அன்பு அம்மா —
இல்லத்தரசி, வயது: 30. நுாலகராக பணிபுகிறார், கணவர். எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு ஒரே மகள். வயது ஏழு. இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். எனக்கு அடங்கிதான் நடப்பார், கணவர்.
நான் ஒரு சாப்பாட்டு பிரியை. திருமணத்தின் போது, 50 கிலோ எடை இருந்த நான் தற்சமயம், 76 கிலோ இருக்கிறேன். திருமணத்தின் போது நீளமாக இருந்த தலைகேசம் சுருங்கி அரையடி கூந்தல் ஆகி விட்டது. தினம் பகலில் மூன்று சீரியல்களும், இரவில் நான்கு சீரியல்களும் பார்ப்பேன். மாதா மாதம் இரண்டு புதிய புடவைகள் எடுத்து உடுத்துவேன்.
என் திருமண வாழ்வின் ஒரே எதிரி, மாமியார் கிழவி தான். என் மாமியார் ஒரு, 'டயட்' ராட்சசி. காலையில், ஒரு முட்டை தோசை. மதியம், இரண்டு காய்கறிகளுடன் சோறு. இரவு, இரண்டு சப்பாத்தி. தினம் அதிகாலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு, தேன் கலந்த எலுமிச்சை சாறு பருகுவார். தினம் இருவேளை பல் துலக்குவார்.
தினம் ஒருமணி நேரம் நடப்பார். வயது, 50 ஆனாலும், 48 கிலோ எடையில் கச்சிதமாக காட்சியளிப்பார். தலை சிறிதும் நரைக்கவில்லை. முத்துபோல பல் வரிசை. காட்டன் புடவைதான் உடுத்துவார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்து போனார், மாமனார். குடும்ப ஓய்வூதியம் மாமியாருக்கு கிடைக்கிறது. சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, எங்களுடன் தங்கி இருக்கிறார்.
தினம் மாமியார் தான் சமையல் செய்வார். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார். பேத்தியை பள்ளிக்கு அழைத்து போய் வருவார்.
என்னுடன் நேருக்கு நேர் பேசும்போது அன்பாய் நடிப்பார். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார். நான், 'டிவி' தொடர்கள் பார்க்கும்போது, அவர் முகநுாலில் உலாவுவார். ஒருநாள் அவரது முகநுால் பக்கத்தை உளவறிந்தேன். அதில், 'மருமகள் எனும் துஷ்ட மிருகத்தை கண்டால் சிரித்து கொண்டே துார விலகு...' என, பதிவு போட்டிருந்தார்.
அவருடைய வார்த்தை போரெல்லாம் என் முதுகுக்கு பின்தான். மகனிடம், பேத்தியிடம், அக்கம்பக்கத்தினரிடம் என்னைப் பற்றி வசவு விமர்சனம் செய்வார்.
குண்டு குந்தாணி, தின்னிப்பண்டாரம், வாயாடி வனஜா, சீரியல் பைத்தியம், ஆடம்பர ஆரவல்லி, குடும்ப உறவுகளை பேண தெரியாத ஆதிவாசி, எங்க வீட்டு சர்வாதிகார மீனாட்சி... இவையெல்லாம், மாமியார், எனக்கு சூட்டிய பட்டங்கள்.
கணவரும், மகளும், அக்கம்பக்கம் நட்பும், உறவுகளும் இதனால் என்னை அருவருப்பாய் பார்ப்பர். செய்வதெல்லாம் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் நடிப்பார்.
நான் மோசமல்ல, மாமியார்தான் மோசம் என, நான் தன்னிலை விளக்கம் அளித்தால் யாரும் என் பேச்சை ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்வதில்லை.
என்னிடம் குறை இருந்தால் நேருக்கு நேர் பேசி, என்னை திருத்த வேண்டியதுதானே, ஏனிந்த சகுனி வேலை பார்க்கிறார்? மாமியார் கிழவியை என் வீட்டிலிருந்து நிரந்தரமாய் விரட்டி அடிப்பது என, முடிவு எடுத்து விட்டேன்.
என் கணவர் ஒரு பொட்டுபூச்சி. எதிர்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டார். மாமியாரை வெளியேற்றுவது பற்றி உங்கள் கருத்து என்ன அம்மா?
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
சொல்லித்திருத்த முடியாத பெண் நீ என்பதால் தான், உன் மாமியார் சிரித்தபடி உன்னிடமிருந்து விலகிப் போகிறார். உன் தவறுகளை சுட்டிக்காட்டினால், வீட்டில் மூன்றாவது உலகப்போர் மூளும். தன் உள்ளக்குமுறலை நெருப்புக்கோழி போல விழுங்க முடியாமல் பிறரிடம் உன்னைப் பற்றி விமர்சித்திருக்கிறார், மாமியார்.
மாமியாரை நீ விரட்டிவிட்டால் நஷ்டம் அவருக்கு அல்ல, உனக்குத்தான். வீட்டு சமையலை நீதான் செய்ய வேண்டும்.
மகளை பள்ளிக்கு கூட்டி போகவும், வீட்டுக்கு அழைத்து வரவும் நீதான் நடையாய் நடக்க வேண்டும்.
மாமியார் உன்னை பற்றி பிறரிடம் அவதுாறாய் விமர்சிக்கிறார் என்பது மட்டும் உன் பிரச்னை அல்ல. 50 வயதிலும், 20 வயது பெண்ணைப் போல தன் உடலை மாமியார் பராமரிக்கிறாரே என்ற பொறாமையும் உனக்குள் தலைவிரித்து ஆடுகிறது.
மாமியார் வீட்டை விட்டு வெளியேறினால், அடுத்த சில மாதங்களிலேயே நீ, 100 கிலோ மாமிச மலையாகி விடுவாய். மாதத்திற்கு இரண்டுக்கு பதில் ஐந்து சேலைகளை வாங்குவாய். உன் கணவன் கடனாளியாவான்.
இனி நீ செய்ய வேண்டியது...
மாமியாருக்கு வெள்ளைக் கொடி காட்டி, சரணடைந்து விடு. மாமியாரின் ஆவலாதிகளை வெளிப்படையாக கேட்டு, உன்னை திருத்திக் கொள். மாமியாருடன் சேர்ந்து யோகா செய். 'டயட்'டை கடை பிடி. சமையல் வேலைகளை பாதி பகிர்ந்து கொள்.
காலையில், பள்ளிக்கு குழந்தையை மாமியார் கூட்டி போகட்டும். மாலையில், நீ குழந்தையை வீட்டுக்கு கூட்டி வா. பண்டிகை தினங்களுக்கு மட்டும் புத்தாடை வாங்கு. உனக்கு வாங்கும்போது, மாமியாருக்கும் சேர்த்து வாங்கி கொடு.
கணவனுக்கு அடிமையாக இராதே. கணவனை அடிமையாகவும் ஆக்காதே.
சீரியல்கள் பார்ப்பதை குறை. மாமியாரை பரம விரோதியாக பார்க்கும் மனோபாவம் தானாகவே மாறிவிடும்.
மாமியாரின் முகநுால் பக்கத்தை உளவறியாதே. நட்பு கோரிக்கை கொடுத்து மாமியாருடன் நட்பாகு. மாமியார் கண்களுக்கு துஷ்ட மிருகமாக தெரிந்த நீ, மானாகவும், மயிலாகவும், குயிலாகவும் தெரிய ஆரம்பித்து விடுவாய்.
குறைந்தபட்ச செயல் திட்டங்களுடன் இருவரும் கை குலுக்கிக் கொள்ளுங்கள். மாமியாரின் இருப்பை நீ அங்கீகரி. உன் இருப்பை, மாமியார் அங்கீகரிக்கட்டும். இன்னும், 18 ஆண்டுகள் கழித்து நீ மாமியாரானால் உன் மருமகளிடம் என்னென்ன எதிர்பார்ப்பாயோ அத்தனையையும் மாமியாருக்கு இப்போது செய்.
மாமியாரின் சலிப்புகளை சிலாகிப்புகளாக மாற்று. மீண்டும், நீ பிப்டிகேஜி தாஜ்மஹாலாக வாழ்த்துகிறேன்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.