்கு கிளம்பும்போது வந்தான். கொதிநிலைல இருந்தான். கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, என் அறையில இருக்க வெச்சிருக்கேன்... ஏம்பா?''
''அய்யோ, அவன் மனநிலை சரியில்லடா குமாரு... நேத்து, 'பாபுராவ் மேன்ஷன்' மாடியிலருந்து குதிக்க பார்த்திருக்கான்... நாலு நாள் முன்ன, மெரினா அலைக்குள்ள போயிட்டானாம்... மீனவர்கள் பார்த்து காப்பாத்தியிருக்காங்க...
''நேத்து முழுக்க, என் அறையில கூடவே வெச்சிருந்தேன். காலை பார்த்தா ஆளைக் காணோம்... குமாரு, அவன் ரொம்ப நொந்து நொம்பலா இருக்கான்... அவன தனியா விடக் கூடாதுடா.''
''என்னடா சொல்றே ரகு... பயமா இருக்கு, இப்ப நான் வேலைல இருக்கேன். போன் பண்ணி பார்க்கவா?''
''போன் போவலடா... 'சுவிட்ச் ஆப்'ன்னு வருது. எனக்கு, உன் விலாசம் தெரியாது. கால் எலும்பு முறிவுனால நடக்க முடியாம இருக்கேன். ப்ளீஸ்... உடனே போய் பார்த்து, என்கிட்ட கொண்டாந்து விட்டுடு... பாவம்டா அவன், ஊர்ல பெரிய குடும்பமே அவன நம்பியிருக்கு.''
''இதோ இப்பவே போறேன்.''
உள்ளே இதயம் ஆயிரம் மடங்கு துடித்தது.
'சே... எப்படி உணராமல் போனோம். அவன் தோற்றம், பேச்சு, வலி, விம்மல் என்று எல்லாம் பார்த்தும், ஏன் உறைக்கவில்லை? நாலடி எடுத்து வைத்தால் இருப்புப் பாதை, அதிலும், அபாயகரமான வளைவு. இரண்டு நாட்களுக்கு ஒரு தற்கொலை, விபத்து.
'அய்யோ சந்திரன்... நான் முட்டாள், உணவுண்டு உறங்கி விடுவாய் என்று நம்பினேன். உள்ளே உலகப்போர் நிகழும்போது, எப்படி துாக்கம் வரும்?'
வீடு பூட்டியிருந்தது. அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
பக்கத்து காம்பவுண்ட் தாண்டி, கூக்குரல்கள் கேட்டன. ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், மெல்ல நகர்ந்தது.
ஓடினான். கூட்டம் கூடியிருக்க, புடவைத் தலைப்பை வாய்க்குள் வைத்து அதிர்ச்சி முகங்களுடன் இருந்த பெண்கள். இருப்புப்பாதையில் தெறித்து இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தம். போனில் பேசியபடியே கூட்டத்தை விரட்டிய காவலர்கள். இன்னும் கூட்டம் சேர்ந்தது.
''சந்திரா... அய்யய்யோ... உன்னை நானே கொன்னுட்டேனா?''
''குமார்... நீ எங்கே இப்படி?'' என்ற குரல்.
''சந்திரா... உனக்கு ஒண்ணுமில்லையே... நல்லா இருக்கல்ல? நான் பயந்து, ஓடி... இங்க விபத்து,'' தடுமாறினான், குமார்.
''ஆமாம்டா குமார்... செத்து ஒழியலாம்ன்னுதான் வந்தேன்; பாருடா அங்க,'' என, கை காட்டினான், சந்திரன்.
இளம் பெண் ஒருத்தியின் உடல் துண்டு துண்டாய் சிதறிக் கிடந்தது.
'கோகி, எங்கண்ணு... இப்புடி பண்ணிட்டியேடி... என்னாடி தப்பு செஞ்சோம். பாஸாவலேன்னா என்ன... அப்பா ரெண்டு வாட்டி திட்டினா கேட்டுக்க கூடாதா? இப்புடி தண்டவாளத்துல... அய்யோ, முப்பாத்தா... உனக்கு கண்ணே இல்லயா?' தாயும், தந்தையும் கதறித் துடித்த கொடுமையான காட்சி.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டான், குமார்.
''தன் உயிரைப் போக்கிக்கிட்டாளே, அந்த சின்னப் பொண்ணு. அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா... இதோ ஒண்ணும் தெரியாத தாய், தகப்பனை கதற வெக்கிறாளே இதுதான் குற்றம். நம் உசிரு நமக்கு சொந்தம் இல்லடா... அது மத்தவங்களுக்கானது, பெத்து வளத்தவங்களுக்கானது... தம்பி, தங்கச்சிங்களுக்கானது...
''சாகறதுக்கு ஆயிரம் வழிய யோசிக்கிற மனசு, வாழறதுக்கு பத்து வழியாவது யோசிக்கலாம்லடா... குற்றங்களிலேயே பெரிய குற்றம் தற்கொலை தான்... சுயநலத்துலயே பெரிய சுயநலம் தற்கொலை தான்... இப்பதாண்டா புரியுது...
''ஒருநாளும் இதுபோல வேதனைய என் குடும்பத்துக்கு தர மாட்டேன்டா... சினிமா என்னடா சினிமா, 800 கோடி பேருக்கு இடம் கொடுத்திருக்கிற பூமி, எனக்கும் ஒரு காணி நிலம் தராமலா போயிடும்? அய்யோ... இந்த பொண்ணு பண்ணுனது மகா பாதகம்டா... இந்த தாய், தகப்பனுக்கு நாம ஏதாவது செய்யணும்டா,'' என்றான், சந்திரன்.
நம்பிக்கையின் சிறிய கீற்று ஒன்று எப்போதும் இருக்கும் என்று தோன்றியது. நண்பனை இழுத்து, அணைத்துக் கொண்டான், குமார்.

ராஜ்யஸ்ரீ

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X