முன் கதைச் சுருக்கம்: காதலி முகிலாவை, திருமணம் செய்து கொள்வதற்காக, கோவில் வாசலில் தன் நண்பர் தருணுடன் காத்திருந்த புவனேஷ், முகிலாவுக்கு போன் செய்து, அவள் எங்கிருக்கிருக்கிறாள் என்று விசாரிக்கிறான். ஐந்து நிமிஷத்தில் வருவதாக கூறிய பின், நீண்ட நேரம் வராததால், கவலைப்படுகிறான். இவர்களை பற்றி விசாரித்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், துாரத்தில் ஒரு பெண் இவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதை, புவனேஷ் - தருணுக்கு காட்டுகிறார். இதற்கிடையே, முகிலா, காணாமல் போக, அவளது மொபைல் போனும், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருப்பதாக தகவல் தருகிறது -
இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சந்தேகம் தீராமல், தருணிடம், கிசுகிசுப்பான குரலில் கேட்டார்.
''ஸ்கூட்டியில் உட்கார்ந்துட்டிருக்கிறது ஒரு பொண்ணுதானே?''
''ஆமா, சார்... கழுத்துல போட்டிருக்கிற துப்பட்டா, காத்துல பறக்கறது நல்லாவே தெரியுது.''
''யாரு இவ... எதுக்காக இந்த நேரத்துல இங்கே வந்து, ஒரு பேனருக்குப் பின்னாடி ஸ்கூட்டியை நிறுத்திகிட்டு நம்மை, 'வாட்ச்' பண்ணிட்டிருக்கா?''
''நான் போய் மடக்கட்டுமா சார்?''
''நோ நோ... நீங்க மட்டும் தனியா போறது சரியில்லை; நானும், வர்றேன். வேனை சுத்திகிட்டு நீங்க, 'லெப்ட்'ல போங்க... நான், 'ரைட்'ல வர்றேன். ரோடை, 'கிராஸ்' பண்ணும்போது, பேனர் இருக்கிற பக்கம் பார்த்துட வேண்டாம்; அவளுக்கு சந்தேகம் வராதபடி நம்ம, 'மூவ்மென்ட்ஸ்' இருக்கணும்.''
தருண் தலையசைத்து, வேனுக்கு இடது பக்கமாய் நகர, வேனுக்குள் உட்கார்ந்திருந்த புவனேஷ்,''என்ன தருண்... 'சைபர் க்ரைம் செல்'லுக்கு நாம புறப்பட வேண்டாமா... ஏன் லேட்டாகுது?'' என்றான்.
''அ... அதுக்குள்ளே ஒரு சின்ன பிரச்னை...''
''பிரச்னையா?''
தருண், சில விநாடிகள் செலவழித்து பேனர் பின்னால் இருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி சொன்னதும், முகம் மாறினான், புவனேஷ்.
''யாரந்த பொண்ணு... நானும், உன் கூட வந்து பார்க்கிறேன்,'' பதட்டத்தோடு சொல்லிக்கொண்டே வேனிலிருந்து வேகவேகமாய் கீழே இறங்கினான், புவனேஷ்.
''தருண்... நடக்கிற விஷயத்தையெல்லாம் பார்த்தா, என், 'ஹார்ட்'டே வெடிச்சுடும் போலிருக்கு. முகிலாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காதே?''
''பயப்படாதே... உனக்கும், முகிலாவுக்கும் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு யாரோ நினைச்சு, திரைமறைவில் காய்களை, 'மூவ்' பண்ணிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுல ஒரு காய் தான் அந்த ஸ்கூட்டி பெண். அவளை மடக்கினா போதும், எல்லா உண்மையும் வெளியே வந்துடும்...
''நாம இப்ப ரோடை, 'கிராஸ்' பண்ணி, அந்த விளம்பர பேனரை பார்க்காம, ஓரமா நடந்து, அதுக்கப்புறம் எதிர்பாராத விநாடியில் அவளை நெருங்கி, 'கார்னர்' செய்யணும். அவளுக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், ஸ்கூட்டியை கிளப்பி பறந்துடுவா... எனக்குப் பின்னாடியே வா... மறந்தும் அந்த பேனருக்குப் பின்னாடி பார்த்துடாதே.''
''சரி...'' என, கலவரமாய் தலையாட்டிக் கொண்டே, தருணைத் தொடர்ந்தான், புவனேஷ். இருவரும் எதிர்புற ரோடையே பார்த்தபடி நடக்க, வலது பக்கமாய், வெகு இயல்பாய் மொபைல்போனில் பேசுவது போல், பாவனை செய்தபடி நடை போட்டார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.
சரியாய், 30வது விநாடியில், மூன்று பேரும் அந்த கோவில் விளம்பர பேனரை சூழ்ந்தனர்.
ஸ்கூட்டியில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அதிர்ந்து, வண்டியை, 'ஸ்டார்ட்' செய்ய முயல, பாய்ந்து போய் அவள் முன் நின்றான், தருண்.
ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக்கொண்டே, ''யார் நீ... இந்த இருட்டுல நின்னுகிட்டு என்ன பண்ணிட்டு இருக்கிறே?'' கேட்டார், முத்துக்குமரன்.
பயத்தோடு மெல்ல ஸ்கூட்டியை விட்டு இறங்கினாள்.
இளம் பெண், வயது, 20 - 25க்குள் இருக்கலாம். அந்த அரையிருட்டிலும் அழகாய் இருந்தாள். தலைக்கு வைத்திருந்த மல்லிகைச்சரமும், முகத்திற்கு பூசியிருந்த பவுடரும் ஒரு சேர கலந்து காற்றில் பரவி மூச்சை நிறுத்துவது போல் மணத்தது.
முத்துக்குமரன் கையசைத்து, ''இப்படி வெளிச்சத்துக்கு வா,'' என்றார்.
வந்தாள்.
''உம் பேர் என்ன?'' குரலை உயர்த்தினார், முத்துக்குமரன்.
''அதுல்யா சார்.''
''பேரே வித்தியாசமாயிருக்கு... சரி, அதுல்யாவுக்கு இந்த வேளையில இங்கே என்ன வேலை?''
''அ... அது வந்து...''
''யாருக்காவது, 'வெயிட்' பண்ணிட்டிருக்கியா?''
''இல்ல சார்.''
''அப்புறம்?''
அதுல்யா சில விநாடிகள் தயக்கமாய் இருந்து, சன்னமான குரலில், ''கல்யாணத்துக்கு வந்தேன் சார்.''
''யாரோட கல்யாணத்துக்கு?''
''என் தோழி முகிலாவோட கல்யாணத்துக்கு.''
அதுல்யா சொல்ல, முத்துக்குமரன், புவனேஷ், தருண் சற்றே அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
முதலில் சுதாரித்த புவனேஷ், அதுல்யாவை ஏறிட்டான்.
''முகிலா உனக்கு தோழியா?''
''ஆமா சார்... முகிலா குடியிருக்கிற தெருவுக்கு அடுத்த தெருவுலதான் நான் இருக்கேன். நீங்களும், அவளும் காதலிக்கிற விஷயம் எனக்குத் தெரியும். இன்னிக்கு இந்த விநாயகர் கோவிலில், உங்களுக்கும், அவளுக்கும் கல்யாணம்ன்னு, ரெண்டு நாளைக்கு முன்ன தான் முகிலா என்கிட்ட சொன்னா. 'கல்யாணத்துக்கு நான் வரட்டுமா'ன்னு அவகிட்ட கேட்டதுக்கு, தீர்மானமா, 'வரவேண்டாம்'ன்னு சொல்லிட்டா. விடாப்பிடியாய் நான் கேட்கவும், 'சரி, கல்யாணத்துக்கு வா... ஆனா, என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காம, விநாயகரை கும்பிட்டுட்டு போயிடணும்'ன்னு சொன்னா...
''முகிலா எனக்கு தோழியாய் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரைக்கும் அவ என் கூடப் பிறக்காத சகோதரி மாதிரி சார்... அவளை விட, நான் ஆறு மாசம் பெரியவ. அதனால்தான், அவளுக்கு நடக்கிற கல்யாணத்தைப் பார்த்து மனசளவில் வாழ்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்.''
அவளை சந்தேகப் பார்வை பார்த்தபடி, ''உன்னோட பேர் என்னான்னு சொன்னே?'' கேட்டான், புவனேஷ்.
''அதுல்யா.''
''இதுநாள் வரைக்கும் என்கிட்ட அதுல்யாங்கிற பேர்ல தனக்கொரு தோழி இருக்கிறதா ஒரு தடவை கூட முகிலா சொன்னதே இல்லையே?''
''சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன். அப்படி சொல்லாததால உங்களுக்கு என் மேல ஏதாவது சந்தேகமா?''
புவனேஷ் பதில் சொல்வதற்கு முன், அதுல்யாவை கூர்மையான பார்வையில் நனைத்தபடி,''நீ எவ்வளவு நேரமா இங்கே நின்னுட்டிருக்கே?'' கேட்டார், முத்துக்குமரன்.
''கால்மணி நேரமாய் சார்.''
''இவங்க ரெண்டு பேரும், கார்ல வந்து கோவில் வாசல்ல நின்னப்ப நீ இங்கே இருந்தியா?''
''அந்த சமயத்துலதான் நான் வந்தேன். கோவில் பூட்டியிருந்ததால அவங்க கண்ணுல பட்டுடாம இந்த விளம்பர பேனருக்குப் பின்னாடி மறைவா ஸ்கூட்டியோடு நின்னுட்டேன். அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ளே போலீஸ் வேன் அந்த காருக்குப் பக்கத்துல வந்து நின்னதும், ஏதோ பிரச்னைன்னு நினைச்சு இன்னமும் மறைவாய் போய் நின்னுகிட்டேன். ஏன் சார், எதுக்காக என்னை இப்படி ஒரு குற்றவாளி மாதிரி விசாரணை பண்ணிட்டிருக்கீங்க... என்னோட, தோழி முகிலாவோட கல்யாணத்தைப் பார்க்க வந்தது தப்பா?''
''தப்பில்லை.''
''அப்புறம், எதுக்காக இந்த விசாரணை?''
''வீட்டிலிருந்து கோவிலுக்கு புறப்பட்ட முகிலா, இந்நேரம் இங்கே வந்து சேர்ந்திருக்கணும்... ஆனா, வந்து சேரலை. முகிலாவுக்கு போன் பண்ணினா எந்த, 'ரெஸ்பான்சும்' இல்லை. போன், 'டோட்டலி டெட்!' அந்த குழப்பத்துல தான் இப்ப நாங்க இருக்கோம்.''
அந்த அரையிருட்டிலும், அதுல்யாவின் முகம் அடியோடு மாறுவது தெரிந்தது.
''என்ன சார் சொல்றீங்க... நான், 5:00 மணிக்கு அவளுக்கு போன் பண்ணினப்போ, அவ பேசினாளே.''
புவனேஷ் குறுக்கிட்டு, ''என்ன பேசினா?''
''கால் டாக்சியில் வந்துட்டிருக்கேன். எப்படியும், 5:15க்குள்ளே கோவிலுக்குப் போய் சேர்ந்துடுவேன்னு சொன்னாளே...''
''அது எந்த கால் டாக்சின்னு தெரியுமா?''
''முகிலா எப்பவுமே, 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி'யை, 'புக்' பண்ணித்தான் எந்த ஒரு இடத்துக்கும் போயிட்டு வருவா... நான் பார்த்திருக்கேன் சார்.''
''இன்னிக்கு, 'புக்' பண்ணினதும் அந்த, 'லிட்டில் ஸ்டார்'தான்னு தெரியுமா?''
''அநேகமாய் அவ, 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி'யில் தான், 'டிராவல்' பண்ணியிருக்கணும். ஏன்னா, முகிலா தன் மொபைல்போனில் அந்த, 'கால் டாக்சி'யோட நம்பரை, பதிவு செய்து வெச்சிருந்ததை நான் பார்த்திருக்கேன்.''
அதுல்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்துக்குமரன் தன் மொபைல் போனை எடுத்து கூகுளுக்குப் போய், 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி' நம்பரை தேடி, அந்த எண்ணைத் தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில், 'ரிங்' போய் உடனே இணைப்பு கிடைத்தது. ஒரு ஆண் குரல், ''ஹலோ குட்மார்னிங்...
இது, லிட்டில் ஸ்டார் கால் டாக்சி.''
''குட்மார்னிங்... ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் பேசறேன்.''
''சொல்லுங்க சார்.''
''உங்க பேர் என்ன?''
''அகிலன் சார்.''
''அகிலன்... நான் இப்ப உங்க, 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி'க்கு போன் பண்ணினது, டாக்சியை, 'புக்' பண்றதுக்காக இல்லை.''
''தென் வாட் சார்?''
''ஒரு முக்கியமான விசாரணைக்காக.''
''விசாரணையா?''
''எஸ்... நான் கேட்கற கேள்விகளுக்கு நீங்க உண்மையான பதில்களைச் சொல்லணும். பொய் பேசினா, நீங்க ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்க வேண்டியிருக்கும்.''
''எ... என்ன கேட்கப் போறீங்க சார்?''
''இன்னிக்கு விடிகாலை, 4:30 - 5:00 மணிக்குள்ளே எத்தனை பேர் உங்களுக்கு போன் பண்ணி டாக்சியை, 'புக்' பண்ணியிருக்காங்கன்னு சொல்ல முடியுமா?''
''ஒரு நிமிஷம் சார்...''
முத்துக்குமரன் காத்துக்கொண்டிருக்க, அந்த நிமிஷம் முடிவதற்குள்ளாகவே, ''மொத்தம், 11 பேர்,'' என, பதில் வந்தது.
''அதுல, 'முகிலா'ங்கிற பேர் இருக்கான்னு பாருங்க.''
''இருக்கு சார்... 4:45 மணிக்கு டாக்சியை, 'புக்' பண்ணியிருக்காங்க. அவங்க பேர் எங்களோட கால் டாக்சியோட, 'கஸ்டமர்ஸ் ரிஜிஸ்டர்ல' இருக்கு.''
''முகிலா சொன்ன அந்த, 'பிக் - அப்' பாயின்ட் எது?''
''பீளமேடு சந்திரகாந்தி நகர் சார்!''
''ட்ராப் ஆப் பாயின்ட்?''
''ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு சார்!''
''அந்த டாக்சியோட நம்பர் என்ன?''
பதிவு எண்களை நிறுத்தி, நிதானமாக சொல்லி முடித்தார்.
''என்ன வண்டி?''
''மாருதி ஆல்டோ சார்!''
''டிரைவர் யாரு?''
''பேரு மகுடபதி, என்ன விஷயம் சார்... அந்த டிரைவர் ஏதாவது பிரச்னை பண்ணிட்டாரா?''
''சொல்றேன்... முதல்ல அந்த டிரைவர் மகுடபதி, 'கஸ்டமர்' முகிலாவை, ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்ல, 'ட்ராப்' பண்ணிட்டாரா, இல்லையான்னு எனக்குத் தெரியணும்.''
''பண்ணிட்டார் சார்!''
''அது எப்படி உங்களுக்குத் தெரியும்... டிரைவர்கிட்டே நான் பேசணும்... என் போனை, 'ஹோல்டிங்'கில் வெச்சுட்டு, அந்த டிரைவருக்கு, 'கான்பிரன்ஸ் கால்' போடுங்க...''
''சாரி... சார் பிரச்னை என்னான்னு தெரியாம?''
மறுமுனையிலிருந்த அகிலன் குரலை இழுக்க... நிதானமிழந்தார், முத்துக்குமரன்
''யோவ்... போன் பண்ணுய்யா... நான் அந்த டிரைவர்கிட்டே பேசும்போது, உனக்கு எல்லாமே புரியும். 'லேட்' பண்ணாம போன் பண்ணு.''
''மறுபடியும் சாரி சார்.''
''எதுக்கு சாரி? ''
''அந்த டிரைவர் கூட இப்ப நீங்க கான் கால்ல பேச முடியாது சார்.''
''ஏன்?''
''டிரைவர் டி.பி., ரோட்ல அந்தப் பொண்ணு முகிலாவை, 'ட்ராப்' பண்ணினதும், எனக்கு போன் பண்ணி, 'ராத்திரி முழுவதும் வண்டியை ஓட்டினதில் ரொம்பவும், 'டயர்டா'யிருக்கு. ரெண்டு மணி நேரமாவது நான் துாங்கணும். 'கஸ்டமர்ஸ் பிக் - அப்' எதுவும் வேண்டாம்'ன்னு சொல்லிட்டு, தன் போனை, 'ஸ்விட்ச் ஆப்' பண்ணிட்டார் சார்.''
''சரி, டாக்சி இப்ப எங்கேயிருக்குன்னு ஜி.பி.எஸ்.,சை பார்த்து சொல்லு!''
''பார்த்துட்டேன் சார்!''
''எங்கே? ''
''லாலி ரோடு பாரஸ்ட் காலேஜூக்குப் பக்கத்துல வண்டி நின்னுட்டிருக்கு சார்!''
— தொடரும்
ராஜேஷ்குமார்