* பா. சந்திரசேகர், திருப்பூர்: இன்னும் இரண்டு தேர்தலுக்குப் பிறகாவது தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியுமா?
வேறு நல்ல விஷயம் பேசலாமே... இந்தக் கேள்வியை எழுதிய பிறகு என்ன செய்தீர்கள் - சாப்பிட்டீர்கள்?
ஆர். சந்திரன், துறையூர்: பணம் இல்லாதவர் எதைப் பற்றி சிந்திக்கின்றனர்?
பணத்தைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கின்றனர்... அது இருப்பவரும், அதைப் பற்றி தான் சிந்திக்கின்றனர்... இன்னும் அதிகம் சேர்ப்பது பற்றி!
பி. மோகன்ராஜு, சென்னை: 'லைசென்ஸ்' இல்லாமல், 'பைக்' ஓட்டும் சிறுவர்களை எப்படி திருத்துவது?
அவர்களை பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது தான்... அத்துடன், 'டூ - வீலர்' ஓட்ட அனுமதி அளித்த பெற்றோருக்கும் தண்டனை அளிப்பதன் மூலமே இதற்கு தீர்வு காண முடியும்!
* ம. வசந்தி, திண்டிவனம்: 'நீட்' விலக்கு மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளனரே... பலன் கிடைக்குமா?
பரவாயில்லை என, மசோதாவை ஜனாதிபதிக்கு, கவர்னர் அனுப்பி வைத்தாலும் பலன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை!
எம். குணசேகர், சென்னை: பத்திரிகைத் துறை நலிவடைந்து விட்டதே... பொருளாதார ரீதியில் தங்களை ஏதும் பாதித்துள்ளதா?
இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து, என்னையும் சேர்த்து, அனைத்து பதிப்பு ஊழியர்களுக்குமே சம்பளம் உயர்த்தி கொடுத்து விட்டனர், நிர்வாகத்தினர். கடந்த ஆண்டு ஜூலையிலிருந்து, டிசம்பருக்குள், நாளிதழ் விற்பனை, 50 ஆயிரம் பிரதிகள் அதிகரித்தும், விளம்பர வருமானமும் அதிகரித்துள்ளது. நலிவடைந்தது, வார, மாதமிருமுறை, மாத பத்திரிகைகள் தான்!
எம். ஜெயந்தி, சென்னை: என் வயது 27... 'திருமணம் செய்து கொள்' என்று, என் பெற்றோர் வற்புறுத்துகின்றனர். எனக்கோ, ஆண்களைக் கண்டால் வெறுப்பாக இருக்கிறது... நான் என்ன செய்வது?
நீங்கள், விளக்கெண்ணெய் குடித்திருப்பீர்களே, சின்ன வயதிலிருந்து... மூக்கை பிடித்துக் கொண்டு! அதுபோல், கல்யாணம் செய்து கொண்டு விடுங்கள்... நல்ல மருந்து!
ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: மதுக் கடைகளுடன் இணைந்துள்ள அனைத்து, 'பார்'களையும் மூட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறீர்களா?
மரத்தடி, பேருந்து நிறுத்தம், பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் மக்களின் நடைபாதைகளில் எல்லாம் இனி குடிமகன்களைக் காணலாம். இங்கே எல்லாம், 'சைடு டிஷ்'களின் விற்பனை பெருகி விடும்!