பா - கே
கல்லுாரியில் படிக்கும் தன், 20 வயது மகனுடன் என்னை சந்திக்க வந்திருந்தார், வாசகி ஒருவர்.
கேன்டீனிலிருந்து, சுடச்சுட காபி வரவழைத்துக் கொடுத்தேன்.
'கல்லுாரியில், 'ஆன்லைன்' வகுப்பு நடக்கிறது. அந்நேரம் தவிர, மற்ற நேரங்களில் ஏதாவது உருப்படியா செய்யலாம் இல்லையா? எப்பப் பாரு நண்பர்களோடு சேர்ந்து அரட்டையடிப்பதிலும், மொபைலிலும் மூழ்கி கிடக்கிறான், மணி. கொஞ்சம், 'அட்வைஸ்' செய்யுங்களேன்...' என்றார்.
அவனை பார்க்க, துடிப்பான பையனாக தெரிந்தான். அவன் பார்வையில் ஒரு தேடல் இருப்பதும் தெரிந்தது.
'அவனுக்கு எந்த, 'அட்வைசும்' தேவைப் படுவதா தெரியலியே...' என்றேன்.
'சரியா சொன்னீங்க அங்கிள். ஒரே விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. நிறைய அனுபவங்கள் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும்ன்னு, எங்கம்மாவுக்கு தெளிவா சொல்லுங்க... குதிரைக்கு கடிவாளம் கட்டிய மாதிரி, ஒரே மாதிரி சிந்திக்கிறாங்க...
'வரலாற்றில் இடம் பெறுபவர் பெரியவரா அல்லது வரலாற்றை உருவாக்குபவர் பெரியவரா... நீங்களே சொல்லுங்க...' என்று கேட்டதும், சற்று அதிர்ந்து தான் போனேன்.
நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த சீனியர் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, 'சபாஷ் கண்ணா...' என்று பாராட்டி, ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அது:
ஒரு கிராமத்து பெருமாள் கோவிலில், ராமாயண சொற்பொழிவு நிகழ்ந்தது. பலரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர்.
அதே ஊரில் படிப்பறிவு இல்லாத, மாடு மேய்க்கும் தொழிலை செய்யும் ஒரு குடும்பத்தானும் தினசரி ராமாயணம் கேட்கச் செல்வான்.
ஒவ்வொரு நாளும் ராமாயண கதையை கேட்டு வந்தவனிடம், 'இன்னைக்கு ராமாயணம் கேட்கப் போனியே... என்ன கதை சொன்னாங்க... ஏதாவது புரிஞ்சுதா...' என்று கேட்பாள், மனைவி.
அந்த கணவனும், 'எனக்கு கதையெல்லாம் தெரியாது. ஆனா, மனசு நிம்மதியாய் இருந்தது...' என்பான்.
'கதை புரியாத உனக்கு ராமாயணம் கேட்டு ஆகப்போறது என்ன...' என்று திட்டுவாள், மனைவி.
பத்து நாட்களில் ராமாயண சொற்பொழிவு முடிந்து, பட்டாபிஷேக கதையையும் சொல்லி முடித்தனர்.
கணவன் வீட்டுக்கு வந்தவுடன், 'ராமாயணம் முடிஞ்சு போச்சே. இப்பவாவது அங்க சொன்னது ஏதாவது புரிஞ்சுதா...' என்று கேட்க, கணவன் மவுனமாக இருந்தான்.
'இதோ இந்த சாணம் அள்ளுகிற மூங்கில் கூடையில, அந்த தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீர் மோந்து கொண்டு வா...' என்று, கணவனுக்கு கட்டளையிட்டாள்.
அவனும் பேசாமல் போய், மூங்கில் கூடையில் தண்ணீரை அள்ளினான். அதிலிருந்த சிறு ஓட்டைகள் வழியாக தண்ணீர் முழுவதும் ஒழுகிப் போக, வெறும் கூடையோடு வந்தான்.
'சரி, இன்னொரு தடவை போய் எடுத்து வா...' என்று, கணவனை விரட்டினாள்.
அவனும் அப்படியே செய்ய, இப்படி, 10 முறை கணவனை அனுப்ப, 10 முறையும் அவன் வெறும் கூடையோடு வந்து அவளிடத்தில் நின்றான்.
'இதுதான் நீ ராமாயணம் கேட்ட லட்சணம்... ஓட்ட கூடையில தண்ணீர் எடுத்தாற் போல...' என்று சொல்லி, ஏளனமாக சிரித்தாள்.
ஆனால், அந்த படிப்பறிவில்லாத கணவன், 'நிசம் தான், ஓட்ட கூடையில என்னால தண்ணி அள்ள முடியல. ஆனா, நான் 10 தடவை போய் தண்ணீர் எடுத்ததாலே இந்த சாணக் கூடையில இருந்த அழுக்கெல்லாம் போய் கூடை சுத்தமானதை நீ பார்க்கவில்லையா...
'எனக்கு, ராமாயணத்தை திருப்பி சொல்ல தெரியாது. ஆனா, என் மனம் இந்த, 10 நாட்களில் சாந்தமானதை நான் உணர்ந்தேன்...' என்று கூறினான்.
- என, கதையை கூறி முடித்தார்.
'ஓடிக் கொண்டிருக்கும் நதியில் பாசி படிவதில்லை. பயணப்பட்டிருப்பவன் மனதில் கவலைகள் படிவதில்லை என, எப்போதோ படித்துள்ளேன்.
'நாம், பல ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களை இக்கால இளம் தலைமுறையினர் ஐந்தே ஆண்டுகளில் பெற்று விடுகின்றனர். கவலைப்படாதீர்கள்...' என்று சமாதானப்படுத்தினேன்.
'கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு; காரியம் நடக்கட்டும் துணிந்து விடு...' என்று பாடியபடி எழுந்து சென்றான், வாசகியின் மகன்.
'பழைய பாடல் எல்லாம் இவனுக்கு தெரிந்திருக்கிறது மணி, பிழைத்துக் கொள்வான்...' என்றார், அருகில் இருந்த, சீனியர் செய்தியாளர்.
ப
இந்தியாவின் மீது படையெடுக்க கிளம்பிய அலெக்சாண்டரிடம், அவரது மனைவி ஒரு வேண்டுகோள் வைத்தாள்.
இந்தியாவை வென்றும் திரும்பும் போது, அங்கிருந்து ஒரு முனிவரை அழைத்து வரவேண்டும் என்பதே, அந்த வேண்டுகோள்.
காரணம், இந்திய முனிவர்கள் மிகுந்த அறிவு உள்ளவர்கள். எனவே, அந்த முனிவரை வைத்து, தன் பிள்ளைகளுக்கு நிறைய கற்றுக் கொடுக்கலாம் என்று நினைத்தாள், அலெக்சாண்டரின் மனைவி.
அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்து, பல பகுதிகளை வென்று, தன் நாடு திரும்ப எண்ணினார். அப்போது, மனைவி தன்னிடம் கூறியது, நினைவுக்கு வந்தது.
ஒரு புகழ்பெற்ற முனிவரை சந்தித்து, 'என்னோடு என் நாட்டிற்கு உடனே கிளம்பி வரவேண்டும்...' என்று கேட்டார், அலெக்சாண்டர்.
முனிவர் மறுக்கவே, வாளை உருவினார், அலெக்சாண்டர்.
அப்போது அந்த முனிவர் சிரித்தபடியே, 'என்னை கொல்வதற்கு முன், நீ இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, உன்னால் இந்த வாளை வைத்து என்னை கொல்ல முடியாது. இரண்டாவது, நீ என் அடிமை என்பதையும் உனக்கு சொல்கிறேன்...' என்று கூறினார்.
ஏற்கனவே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டருக்கு, கோபம் இன்னும் அதிகமாகியது. ஆயினும், 'ஆமாம், நீ கூறிய இரண்டு பதில்களுக்கும் விளக்கம் தரவேண்டும்...' என்றார்.
முனிவர் சிரித்தபடியே, 'உன் வாளால் என் உடலை மட்டும் தான் வெட்ட முடியும். இந்த உடல் மட்டுமல்ல, இந்த உடலையும் கடந்து உயிரோடு இருப்பவன். எனவே, நீ, என்னை உன் வாளால் கொல்ல முடியாது...' என்றார்.
அலெக்சாண்டருக்கு சற்று நிதானம் வந்தது. வாளால் தன்னை கொல்ல முடியும் என்பதற்கும் பயப்படாத அந்த முனிவரிடம் ஏதோ சக்தி உள்ளதை புரிந்து கொண்டார். எனவே, தன்னை ஒரு அடிமை என்று சொன்னதற்கான காரணம் கேட்டார்.
'நான், கோபத்தை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். எனவே, கோபம் எனக்கு அடிமை. ஆனால், நீ உன் வாளை உருவி கோபப்பட்டதிலிருந்து தெரிய வருகிறது, நீ கோபத்திற்கு அடிமையாக உள்ளாய். எனவே, நீயும் என் அடிமைதானே...' என்றார், முனிவர்.
விளக்கத்தை புரிந்துகொண்ட அலெக்சாண்டர், வாளை உறையிலிட்டு, முனிவரை பணிந்து, சென்றார்.