சிவகாசி, இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1995ல், 1௧ம் வகுப்பு படித்தேன். காலாண்டு வேதியியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கேள்விகளுக்கு விளக்கமாக பதில் எழுதி விட்டேன்; படம் வரைய நேரம் இல்லை. அவசரமாக குடுவை, பீக்கர் என கிறுக்கி, பாகங்களை குறித்து கொடுத்தேன்.திருத்திய விடைத்தாளுடன் வந்த வேதியியல் ஆசிரியை மேரி பாலா, 'என்ன இது... படமா வரைந்து இருக்கிறாய்; முறையாக வரைய வேண்டாமா...' என கூறியபடி, கையை திருப்பி நீட்ட சொல்லி, மரக்கட்டை அளவுகோலால் மாறி மாறி அடித்தார்.வேதனையில் நெளிந்தபோது, 'அடியாத மாடு படியாது...' என கண்டித்தார். அழுதபடி நின்ற என்னிடம், 'விடைத்தாளில் நீ வரையும் படத்தைப் பார்த்ததும் மதிப்பெண் போட்டுவிடுவர். பின்தான் விளக்கவுரையைப் பார்ப்பர். இது இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கும் பொருந்தும். எனவே அழகாக வரைவதில் கவனம் செலுத்து...' என அறிவுரைத்தார். அதை வேத வாக்காக பின்பற்றினேன்.அன்று முதல் முறையாக வரைந்து, பாகங்களை குறித்த பின், விளக்கவுரை எழுதுவதை வழக்கமாக்கினேன். அடுத்த முறை விடைத் தாளை திருத்திய போது, என் மாற்றத்தை சுட்டிக்காட்டி பாராட்டினார். அடி தந்த வேதனையால், அந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தற்போது, என் வயது, 42; அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் நெகிழ்ச்சியாக உள்ளது.- ரா.ஞானசெல்வி, மதுரை.