நம் குடும்பத்துப் பெண்கள் ஏதோ ஒரு வகையில், தங்கள் ஆசை நிறைவேறாமல் இறந்து போயிருப்பர். அவர்களின் ஆத்மா சாந்தி பெற சில விதிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.
மகாபாரத ஆசிரியர் வியாசரை விஷ்ணுவின் அவதாரம் என்பர். இவரது தாய் சத்தியவதி. சத்தியவதிக்கு ஒருமுறை சத்திய சோதனை ஏற்பட்டது. இவள், பிதுர் (மறைந்த முன்னோர்) லோகத்தில் அச்சோதா என்ற பெயரில் கன்னியாக இருந்தாள். அதே லோகத்தில் வசித்த அமாவசு என்ற இளைஞனைப் பார்த்தாள். அவனைப் பிடித்துப்போய், தன்னை திருமணம் செய்யும்படி கேட்டாள். அவனும் அவளை யார் என்னவென்று கேட்காமலேயே சம்மதித்து விட்டான்.
அந்த நிமிடமே அவர்கள் பூலோகத்திற்கு வந்து விட்டனர். காரணம், அவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களை அண்ணன், தங்கையாக கருதுவர். அண்ணனும், தங்கையும் திருமணம் செய்வதென்பது கொடிய பாவம்.
பூலோகத்தில் அச்சோதா, ஒரு நதியாகப் பிறந்தாள். அந்த இளைஞன், கற்பாறையாக அந்த நதியின் கீழ் பயனின்றி கிடந்தான். அச்சோதாவைக் காணாத பிதுர்கள், அவளைத் தேடி பூலோகம் வந்தனர். அவளுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தம் அடைந்தனர். அவளிடம், 'நீ அறியாமல் பாவம் செய்தாலும், அதற்குரிய பலனை அனுபவித்தே தீர வேண்டும். பாவத்தின் பலனை அனுபவித்த பிறகு, நீ நல்ல குடும்பத்தில் பிறப்பாய். அப்போது ஒரு தெய்வமகன் உனக்கு பிறப்பான். அவனால் நீ மிகுந்த புகழ் பெறுவாய்...' என்றனர்.
அந்தப் பெண் தான் சத்தியவதியாகப் பிறந்து, மகாபாரத ஆசிரியர் வியாசரைப் பெற்றெடுத்தாள்.
அப்போது, பிதுர்கள் அவளுக்கு ஒரு தகவலை கூறினர்:
உலகத்தில், தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இறந்த பிறகும் கூட, அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது. அவர்களுக்கு பாவ விமோசனம் கொடுக்கும் தகுதி, அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு இருக்கிறது.
இதற்காக, மார்கழி, தை, மாசி மற்றும் பங்குனியில் தேய்பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் வரும் திஸ்ரோஷ்டாகா, அஷ்டகா, அன்வஷ்டகா ஆகிய நாட்களில், இவர்கள் தங்கள் முன்னோரை நினைத்து, தர்ப்பணம் செய்து, தானம் செய்ய வேண்டும்.
இதைச் செய்தால், மறைந்த நம் தாய் வழி பெண்கள் நினைக்கக் கூடாததை நினைத்திருந்தாலோ, திருமணம் செய்ய ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போயிருந்தாலோ, கர்ப்பத்தில் இருக்கும்போதே பெண் சிசுக்கள் அழிந்திருந்தாலோ அவர்கள் செய்த பாவமெல்லாம் நீங்கும். அவர்களது ஆசிர்வாதத்தால், இந்த தர்ப்பணத்தை செய்தவர்களுக்கு ஆயுள் மற்றும் செல்வ விருத்தி ஏற்படும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி தானம் செய்தால், பலன் மேலும் அதிகரிக்கும்.
பிப்., 23, 24, 25 மற்றும் மார்ச் 24, 25, 26ல் இந்த புண்ணிய தினங்கள் வருகிறது. இந்த நாட்களில், உங்கள் குலத்தில் பிறந்து, நிறைவேறாத ஆசையுடன் மறைந்த பெண்களின் ஆத்ம சாந்திக்காக இந்த தர்ப்பணத்தை செய்யுங்கள்; புண்ணியத்தை அள்ளுங்கள்.
தி. செல்லப்பா