அண்ணாதுரை, 1968ல், ஐரோப்பிய நாடான இத்தாலியின், வாடிகன் நகரில் போப்பை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. போப்புடன் சில நிமிடங்களே பேச அவருக்கு அனுமதி தரப்பட்டிருந்தது.
மனிதாபிமானம் மிக்க அண்ணாதுரை, அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு தலைவரை சிறையிலிருந்து விடுவித்தார்.
கோவாவின் விடுதலைக்காக போராடியவர், ரானடே எனும் தலைவர். அவர் மீது குற்றம் சுமத்தி, அவரை போர்த்துக்கீசிய நாட்டில் சிறையில் அடைத்து விட்டனர். அவர், பல ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வந்தார்.
போப்பை சந்தித்தபோது, போர்த்துகீசிய சிறையில் இருந்த ரானடேவை விடுதலை செய்ய உதவும்படி கோரினார், அண்ணாதுரை.
அண்ணாதுரையின் கோரிக்கையிலிருந்த நியாயத்தை உணர்ந்த போப், ரானடேவை சிறையிலிருந்து விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்க, விடுதலையானார், ரானடே.
ஒருமுறை, தனக்கு வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்தார், வினோபா.
காந்திஜியிடமிருந்து வந்த கடிதத்தை படித்து முடித்ததும், கிழித்து எறிந்தார். உடன் இருந்தவர்களுக்கு, வினோபாவின் இச்செய்கை ஆச்சரியத்தை தந்தது.
காந்திஜியின் கடிதத்தை வினோபா ஏன் கிழித்து எறிந்தார் என்று நினைத்து குழப்பமடைந்தனர். அவர்களின் மனநிலையை புரிந்த, வினோபா, 'காந்திஜி, தன் கடிதத்தில், என்னை அளவிற்கு அதிகமாக புகழ்ந்திருந்தார். அந்த கடிதத்தை என்னுடயே வைத்துக் கொண்டால், அதிலுள்ள வாசகங்கள் என்னை அகந்தை உடையவனாக மாற்றி விடும். அதற்காகவே அந்த கடிதத்தை கிழித்துப் போட்டேன்...' என, பதிலளித்தார்.
வினோபாவின் தன்னடக்கத்தை நினைத்து, உடன் இருந்தவர்கள், மிகவும் பெருமைப்பட்டனர்.
சென்னை மாகாணத்தின் முதல்வராய் பதவி வகித்துக் கொண்டிருந்தார், ராஜாஜி. அப்போது ஒருநாள், தன் உதவியாளரை அழைத்து, அவரிடம் ஒரு கவரை கொடுத்து, அதில் அஞ்சல் தலையை ஒட்டி வருமாறு கூறினார்.
ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்த காலத்தில், ஆங்கிலேய மன்னர்களின் உருவப்படங்களே தபால் தலைகளில் அச்சிடப்படுவது வழக்கம். உதவியாளர், அந்த கவரை வாங்கிச் சென்று, அஞ்சல் தலையை உறையில் ஒட்டி எடுத்து வந்தார்.
அஞ்சல் தலை ஒட்டப்பட்ட அந்த கவரை பார்த்த ராஜாஜி, சிரித்துக் கொண்டே தன் உதவியாளரிடம், 'நாங்க பிரிட்டிஷ் ராஜாக்களை கவிழ்க்கணும்ன்னு எவ்வளவோ முயற்சி பண்ணிகிட்டிருக்கோம். நீ ஒரு நொடியிலே கவிழ்த்துட்டியே...' என்றார்.
கவனக்குறைவாக, அஞ்சல் தலையை தலைகீழாக ஒட்டியிருந்தார், ராஜாஜியின் உதவியாளர்.
இதையே, ராஜாஜி நகைச்சுவையாக சொல்லி, அவர் செய்த தவறை உணர்த்தினார்.
பிரபல ஜெர்மன் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், 'ரிலேடிவிடி' தத்துவத்தால் மிகவும் பிரபலமடைந்தார். இதைப் பொறுக்காதவர்கள், புத்தகம் ஒன்றை எழுதினர். '100 ஆதர்ஸ் அகைன்ஸ்ட் ஐன்ஸ்டீன்' என்பது புத்தகத்தின் பெயர்.
'இப்படி, 100 எழுத்தாளர்கள் உங்களுக்கு எதிராக ஒரு புத்தகத்தை எழுதியிருக்கின்றனரே...' என்று, ஐன்ஸ்டீனிடம், அவரது அபிப்ராயத்தை கேட்டனர், சிலர்.
அதற்கு, 'நான் தவறு செய்திருக்கிறேன் என்றால், அதை நிரூபிக்க ஒருவர் போதாதா என்ன... எதற்கு, 100 பேர் வேண்டும்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்