பணி/ஓய்வு நேரமென்ற வரையறைகள் எதுவுமில்லை லில்லிமேரிக்கு; மருத்துவ உதவி வேண்டி யார் எந்நேரம் அழைத்தாலும் தயங்காமல் முன் வந்து நிற்கிறார். 'லில்லியம்மா பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது' - கிராமத்து மக்களின் இவ்வார்த்தைகளே செவிலி லில்லியின் அன்பிற்கும் அர்ப்பணிப்புக்குமான சாட்சி!
பணி துவக்கம்: 2007
முதல் களம்: உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், கரூர்.
பதவி: கிராம சுகாதார செவிலி
பணி அனுபவம்: 15 ஆண்டுகள்
பிரசவ வலி
தன் கண்காணிப்புக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பெண்கள் கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரைக்கும் தனிக்கவனம் செலுத்தும் பழக்கம் கொண்டவர் லில்லி. மின்சாரம் இல்லாத இரவுகளிலும் பிரசவம் பார்த்து, இரு உயிர்களையும் கரை சேர்த்த பெரும் அனுபவம் பல செவிலியர் போல் இவருக்கும் உண்டு!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்திற்கு உட்பட்ட செங்கமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றும் லில்லிக்கு தற்போது வயது 50; 'வயது கூடகூடத்தான் என் ஓட்டத்துல வேகம் கூடுறதை உணர்றேன்' என்கிறார்.
குடும்ப கட்டுப்பாடு
குடும்ப கட்டுப்பாடு பற்றி கிராமங்கள்ல இன்னும் விழிப்புணர்வு இல்லை. நான் அதைப்பற்றி பேசினாலே, 'நாங்க குழந்தை பெத்துக்கிட்டா உங்களுக்கு என்ன'ன்னு கோபப்பட்டாங்க! 'முதல் குழந்தையோட பசி அடக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிற பொருளாதார சூழல்ல, இன்னொரு குழந்தை பெத்துக்கிறது அந்த உயிருக்கு செய்ற துரோகம்'னு கொஞ்சம் கொஞ்சமா புரிய வைச்சேன். இன்னைக்கு, என் பார்வையில எந்த உயிரும் சிரமப்படலை!
'இதுவும் கடந்து போகும்' - இதை நம்புறீங்களா லில்லி?
எனக்கு 19 வயசுல திருமணம்; 20 வயசுல மகள் பிறந்தா; அடுத்த ஆண்டே கணவர் விலகிட்டார். எதிர்காலம் கேள்விக்குறியா நின்னப்போ மகளை அம்மாகிட்டே கொடுத்துட்டு படிக்கப் போனேன்.
இப்போ மகளுக்கு திருமணமாகி பேரனை பார்த்துட்டேன்! சந்தோஷத்தையும், அழுகையையும் ஊடுருவி பார்க்கவும், அனுபவம் பெறவும் வாய்ப்பு தர்ற பணி; 'எதுவும் நிரந்தரம் இல்லை'ன்னு மனப்பூர்வமா நம்புறேன்!
100 சதவீதம்
'எங்களுக்கு கொரோனா ஊசி போட பயமா இருக்கு லில்லியம்மா; நீங்க சொல்றதால நம்பிக்கையோட போட்டுக்குறோம்'னு சொல்லி, என் கண்காணிப்புக்கு உட்பட்ட அம்மையாண்டி பஞ்சாயத்துல எல்லாரும் ஒத்துழைச்சாங்க; 100 சதவீதம் தடுப்பூசி போட்டாச்சு; செங்கமங்கலம் பஞ்சாயத்துலேயும் சீக்கிரம் இது சாத்தியமாயிடும்.
சுருக்!
'நோய் வரணும்... மீளணும்'னு விரும்புங்க; அப்போதான் வாழ்க்கையோட உண்மையான ருசி தெரியும்!