கடலுார் மாவட்டம், பி.முட்லுார், வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், 2004ல், 7ம் வகுப்பு படித்த போது அறிவியல் ஆசிரியராக இருந்தார், ராதாகிருஷ்ணன். அன்று பாடம் நடத்தியபோது, 'மோர் ஊற்றாமல் பாலை உறைய வைப்பது எப்படி...' என்று கேட்டார்.நான் எழுந்து, 'ஐயா... சிறிய பச்சை மிளகாயை கிள்ளி போட்டால் தயிர் ஆகும்...' என்றேன்.மாணவ, மாணவியர் ஆரவாரித்தபடி, 'சமையல்காரி...' என ஏளனமாக சிரித்தனர். அவர்களை அடக்கி, 'படிப்பில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், இந்த விடையை கூறியிருக்க முடியாது. வீட்டில் சமையலறையில் நடப்பதை எல்லாம் உற்று கவனித்ததால் தான் தக்க பதிலை கூறியிருக்கிறாள்...' என, பாராட்டினார் ஆசிரியர்.இந்த புகழுரையை, 'படிப்பு எதுவாக இருந்தாலும் சிந்தனையுடன் கூடிய கடின உழைப்பு இருந்தால், எந்த துறையிலும் முன்னேறலாம்' என எடுத்துக் கொண்டேன். அதை மனதில் கொண்டு தொடர்ந்து கவனம் செலுத்தி படித்து, கணிதத்தில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றேன். பிரபல நிறுவனத்தின் கணினி பிரிவில் மிகப்பெரிய பதவி வகிக்கிறேன்.என் வயது, 28: அந்த ஆசிரியரை பார்த்து, 17 ஆண்டுகளாகின்றன. என் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அவரது பாதங்களில் விழுந்து வணங்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.- அ.காமாட்சி, கடலுார்.தொடர்புக்கு: 93612 86279