முன்கதை சுருக்கம்: ஆராதனாவிடம் தன் அத்தையை, ராமலிங்கம் ஏமாற்றிய கதையை கூறினான், விக்ரம்
சீக்கிரம் பொழுது விடிய வேண்டும் என நினைத்து, அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தாள், சுகந்தி. வேண்டுமென்றே நேரம் மெதுவாக நகருவது மாதிரி தோன்றியது. துாக்கம் வரவில்லை.
நிறைய ஸ்வீட், பழங்கள் எல்லாம் வாங்கி, இருவரும், 'டிவிஎஸ் 50ல்' ராமலிங்கத்தை பார்க்க சென்றனர். என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்ற சம்பிரதாயப் பேச்சு முடிந்தது.
'உங்களை கட்டிக்கலன்னா இவ உயிரையே விட்டுடுவான்னு நினைக்கிறேன். இவ்வளவு அழுத்தமான காதல நான் பார்த்ததில்லை...' என்று சிரித்தபடி சொன்னான், முத்துராமன்.
வெட்கத்தில் தலை குனிந்தாள், சுகந்தி.
பட்டும் படாமலும் உட்கார்ந்திருந்தான், ராமலிங்கம்.
'ராமலிங்கம்... எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்?'
'காபி சாப்பிட்டுட்டு பேசுவோம்...' என்றவன், 'காபி ரெடியா?' உள்ளே குரல் கொடுத்தான்.
ஒரு இளம்பெண், ட்ரேயில் மூன்று டம்ளர் காபி எடுத்து வந்து கொடுத்தாள். முத்துராமனும், சுகந்தியும் புரியாமல் பார்த்து கொண்டனர்.
'இவ சுமதி. என் சம்சாரம்...' என்று, அவன் சொன்ன மாத்திரத்தில், முத்துராமன் கையில் இருந்த காபி டம்ளர் கீழே விழுந்தது.
அதிர்ச்சியில் கண்கள் அகலமாகி உடம்பு நடுங்க ராமலிங்கத்தை பார்த்தாள், சுகந்தி.
'என்ன மன்னிச்சிடு சுகந்தி. அம்மா, உடம்பு சரியில்லைன்னு என்னை ஊருக்கு வரவழைச்சது, சுமதியை கல்யாணம் பண்ணி வைக்கதான்னு, அப்புறம் தான் தெரிஞ்சது...' அவன் வருத்தப்பட்டு சொன்ன மாதிரி தெரியவில்லை.
'அடப்பாவி... உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக, நான் ஏற்பாடு பண்ணின பையனை வேண்டாம்ன்னு சொன்னாளே. அவ எங்க, நீ எங்க... உனக்கெல்லாம் எதுக்குடா காதல்... இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும் நீ பொழுது போக்க ஒரு பொண்ணு வேணும். அதுக்கு என் தங்கச்சிய ஏமாத்தி இருக்க.
'உன் மனசுல உண்மையான காதல் இருந்திருந்தா இவளை ஏமாத்தியிருப்பியா? வசதியான வீட்டுப் பொண்ணு கிடைச்சதும், 'மெஸ்' நடத்துற சாதாரண பெண்ணை துாக்கி எறிஞ்சிட்டேல்ல, படுபாவி. எந்த ஆம்பளையும் ஏறெடுத்துப் பார்க்காம வாழ்ந்துகிட்டு இருந்தவ மனச கெடுத்து, இப்படி அந்தரத்தில் விட்டுட்டியே. நீ உருப்படுவியா?' கோபத்தில் கத்தினான், முத்துராமன்.
வருத்தமாக கையெடுத்துக் கும்பிட்டு, 'ஐயா... எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது... இந்த ஊருக்கு இவர் வர்றதுக்கு முன்னாலேயே எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு...' என்றாள், சுமதி.
இடி விழுந்தது போல், முத்துராமனும், சுகந்தியும் அதிர்ந்தனர்.
'பொய் சொல்லி, உங்க தங்கச்சிய அவர் ஏமாத்தினது மன்னிக்கவே முடியாத தப்பு. வலுக்கட்டாயமா நான், இவரு கூட கிளம்பி வந்ததுனால, எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
'உயிரை கொல்றது மட்டும் கொலை இல்லைங்க. உணர்ச்சியை கொல்றதும் கொலை தான். அந்த பொண்ணோட மனசு படற வேதனை உங்களுக்கு புரியுதா?
'அம்மா உடம்பு சரியில்லைன்னு என்னை ஊருக்கு வரவழைத்தது சுமதியை கல்யாணம் பண்ணி வைக்கதான்னு என் முன்னாடியே கூசாம சொல்றீங்களே. எவ்வளவு பெரிய பொய்... உங்களையே நினைச்சுக்கிட்டுருக்கற அந்த பொண்ணுக்கு என்ன வழி?' என்றாள், சுமதி.
'முத்துராமன் ஐயா... நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. சுமதி கொஞ்சம் வெகுளி. அவளுக்கு எங்கே என்ன பேசுறதுன்னே தெரியாது. நாம் வேற விஷயம் பேசிக்கிட்டிருக்கோம். இவ தேவையில்லாம எங்க கல்யாண விஷயத்தை பத்தி பேசறா...' என்றான், ராமலிங்கம்.
'உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுங்கற விஷயத்தை மறைச்சது தேவை இல்லாத விஷயமா?'
'ஆத்திரப்படாம கேளுங்க... உங்க தங்கச்சியை நான் காதலிச்சது வாஸ்தவம். ஊரெல்லாம் சுத்தினோம். இல்லைன்னு சொல்லல. ஆனா, எப்பவாவது வரம்பு மீறி நடந்திருக்கேனா? தவிர, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு உங்க தங்கச்சியும் கேக்கல. அதனால, நான் சொல்லல. இதுல எப்படி என் பேர்ல தப்பு?'
சுகந்தியின் கண்களை கண்ணீர் திரையிட்டு மறைக்க, இரண்டு கைகளாலும் அதிர்ச்சியுடன் வாயை மூடிக்கொண்டாள்.
'கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம, பழியை இன்னொருத்தர் மேல துாக்கி போடறியே... உன்னை நானா காதலிச்சேன்; உன் கூடவா சுத்தினேன். முன்னெல்லாம் அன்பா பேசின நீயா, இப்போ ஆணவமா பேசுற? உன் குணத்தை முதல்லேயே தெரிஞ்சுக்காம போயிட்டேனே...'- மனதுக்குள் குமுறினாள், சுகந்தி.
'சுமதி... அந்த பொண்ணுக்கு என்ன வழின்னு கேக்கற... அப்படின்னா, அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்றியா?'
சுமதி புரியாமல் பார்க்க, முத்துராமனிடம், 'ஐயா... உங்க தங்கச்சி ரெண்டாவது பொண்டாட்டியா போறது உங்களுக்கு ஓ.கே.,யா?' என்ற ராமலிங்கம், 'சுகந்தி... நான் வேலை விஷயமா எத்தனையோ ஊருக்கு போறேன். நிறைய பேரோட பழகுறேன். எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?
'ஒருத்தரை காதலிச்சிட்டு இன்னொருத்தரை கல்யாணம் செஞ்சுக்கறது உலகத்துல நடக்கறது தான். நடந்ததை மறந்திடு. நானே வேணும்னா உனக்கு ஒரு நல்ல பையனா பார்க்கறேன். இல்லை... என்னை விட அழகா, உன், 'மெஸ்'சுக்கு யாராவது வராமலா போயிடுவாங்க?'
பைத்தியம் பிடித்தது போல் அழுதபடி அங்கிருந்து ஓடினாள், சுகந்தி.
'சுகந்தி...' என்று கத்தியபடி முத்துராமனும் பின்னாலேயே ஓடினான்.
'அப்பா, அத்தைக்கு என்னப்பா...' கேட்டான், விக்ரம்.
'ஒண்ணும் இல்லப்பா...'
'அப்படின்னா ஏன் என் கூட விளையாட மாட்டேங்கிறாங்க, துாங்க மாட்டேங்கிறாங்க. தனியா எங்கேயோ பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்காங்க, சொல்லுப்பா...' என்றான்.
'என்னை ஏமாத்திட்டாண்ணா... என்னை ஏமாத்திட்டாண்ணா...' என்று நடு ராத்திரியில் எழுந்து கத்துவாள், சுகந்தி.
எதையாவது துாக்கி போட்டு உடைப்பாள். சாப்பிடாமல், ஒழுங்காக தலை வாராமல், சரியாக உடுத்தாமல், சமயத்தில் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
இது எல்லாமே முத்துராமனுக்கு சொல்ல முடியாத வேதனையாக இருந்தது.
'ஏம்பா, டாக்டர்கிட்ட காட்ட வேண்டியது தானே... பூசாரிகிட்ட கூட்டிட்டு போய் மந்திரிச்சு விடு...' என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஆளுக்கொரு வைத்தியமாக கூறினர்.
மிகவும் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை என்பதால் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியில், மனநிலை குழம்பி இருப்பது, முத்துராமனுக்கு மட்டுமே புரிந்தது.
வலுக்கட்டாயமாக அவளை டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போனால் அங்கேயும், 'என்னை ஏமாத்திட்டான் ஏமாத்திட்டான்...' என்றே கத்துவாள், சுகந்தி.
எதுவுமே புரியாமல் சின்ன பையன் விக்ரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அழகாக இருந்த சுகந்தி நாளாக, நாளாக இளைத்துக் கொண்டே வந்தாள். அத்தையை அப்படி பார்த்ததில் விக்ரமுக்கு அழுகை வந்தது.
'மதுரையிலே எனக்கு தெரிஞ்ச மன நல மருத்துவர் இருக்கார். அவர் கிட்ட கூட்டிட்டு போங்க. 10 நாள் தங்கி பார்த்துட்டு வாங்க...' என தெரிந்த டாக்டர் ஒருவர், முத்துராமனுக்கு கடிதம் கொடுத்தார்.
'மெஸ்' பையனை சுகந்திக்கு துணையாக வைத்துவிட்டு, விக்ரமுடன் மதுரைக்கு டிக்கெட் வாங்க கிளம்பினான், முத்துராமன்.
வாசலுக்கு வந்தபோது வண்டி சாவியை மறந்ததால் எடுத்துவர உள்ளே போனான். உள்ளே, எந்த அசைவுமின்றி சுகந்தி அமைதியாக படுத்திருந்தாள். அருகில் சென்று பார்த்தான்.
மதுரைக்கு டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது; இறந்து போயிருந்தாள், சுகந்தி.
- தொடரும்.
கோபு பாபு