மனைவியை குறை கூறுபவரா நீங்கள்?
உறவினர் மகன் திருமணத்திற்காக சென்னை சென்று, ரயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பெட்டியில், நடுத்தர வயதுடைய இரண்டு நபர்கள் மட்டும் அமர்ந்து வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது, அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது.
இருவரில் ஒருவர், தனக்கு தானே சத்தமாக சிரித்தபடி, தன் மனைவியின் சமையலை குறை கூறி, நண்பரிடம், தமாஷ் செய்து வந்தார்.
அவரின் நண்பரோ சிரிக்காமல், 'உன் மனைவியின் சமையலை, நீ என்னிடம் குறை கூறுவதை போல, தாம்பத்திய உறவின் குறைபாட்டை, உன் மனைவி, அவர் தோழியிடம் பகிர்ந்தால், உனக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும்...' என்று, 'குட்டு' வைத்தார்.
மேலும், 'கணவன், மனைவிக்கான சேவை குறைபாட்டை, தனிப்பட்ட முறையில் ஆலோசனையாக கூறி, அவரவர் தேவைக்கேற்ப திருத்திக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் வேண்டும். இதை விட்டு அடுத்தவரிடம் குறை கூறி, ஒருவரை ஒருவர் அவமானப்படுத்திக் கொள்ளக் கூடாது...' என்று, அன்போடு அறிவுறுத்தினார்.
தமாஷ் என்ற பெயரில், எல்லை மீறி மனைவியை கலாய்த்த நண்பர், தவறுக்கு வருந்தி, நேர்மையாகவும், நேரிடையாகவும் தன் குறையை உணர்த்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
உங்களில் யாராவது, இப்படி மற்றவரிடம் மனைவியை குறை கூறுபவர் என்றால், அதை விட்டு திருந்தலாமே!
- ஆர். செந்தில்குமார், மதுரை.
இப்படியும் வேலை தேடலாம்!
திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தேன். மண்டபத்தின் வாசலில், மணமக்களுக்கு, பெரிய, 'கட் - அவுட்' வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த கவிதை மற்றும் மணமகனின் நண்பர்கள் பெயரை படிக்க துவங்கினேன்.
ஒவ்வொரு நண்பரும், தங்களது பெயர், படிப்பு, போன் எண் ஆகியவற்றை போட்டிருந்தனர். அத்துடன் சிலர், 'நாங்கள் வேலையின்றி இருக்கிறோம்... வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவோர், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...' என, குறிப்பிட்டிருந்ததைக் கண்டேன்.
'இது, புது, 'டெக்னிக்'கா இருக்கே...' என நினைத்தவாறு, அதில் பெயர் பதிவிட்ட இளைஞர் ஒருவரிடம் கேட்டேன்.
அவரோ, 'வேலை தேடி, தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில், ஏகப்பட்ட பணத்தை இழந்து விட்டோம். சமீபத்தில் நடந்த நண்பர் ஒருவரது திருமண நிகழ்வில், இதே போன்று, 'கட் - அவுட்' வைத்தோம். அந்த திருமணத்திற்கு, தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிறைய முதலாளிகள் வந்திருந்தனர். அவர்கள், 'கட் - அவுட்'டில் இருந்த பதிவை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
'பின்னாளில் என் நண்பர்கள் சிலரை அழைத்து, பணியில் அமர்த்திக் கொண்டனர். தற்போது, அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
'அந்த முதல் முயற்சி மூலம், நல்ல பலன் கிடைத்ததால், இப்போது வேலை இல்லாமல் இருக்கும், சக நண்பர்களின் பெயர்களுடன், வேலை வேண்டும் என, குறிப்பிட்டுள்ளோம்...' என்றார்.
அவர்களின் வித்தியாசமான முயற்சியை கண்டு, வியந்து, 'கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு, வேலை கிடைக்கும்...' என, வாழ்த்தி வந்தேன்.
- எம். புனிதா, கோவை.
மருத்துவரிடம் செல்லும் முன்...
கிராமத்திலிருக்கும் என் அப்பாவுக்கு, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரிடம், இதய நோய் சம்பந்தமாக ஆலோசனை பெற, சமீபத்தில், 'அப்பாயின்மென்ட்' வாங்கியிருந்தேன். அப்பாவுக்கு துணையாக நானும் சென்றேன்.
மருத்துவமனையில், மருத்துவரை பார்க்க நிறைய கூட்டம். இரண்டு மணி நேரம் காத்திருந்து, எங்கள் முறை வந்ததும், உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும், மருத்துவரிடம் வணக்கம் சொல்லி, நோய்கள் பற்றி எதுவும் சொல்லாமல், ஒரு பேப்பரை எடுத்து மருத்துவரிடம் நீட்டினார், அப்பா.
பேப்பரை படித்து முடித்ததும், 'வெரி குட்... எல்லாரும் இப்படி அவங்கவங்க பிரச்னைகள், சாப்பிடும் மாத்திரைகள், நோயின் தன்மை போன்ற எல்லாவற்றையும் புள்ளி விபரத்தோடு எழுதி எடுத்து வந்து விட்டால், நாங்களும் எந்த குழப்பமுமின்றி, உங்களுக்கு தெளிவாக மருத்துவம் செய்ய உதவியாக இருக்கும்.
'மேலும், எங்களிடம் நேரில் சொல்லும்போது சில முக்கியமான தகவல்களை மறக்கவும் வாய்ப்புள்ளது...' என்று சொல்லி, அப்பாவிடம் சில சந்தேகங்களை கேட்டு உறுதிபடுத்திய பின், ஐந்தே நிமிடத்தில் ஆலோசனைகளை கூறி, பாராட்டி அனுப்பி வைத்தார்.
வாசகர்களே... மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் முன், இதுபோன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கலாமே!
எ.எம்.எம். ரிஸ்வான், சென்னை.