காசியில், பிரேமாபாய் எனும் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். ஹரி பக்தியில் தலை சிறந்தவள்; முக்தி அடைய வேண்டும் என்பதே அவளுடைய பெரும் விருப்பம்.
தினமும் பாகவதம், கதா காலட்சேபம் கேட்பதுடன், பாகவதர்களிடமும், பாகவதத்திலும் அவளுக்கு அளவு கடந்த விருப்பம் இருந்தது. அது மட்டுமல்ல, தன் மகனையும் அப்படியே பழக்கியிருந்தாள்.
பாகவதர்களைக் கண்டால், பரிவோடு அவர்களை உபசரித்து, அவர்களுக்கு உணவிட்டு அனுப்புவதைக் கடமையாகவே கொண்டிருந்தாள்.
ஒருநாள், பாகவதர்கள் சிலர் வந்தனர். அவர்களை உபசரித்து, பணிவிடை செய்து, அவர்களுக்கான உணவைத் தயாரிப்பதில் தீவிரமாக இருந்தாள், பிரேமாபாய்.
தன் மகனை அழைத்து, 'நீ போய் இன்று பாகவத கதாகாலட்சேபம் கேட்டு வந்து, எனக்குச் சொல்...' என்றாள்.
மகன் சென்றதும், உணவைத் தயாரித்து முடித்த பிரேமாபாய், பாகவதர்களை அமர்த்தி அவர்களுக்கு உணவு படைத்தாள். அவர்கள் உண்டு முடித்த சற்று நேரத்தில் திரும்பினான், மகன்.
அவனும் உணவுண்ட பின், 'இன்று கேட்ட பாகவதக் கதையைச் சொல்...' என்றாள், பிரேமாபாய்.
மகனும், அவன் மொழியில், 'அம்மா... இந்தக் கண்ணனோட குறும்புகள் ஜாஸ்தியா போச்சாம். அம்மா யசோதை, கண்ணனைப் புடிச்சி உரல்ல கட்றதுன்னு தீர்மானம் பண்ணினாளாம். கயிறு நீளம் பத்தல. இன்னொரு கயிறு, இன்னொரு கயிறுன்னு கயிறுங்கள சேத்து, கண்ணன உரல்ல கட்டிப் போட்டா. 'அம்மா... என்னக் கட்டவிழ்த்து விடும்மா. இனிமே நா(ன்) குறும்பு பண்ண மாட்டே'ன்னு கெஞ்சினார், கண்ணன். ஆனா, யசோதையோ கேக்கவே இல்ல. கண்ணன் பாவம்மா...' என்று, பாவனையோடு அனுபவித்துச் சொன்னான்.
கேட்டுக் கொண்டிருந்த பிரேமாபாய், தன்னிலை மறந்தாள். கண்ணன் கதை நடந்தது துவாபர யுகத்தில், நாமிருப்பது கலியுகத்தில் என்ற ஆராய்ச்சியெல்லாம் அவளுக்கு இல்லை.
கண்ணன் கட்டப்பட்டிருக்கிறான்; என்ன கெஞ்சியும் யசோதை இரங்கவில்லை என்பதைக் கேட்டவுடன், 'கண்ணா... உன்னைக் கட்டிப்போட்டு விட்டார்களா? இதோ நான் வந்து கட்டுகளை அவிழ்த்து விடுகிறேன்...' என்று கூவியபடியே எழுந்து ஓடினாள்.
அதே விநாடியில், கண்ணன் காட்சியளித்து, அவளுக்கு முக்தியளித்தார். அவள் விருப்பம் நிறைவேறியது.
எண்ணியதை அடைய தீவிரமான முயற்சியும், அதற்கு உண்டானவர்களிடம் பரிவான அணுகுமுறையும் இருக்க வேண்டும். இருந்தால், தெய்வம் முன்னின்று எண்ணியதை முடிக்கும் என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
ஒரு செயல் துவங்கும் முன், விநாயகருக்கு தேங்காய் உடைப்பது, பசுவிற்கு வாழைப்பழம் தருவது வெற்றிக்கு வழி வகுக்கும்.