நடிகரும், எம்.பி.,யுமான சத்ருகன் சின்ஹாவை எனக்கு அறிமுகம் இல்லை. திருநாவுக்கரசர் எம்.பி., மூலம்தான் அவர் அறிமுகம் ஆனார். சாதாரணமாய் கறாராய் ஒரு பெரிய தொகை பெரும் சத்ருகன், நம்மவர் சொன்னதால் தான் எந்த நிபந்தனையும் இல்லாமல் வர சம்மதித்தார். ஆனால், 'திருநாவுகரசரும் வந்தால் மட்டுமே நான் வருவேன்...' என, உறுதியாய் சொல்லி விட்டார்.
'நான் ஏற்கனவே போய் வந்து விட்டேன். நல்லா கவனிச்சுக்குவாங்க. தைரியமா போய் வாங்க...' என்று திருநாவுக்கரசர் சொல்லியும் கூட சத்ருகன் பிடிகொடுக்கவில்லை.
திருநாவுக்கரசரிடம், 'நீங்களும் வாங்களேன்...' என்றேன்.
'எதுக்கு உங்களுக்கு தண்ட செலவுன்னு பார்க்கறேன்...' என்று யோசித்தவர், கடைசியில், 'ஓ.கே.,' என்று சம்மதிக்க, அவருக்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தோம்.
ஆனால், விதி வலியது.
நிகழ்ச்சிக்கு, 10 நாட்களுக்கு முன், திருநாவுக்கரசர் என்னை அழைத்து, 'சாரி மோகன்தாஸ், அதே தேதியில் தொகுதியில் நான்கு கல்யாணம். நான் கலந்துக்க வேண்டியிருக்கு. எல்லாம் முக்கியமானவங்க. தவிர்க்க முடியாது; அதனால, சத்ருகனை வச்சு விழாவை நடத்துங்க...' என்றார்.
'சார்... நீங்க இல்லேன்னா அவரும் வரமாட்டார். ஏற்பாடுகள் முடிந்து, குவைத் முழுக்க விளம்பரப்படுத்தியாச்சு. இனி, அவர் வரலேன்னா இப்போ என்ன பண்றதுன்னு தெரியல. இந்த இக்கட்டுல இருந்து நீங்கதான் எங்களை காப்பாத்தணும்...'
'அப்போ ஒண்ணு பண்றீங்களா...'
'சொல்லுங்க சொல்லுங்க...'
'எல்லா ஏற்பாடுகளும் அப்படியே போகட்டும். அவரை பொறுத்தவரை நான் சென்னையிலிருந்து வரேன். அவர் டில்லி. அதனால, அவருக்கு சந்தேகம் வராது. அவர், குவைத் வந்து சேர்ந்தபுறம், எமர்ஜென்சி என்னால வரமுடியலேன்னு சொல்லிக்கிறேன்...'
'அப்போ... ஏற்கனவே போஸ்டர், பேனர்...'
'அதெல்லாம் அப்படியே இருக்கட்டும். என் பெயர், படம் எதையும் எடுக்க வேண்டாம். உங்களை பொறுத்தவரை நானும் வர்றேன் என்றே ஏற்பாடு செய்யறீங்க. நான் வரலேங்கிறது உங்களுக்கு தெரியவே தெரியாது... என்ன புரிஞ்சுதா?'
திருநாவுக்கரசரின் இந்த, 'ட்ரிக்' பிசகாமல் பிரமாதமாய், 'ஒர்க் அவுட்' ஆயிற்று.
எங்களது செயல்பாடுகள் குவைத்தில் இருந்தாலும், அதன் மூலம் இந்தியா முழுக்க தேவைக்கு தோள் கொடுக்க வேண்டும் என்பது லட்சியம்.
பணம் அனுப்பினாலும் அதை முறையாய் உரிய நேரத்தில் உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்காக, இந்தியாவில் நம்பிக்கையான, தகுதியான, சேவை குணமுள்ளவர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம்.
அதில் முதன்மை வகிப்பது மணிமேகலை பிரசுர அதிபர், ரவி தமிழ்வாணன்.
பிரன்ட்லைனர்சின் சேவைகள், தேவைகள் எல்லாவற்றிலும் ரவிக்கு பெரும் பங்குண்டு. அவசரமாய் ஊரில் யாருக்காவது உதவி தேவை என்று போன் வரும். ஒரு அவசியம் அல்லது நெருக்கடி எனும்போது இன்னாரிடம் சேர்க்க வேண்டும் என்று சொன்னால் போதும். அதை உடனே செய்து, பலன் பெற்றவரிடமிருந்து ரசீதும் வாங்கி அனுப்பி விடுவார், ரவி. சரியான சேனல்!
குவைத்திலிருந்து உடனே பணம் அனுப்புவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இதற்காகவே அவசரத்துக்கு பயன்படும் விதமாக எப்போதும் ரவி வசம், ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வைத்திருப்பேன்.
இதன் மூலம் பலன் பெற்றவர்கள் அதிகம். அதில் ஒரு சம்பவம்-
சுனாமி அன்று, அதிகாலை, பாலம் கல்யாண சுந்தரம் என்னை அழைத்து, விபரம் சொல்லி, 'ஆட்களும், வண்டியும் ஏற்பாடு செய்து விட்டேன். அவசர நிவாரணத்துக்கு பொருட்கள் வாங்கி அனுப்பணும். அதற்கு இப்போதைக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி அனுப்ப முடியுமா...' என்று கேட்டார்.
'நல்லது. விடிந்ததும் ரவி தமிழ்வாணனிடம் போய் பெற்றுக் கொண்டு ஏற்பாடுகளை கவனியுங்கள்...' என்று சொல்லி விட்டு, ரவி சாரிடம் விபரம் சொல்ல, அவரும் ரெடி.
நாங்கள் முதல் தவணையாக அன்று கொடுத்தது ஒரு லட்சம். பிறகு, சுனாமிக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பினது மொத்தம், 20 லட்சம்.
எந்த ஒரு காரியத்தையும் நேர்த்தியோடும், நேரத்தோடும் முடிக்க, தகவல் தொடர்பு முக்கியம். நவீன உலகில் கிடைக்கும் அத்தனை வசதிகளையும், லேனாவும், ரவியும் பயன்படுத்துவதால் இவர்களால் விரைவாக பயணம் செய்ய முடிகிறது.
இருவருமே, பிரபலங்களை ஒருங்கிணைப்பது முதல், விழா முடியும் வரை துணை இருப்பர். இந்தியாவுக்குள் எதை, எங்கு, யாரிடம் எப்போது சேர்க்க வேண்டும் என்று சொன்னால் போதும், பிரன்ட்லைனர்சின் ஒரு அங்கமாகவே இவர்கள் இருப்பதால், நாங்கள் வெற்றிகரமாய் செயல்பட முடிகிறது.
'டிவி' மற்றும் வலைதளங்கள் வரவால் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதாக புகார் உள்ள இந்த காலகட்டத்திலும் கூட மணிமேகலை பிரசுரம் தினம் ஒரு புத்தகம் வீதம் வெளியிடுகிறதென்றால், அதற்கு காரணம், ரவியின் வேகம், உழைப்பு, சமயோசித அறிவு, எப்போதும் பராமரிக்கும் தொடர்புகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
வெளிநாட்டு தமிழர்களுக்காக புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்து, அவர்களுக்கு எளிதாய் கிடைக்கும்படி செய்கிறார். 'கொரோனா' தொற்றுக்கு முன் வரை ஆண்டுதோறும் குறைந்தது, 20 நாடுகளுக்காவது பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதை அத்தோடு விட்டு விடாமல், அந்த நட்புகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் தாய் நாட்டுக்கு வரும்போது, அவர்களுக்கு வேண்டிய அத்தனை ஒத்தாசைகளையும் செய்து கொடுப்பது, ரவியின் சிறப்பு.
ஆனால், ஒரு சமயம் இவர் மூலம் நாங்கள் பெரும் சோதனை ஒன்றை சந்திக்க வேண்டி வந்தது. அது...
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்