முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடந்த டைனோசர் உடலை வெட்டி, நவீன அறிவியல் தொழில் நுட்பத்தில் டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அதை பாதுகாப்பாக வளர்ப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டன. இனி -
''அப்படி எதுவும் ஆகாது அப்பா... என் டைனோ, 100 வருஷம் உயிரோட இருக்கும்...'' என்றான் சந்திரஜெயன்.
''டைனோவை, தோட்டத்துக்கு அழைத்து வா; மீதிய அங்க போய் பேசுவோம்...'' என்றார் சந்திரஜெயனின் அப்பா மந்திரமூர்த்தி.
தோட்டத்துக்கு சென்றனர்.
''உனக்கு எத்தனை நாள் அவகாசம் கொடுத்தேன்...''
''15 நாள் கொடுத்தீங்கப்பா...''
''இன்னையோட எத்தனை நாளாகுது...''
விரல் விட்டு எண்ணினான் சந்திரஜெயன்.
''15 நாள் முடிஞ்சிருச்சு...''
''என்ன முடிவு எடுத்திருக்கேன் தெரியுமா...''
''இன்னைக்கி சாயங்காலமே டைனோவை அழைத்துச் சென்று, யோகிபாபு மாமா கிட்ட விட்டுட்டு வர சொல்வீங்க...''
''சாயங்காலம் கிளம்புற வழிய பாரு...''
'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா' என்ற பாணியில், சமிக்ஞை காட்டியது சின்சான்.
ஒரு ரோஜாப்பூவை பறித்தது டைனோ; ஜப்பானிய முறையில், மரியாதையுடன் குனிந்து பூவை பரிசளித்தது.
அதை வாங்கியபடி, ''காக்கா புடிக்றியா டைனோ...'' என்றார் மந்திரமூர்த்தி.
'சேச்சே... ஐஸ் வைக்கிறேன்'
சமிக்ஞையில் பேசியது டைனோ.
''ஏன்டா ஒரு பிறந்த நாள் பரிசை உன் மாமா கொடுத்தான்; அதை பத்திரமா வீட்ல வெச்சுருக்கிறத விட்டுட்டு, பெருமைக்கு வெளியிடங்களுக்கு துாக்கிட்டு போற... இது நியாயமா... டைனோவுக்கு எதாவது ஆச்சுன்னா, என்ன பதில் சொல்லுவ...'' என்றார்.
'என்ன... அப்பா தோசையை மாத்தி போடுறாரு' என எண்ணியபடி, ''என்னப்பா சொல்றீங்க...'' என்றான் சந்திரஜெயன்.
''டைனோ வந்த முதல் நாளே எனக்கு அதைப் பிடிச்சு போச்சு; சும்மா உன்னை வம்பு செய்றதுக்காக மாத்தி பேசினேன். ௧௫ நாள் கொடுத்ததெல்லாம் சும்மா உலவாக்காட்டி; இனி, டைனோ நம்ம கூட தான், எப்பவும் இருக்கப் போகுது...''
''அப்பா...''
கண்ணீர் மல்க, டைனோவை அரைகுறையாய் துாக்கி கூத்தாடினான்.
''உனக்கும், எனக்கும் ஓடுறது ஒரே ரத்தம்; நீயும், மிருகங்களின் காதலன், நானும் மிருகங்களின் காதலன். என்ன... என் கிட்ட கொஞ்சம் மனப்பக்குவம் கூடுதலா இருக்கும்... ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி, அது நடக்குறதுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வேன்...''
''ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அப்பா...''
அங்குமிங்கும் ஓடியது டைனோ; பின் செங்குத்தாக நின்று சந்திரஜெயனின் அப்பாவுக்கு ஒரு ராணுவ சல்யூட் அடித்தது.
பதிலுக்கு அவரும் சல்யூட் அடித்தார்.
வாசலில், ஒரு நான்கு சக்கர வாகனம் தரை தேய்த்து நின்றது; அதன் நான்கு கதவுகளும் திறந்தன.
புல்சூட் வெளிநாட்டு ஆசாமிகள், காரிலிருந்து இறங்கினர்; நால்வரும் குளிர்கண்ணாடி அணிந்திருந்தனர். ஒருவன் கனத்த சூட்கேஸ் வைத்திருந்தான்.
வெளி வாசலில் அழைப்பு மணி அமுக்கினர்.
கதவை திறந்த சந்திரஜெயனிடம், 'உள்ளே வரலாமா...' என்றனர் கோரசாய்!
''வாருங்கள்...'' என்றான் சந்திரஜெயன்.
நால்வருக்கு இடையே, குர்தாவும், ஜிப்பாவும் அணிந்த இரட்டை நாடி மனிதர் குதித்தார்.
''வணக்கம் தம்பி...''
''யார் நீங்க...''
''நான் ஒரு மொழி பெயர்ப்பாளர்; அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை உங்களுக்கு தமிழிலும், நீங்கள் தமிழில் பேசுவதை அவர்களுக்கு ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் போறேன்... நான் ஒரு துபாஷ்...''
''ஐயா துபாஷ்... எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்; அவர்களிடம் நேரடியாக பேசிக் கொள்கிறேன். நீங்க காரிலேயே இருங்கள்...'' என்றான் சந்திரஜெயன்.
வெளிநாட்டவர்களிடம் ஏதோ கூறி அகன்றார் துபாஷ்.
வந்தவர்களை வரவேற்று, அமர வைத்து, ''காபி குடிக்கிறீர்களா...'' என்று ஆங்கிலத்தில் வினவினான் சந்திரஜெயன்.
'தாராளமாக குடிக்கிறோம்; எங்களுக்கு இந்தியன் காபி மிகவும் பிடிக்கும்...'
காபி வந்தது; குடிக்க ஆரம்பித்தனர்;
குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான் சந்திரஜெயன்.
- தொடரும்...
வஹித்தா நாசர்