சூரியக்குழந்தை இன்னமும் கண் விழித்துப் பார்க்காததால், அந்த புதன்கிழமையின் வைகறை இருட்டு, இன்னமும் சாயம் போகாமல் அடர்த்தியாகவே இருந்தது.அறவே ஆள் நடமாட்டம் இல்லாத ஆர்.எஸ்.புரம் பிரதான சாலையிலிருந்த அந்த சிறிய விநாயகர் கோவில் முன், காரை நிறுத்தினான், தருண். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த புவனேஷ், காரின் கண்ணாடியை கீழே இறக்கி வெளியே எட்டிப் பார்த்து, ''என்ன தருண்... கோவில் மூடியிருக்கு. குருக்கள் இன்னமும் வரலை போலிருக்கு?'' என்றான்.''மணி, 5:00 தானே ஆச்சு... அவர், 5:30 மணிக்குத்தானே வருவார்.''''நீ, அவரை, 5:00 மணிக்கே வரச் சொல்லி இருக்கலாமே?''''சொன்னேன்... அவர், ரேஸ் கோர்ஸ் சாலையில் ஒரு பங்களா கிரஹப்பிரவேசத்துக்கு போகணுமாம். பிரம்ம முகூர்த்தத்துல கிரஹப்பிரவேசத்தை நடத்த வேண்டியிருப்பதால, 5:30 மணிக்குத்தான் கோவிலுக்கு வர முடியும்ன்னு சொல்லிட்டார். அது சரி... நீ ஏன் இவ்வளவு பதற்றமாய் இருக்கே புவனேஷ்?''''இது பதற்றம் இல்லை தருண்; பயம்.''''என்ன பயம்?''''நான் பண்ணிக்கப் போறது, திருட்டுக் கல்யாணம். பயம் இல்லாம இருக்குமா?''''இது, திருட்டுக் கல்யாணம்ன்னு யார் சொன்னது... நீயும், முகிலாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக, 'சின்ஸியராய் லவ்' பண்ணிட்டு இருக்கீங்க...''ரெண்டு பேர் வீட்டிலேயும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கிடைக்காதுங்கிற காரணத்தால, தனிப்பட்ட விருப்பத்தின்படி, கோவிலுக்கு வந்து, முறைப்படி தெய்வ சன்னிதானத்தில் குருக்கள் மந்திரம் ஓத, கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. இதுல திருட்டுதனம் எங்கிருந்து வந்தது?''''இருந்தாலும்...''''இதோ பார் புவனேஷ்... இது, உன் வாழ்க்கையோட ஒரு முக்கியமான கட்டம். இத்தனை நாளும் காதலர்களாய் இருந்த நீயும், முகிலாவும், கணவன் - மனைவி என்ற உன்னதமான உறவுகளுக்கு மாறப் போறீங்க. இந்த நேரத்துல மனசைப் போட்டுக் குழப்பிக்காம சந்தோஷமாய் இருக்கணும்.''தருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, புவனேஷின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த, அவன் மொபைல் போன் வெளிச்சம் பிடித்து, 'டயல் டோனை' வெளியிட்டது.மொபைல் போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்த புவனேஷ், முகம் மலர்ந்து, 'ஸ்பீக்கரை ஆன்' செய்து, ''என்ன முகிலா... வீட்டை விட்டு கிளம்பிட்டியா?''''கிளம்பி அஞ்சு நிமிஷமாச்சு... 'கால் டாக்சி'யில் வந்துட்டிருக்கேன்.''''இப்ப எந்த இடத்தை, 'க்ராஸ்' பண்ணிட்டிருக்கே?''''அவிநாசி ரோட்ல, தண்டு மாரியம்மன் கோவில்.''''அப்படீன்னா இன்னும்,10 நிமிஷத்துக்குள்ள இங்கே வந்துடுவ?''''கண்டிப்பா... நீங்களும், உங்க நண்பன் தருணும், விநாயகர் கோவிலுக்கு போயிட்டீங்களா?''''இப்ப கோவில் வாசல்லதான் இருக்கோம்; கோவில் இன்னமும் திறக்கலை. குருக்களுக்காக காத்திருக்கோம்... பை த பை... வீட்டை விட்டு புறப்படும்போது எந்தப் பிரச்னையும் இல்லையே?''''நேர்ல வந்து சொல்றேன்; போன்ல வேண்டாம்.''''அதுவும் சரிதான்,'' என்ற புவனேஷ், புன்னகையோடு மொபைல் போனை அணைத்தான்.கண்ணைச் சிமிட்டினான், தருண்.''உன்னைக் காட்டிலும், முகிலா தைரியமாயிருக்கா. பேசின எந்த வார்த்தையிலும் ஒரு துளி பயம் கூட தெரியலை. கவனிச்சியா?''''நோ நோ... அவளுக்கும் உள்ளூர பயம்தான் தருண். தைரியமாய் இருக்கிற மாதிரி காட்டிக்கிறா... அவ்வளவு தான்.''''நோ புவனேஷ்... காதலோட, 'பார்முலா' என்னான்னு இன்னும் உனக்குத் தெரியலை... ஆரம்ப கட்டத்துல, ஆண் துணிச்சலோடு இருப்பான்; பெண் பயந்து பயந்து, காதலிப்பா. ஆனா, காதல் வளர வளர, ஆண் கோழையாகவும், பெண் தைரியசாலியாய் மாறுகிற ரசாயன அதிசயம் இந்த காதல்ல தான் நடக்கும்... எனக்கு காதலிச்ச அனுபவம் இல்லைன்னாலும் அப்படிப்பட்ட காதல் ஜோடிகள் நிறைய பேரை, நான் பார்த்திருக்கேன்.''தருண் சொல்லி, வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும்போதே, தன் மண்டையில் நீல நிறமும், சிவப்பும் கலந்த சுழல் விளக்கோடு சத்தமில்லாமல், போலீஸ் பேட்ரோலிங் வேன் அருகே வந்து நின்றது.வேனின் முன்புற இருக்கையிலிருந்த நடுத்தர வயது இன்ஸ்பெக்டர், வெளியே தலையை நீட்டி, தருணிடம், ''இந்நேரத்துக்கு இங்கே காரை நிறுத்திகிட்டு என்ன பண்றீங்க?''ஒரு சில விநாடிகள் அதிர்ச்சிக்குட்பட்ட தருண், அடுத்த சில விநாடிகளிலேயே இயல்புக்கு வந்து, ''கோவிலுக்கு வந்தோம் சார்.''''கோவிலுக்கா... அதுதான் பூட்டியிருக்கே?''''அது வந்து சார்... குருக்களுக்காக காத்திட்டிருக்கோம்.''''ஏதாவது விசேஷமா?''''அ... அது வந்து...''''கேட்ட கேள்விக்கு சரியான பதில் வரலையே... உங்களுக்குப் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற இன்னொருத்தர் யாரு?''''என் நண்பன் சார்.''''கார்ல வேற யாராவது இருக்காங்களா?''''இல்லை சார்... நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்.''''ரெண்டு பேரும் காரை விட்டு இறங்கி, இப்படி வாங்க.''''எ... எதுக்கு சார்?''''பார்க்கிறதுக்கு, 'டீசன்டாய்' இருக்கீங்கற ஒரே காரணத்துக்காகத்தான் மரியாதை கொடுத்து, பொறுமையா விசாரணை பண்ணிட்டிருக்கேன். அந்த மரியாதையைக் கெடுத்துக்க வேண்டாம்... கார்லயிருந்து இறங்கி இங்க வாங்க...''தருணும், புவனேஷும் காரிலிருந்து இறங்கி, வேனுக்குப் பக்கத்தில் வந்தனர். இன்ஸ்பெக்டரின் பார்வை இரண்டு பேரையும் தடவியது. தருணை ஏறிட்டு, ''உங்க பேரு?''''தருண் சார்!''சற்றுத்தள்ளி நின்றிருந்த புவனேஷ் ஓரடி முன்னால் வந்து, சற்றே குரல் நடுங்க, ''என் பேர் புவனேஷ் சார்!''இன்ஸ்பெக்டரின் உதடுகளில் ஒரு புன்னகை பரவியது.''என்ன புவனேஷ்... பட்டு சட்டையும், பட்டு வேஷ்டியுமாய் உங்களைப் பார்த்தா புது மாப்பிள்ளை மாதிரி தெரியுது?''தருண் இடைமறித்து, ''சார்... புவனேஷுக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த விநாயகர் கோவில்ல கல்யாணம் நடக்கப் போகுது... அதுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரமா கோவிலுக்கு வந்தோம்.''''எ... என்னது கல்யாணமா?''''ஆமா சார்!''''உங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாரையும் காணோம். முக்கியமா பொண்ணைக் காணோம்?''''பொண்ணு இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே வந்துடும் சார்!''''காதல் கல்யாணமா?''''ஆமா சார்... ரெண்டு வீட்டுக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா பிரச்னை பண்ணுவாங்களோங்கிற பயத்துல இப்படியொரு முடிவுக்கு வந்தோம். போன வாரமே இந்த கோவிலுக்கு வந்து குருக்கள்கிட்டே விஷயத்தைச் சொல்லி, கோவில் நிர்வாகத்துக்கு பணம் கட்டி, முறைப்படி ரசீதும் வாங்கிட்டோம்.''''அந்த ரசீது இருக்கா?''''இருக்கு சார்!''''எங்கே குடுங்க பார்க்கலாம்!''தன் சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த மஞ்சள் நிற ரசீதை எடுத்து நீட்டினான், தருண். இன்ஸ்பெக்டர் அதை வெளிச்சத்தில் பார்த்து, ''பொண்ணு பேரு முகிலாவா?''''ஆமா சார்!''''வயசு?''''இருபத்தி மூணு!''ரசீதை தருணிடம் கொடுத்து, புவனேஷிடம் திரும்பி, ''எங்கே வேலை பார்க்கறீங்க?'' என்றார், இன்ஸ்பெக்டர்.''பாப்பநாயக்கன் பாளையத்துல, 'ஸ்டீல் பேப்ரிகேஷன்'ங்கிற கம்பெனியில், 'அசிஸ்டென்ட் இன்ஜினியரா' வேலை பண்றேன் சார்.''''முகிலாவும் அதே கம்பெனியா?''''ஆமா சார்... முகிலா, அங்கே ரிசப்ஷனிஸ்ட்.''''உங்களுக்கு வீடு எங்கே?''''கணபதியில் சார்... ஆனா, நான் இப்போதைக்கு டாடாபேடில் இருக்கிற, 'மேன்ஷன்'ல தங்கியிருக்கேன்.''''ஏன்?''''எனக்கு, அம்மா - அப்பா கிடையாது, ஒரு அண்ணன் மட்டும். அவருக்கு கல்யாணமாகிற வரைக்கும் நானும், அண்ணனும் ஒற்றுமையாய் இருந்தோம். அண்ணி வந்த பிறகு நிலைமை மாறிடுச்சு. வீட்டு சூழ்நிலை பிடிக்காம, வெளியே வந்துட்டேன். கடந்த ஒரு வருஷமா, 'மேன்ஷன்' வாசம்.''''முகிலா வீடு எங்கே?''''பீளமேட்ல சந்திரகாந்தி நகர்ல சார்... முகிலாவுக்கு அம்மா இல்லை; அப்பா மட்டும் தான். அவர் ஒரு குடிகாரர். வயசுப் பொண்ணு, வீட்ல இருக்கும்போதே ரெண்டாந்தாரமாய் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு வந்து அருவருப்பான வாழ்க்கையை நடந்திட்டிருக்கார். முகிலாவைப் பற்றின கவலையே அவருக்கு கிடையாது. குடிபோதையில், தன் பொண்ணை பலமுறை அடிச்சிருக்கார்.''''ரெண்டு பேர் வீட்லேயும் நிலைமை மோசமாய் இருக்கிறதால, இப்படியொரு கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்குன்னு சொல்ல வர்றீங்க?''''ஆமா சார்... எனக்கு கூட மொதல்ல கொஞ்சம் பயமாவும், தயக்கமாவும் இருந்தது. ஆனா, என் நண்பன் தருண் தான் தைரியம் சொல்லி, இந்த கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சான்.''சில விநாடிகள் மவுனமாய் இருந்து, பிறகு மெல்ல, ''நீங்க சொல்றதெல்லாம் நம்பற மாதிரிதான் இருக்கு. இருந்தாலும், நான் முகிலாகிட்ட பேசணும்; 'இந்த கல்யாணத்துல முகிலாவுக்கு விருப்பம் இருக்கா'ன்னு கேட்கணும்...'' என்றார், இன்ஸ்பெக்டர்.''தாராளமாய் கேளுங்க சார்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா,'' என்ற புவனேஷ், தருணிடம் திரும்பி, ''தருண்... முகிலாவுக்கு போன் பண்ணி எங்கே வந்துட்டிருக்கான்னு கேளு.''மொபைல் போனை எடுத்து, முகிலாவின் எண்ணைத் தொடர்பு கொண்டான், தருண்.அடுத்த விநாடியே -மறுமுனையிலிருந்து, 'நீங்கள் தொடர்பு கொண்ட எண்ணானது, தற்போது உபயோகத்தில் இல்லை...' என்று, 'ரிக்கார்டட் வாய்ஸ்' கேட்டது.
— தொடரும்ராஜேஷ்குமார்