கண்ணில் படும் காட்சிகள் எல்லாம், சிவகாமிக்கு பழகிப் போய் விட்டது.
மனது மரத்துப் போய் விட்டது என்று கூட சொல்லலாம்.
கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து, தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எதிர்க்கட்டிலில் கால்கள் செயலிழந்த புருஷன், வெங்கன். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்களில் பாத்திர பண்டங்கள், பிளாஸ்டிக் சாமான்கள் மற்றும் தட்டுமுட்டுப் பொருட்கள் மிதந்து சென்று கொண்டிருந்தன.
சிவகாமிக்கு ஆஸ்பத்திரியில், ஆயா பணி.
பணி முடிந்ததும், வீட்டிற்கு வந்து குளித்து, விளக்கேற்றி, உடனே ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று மனம் நிறைவாக சாமி கும்பிட்டு திரும்புவாள். அங்கு தரப்படும் ஒரு தொன்னை பொங்கலோ, புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ, தயிர் சாதமோதான் அவள் இரவு உணவு. சில சமயம் எதுவும் கிடைவில்லையென்றால், டீக்கடையில் ஒரு கப் பால் வாங்கிக் குடித்து, வந்து படுத்துக் கொள்வாள்.
சென்ற மாதம், மாம்பலம் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றபோது, அங்கு உபதேசம் செய்து கொண்டிருந்தவர், 'மனிதன் எதைக் கொண்டு வந்தான் கொண்டு போவதற்கு?' என்று சொன்ன வார்த்தைகள் மனதில் பதிய, அதையே சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.
இப்போது இந்த பேய் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிற பொருட்களும் அவளுக்கு அதை நினைவூட்டின.
வெள்ளத்தில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. சில சிறுசுகள், நீரில் இறங்கி, அதை போட்டி போட்டு கைப்பற்றின. நேற்று, அது வேறு ஒருவருடையது.
''என்ன, சிவா... டீக்கு வழியுண்டா?'' எதிர்க்கட்டிலில் படுத்திருந்த, வெங்கு மெல்ல கேட்டான்.
அவளையொத்த பெண்களின் புருஷமார்கள் குடி, கூத்து, அடி தடி என்று இருக்கும்போது, தங்கமாக இருந்தான், வெங்கன். சிவகாமியிடம் அப்படி ஒரு பாசம். அவளை, 'சிவா'ன்னு தான் கூப்பிடுவான். மற்ற புருஷமார்களுக்கும், பொண்டாட்டி மார்களுக்கும் இவர்கள் மேல் பொறாமையே வந்தது.
நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் தானே?
அவர்கள் பயந்தபடியே குடும்பத்தில் துயர் சூழ்ந்தது.
ஒருநாள், வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த, வெங்குவை, தண்ணீர் லாரிக்காரன் இடித்து தள்ளி போய் விட்டான். அன்றிலிருந்து வெங்குவால் பணிக்கு செல்ல முடியவில்லை. குடும்ப சூழல் கருதி, சிவகாமிக்கு அந்த பணி கொடுக்கப்பட்டது.
மருந்துக்கே பாதி செலவு; மிக கஷ்ட ஜீவனம்.
'செத்து விடலாமா...' என்று கேட்டான்.
அவன் வாயைப் பொத்தி, தலையில் செல்லமாக குட்டுவாள். ஆனாலும், கண்ணீர் துளிர்க்கும்.
'யோவ்... நமக்கு பிள்ளையில்ல. உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தைன்னு வாழ்ந்துட்டு இருக்கோம்... என்னைய்யா பேச்சு இதெல்லாம்...'
'மன்னிச்சிக்கோ சிவா... இனி, இப்படி பேசமாட்டேன்...' என்பான்.
அவள் தலையை பாசமாக கோதி விடுவான்.
''மழை துாறிகிட்டு இருக்குய்யா, டீக்கடைக்கு போக முடியல... பக்கத்து குடிசைக்காரிக ஒரு டம்ளர் பால் தர மாட்டேங்குறாளுக... நம்ம மேல பொறாமைய்யா... மனுஷங்க நல்லவங்களா இருக்கிறது தப்பாய்யா.''
''வேற இடம் மாறிடலாம், சிவா.''
''வேணாங்க, கொசுவுக்கு பயந்து கோட்டைய விட்டு ஓடறதாவது... பட்டா வேறு தயாராயிருச்சுங்கிறாங்க.''
''இன்னிக்கு சாப்பாட்டுக்கு பணம் இருக்கா?''
''சல்லி காசு கிடையாது; அதான் முழிக்கிறேன். நான் பட்டினி கெடந்துருவேன்யா, உன்ன நினைச்சாதான் கவலையா இருக்கு. ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுத்தான் நீ மருந்து சாப்பிடணும்.''
சட்டென்று யோசனை உதிக்க, சாமி படத்தருகே சென்று மண் உண்டியலை, 'நச்' சென்று உடைத்தாள். டிபனுக்கு பணம் கிடைத்து விட்டது.
''இப்படி, 'பட் பட்'டென்று சாமி உண்டியலை உடைக்கப் போய்த்தான் குழந்தை வேணும்ன்னு நீ வேண்டறது பலிக்க மாட்டேங்குது,'' என்றான், வெங்கன்.
''அட போய்யா, ஆபத்துக்குப் பாவம் இல்ல... ஏழை கடன் ஏழு வருஷம்யா.''
கஷ்டப்பட்டு தண்ணீரில் நடந்து, டீ, டிபன் வாங்கிக் கொண்டாள்.
தண்ணீரின் வேகம் குறைந்தாலும் அளவு குறையவில்லை. ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரித்தால், நிலைமை இன்னும் மோசமாகலாம். நான் எப்படியாவது சமூக நலக்கூடம் போய் விடலாம். வெங்கனால் முடியாது. அவனைத் தோளில் சுமந்து போக ஆளில்லை.
அதிகாரிகளுக்கு காண்பிக்க தோதாக இருக்கும் என்று, இரவு படுக்கப்போகும் முன், கதவருகே உள்ள தண்ணீர் அளவை படமெடுத்துக் கொண்டாள். சென்ற ஆண்டு எடுக்காமல் விட்டதால், அதிகாரிகளை நம்ப வைக்க, உதவித்தொகை வாங்க, படாதபாடு பட்டாள்.
எப்போது கண்ணயர்ந்தாள் என்று தெரியவில்லை.
பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்தாள்.
அதிகாலை, 3:40 மணி.
'கனவா... அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே... என் கையில் ஒரு குழந்தை தவழப் போகிறதா?'
மீண்டும் அழுகுரல்.
மெல்ல எழுந்து, ஈரத்தில் கால் வைத்து, விளக்கைப் போட்டதும், அதிர்ந்தாள்.
வாசல் அருகே இருந்த ஸ்டூலில் அழகிய சின்ன பிளாஸ்டிக்கூடை. அதில், தங்க விக்ரகம் மாதிரி ஒரு ஆண் குழந்தை. சில்லிட்டது சிவகாமிக்கு. கை, கால்கள் நடுங்கின.
காண்பது கனவில்லை, நிஜம்.
திறந்த வாய்க்குள் கொசுக்கள், 'ஜயண்ட் வீல்' விளையாடிக் கொண்டிருப்பது தெரியாமல், துாங்கிக் கொண்டிருந்த வெங்கனை எழுப்பினாள்.
அவனும் அதிர்ந்து போனான்.
''என்னடி இது?''
''சத்தம் போடாதீங்க...'' என்றபடியே ஓடி, மொபைலை எடுத்து வந்து போட்டோ பிடித்தாள். அதன்பின், குழந்தையை மெல்ல எடுத்தாள். கூடையினுள் சின்ன ப்ளாஸ்கில் வென்னீர், பால்பவுடர், பீடிங் பாட்டில் இத்யாதி.
'அடப்பாவி மவளே... எவளோ ஒருத்தி திட்டமிடாம பெத்துட்டு, திட்டம் போட்டு விட்டுட்டுப் போயிட்டாளே...'
ஆஸ்பத்திரி பணி, அவளுக்கு கை கொடுத்தது. குழந்தைக்கு பால் புகட்டி, கிழிந்த கம்பளி ஒன்றை போர்த்தி, கதகதப்பாக அணைத்துக் கொண்டாள்.
'நல்ல வேளை... மகராசி, மழைத் தண்ணீரில் எறியாமப் போனாளே... அவ நல்லா இருக்கணும்...'
குழந்தை அயர்ந்து துாங்கியது.
சாமி படத்திற்கு காட்டிவிட்டு, புருஷன் கையில் கொடுத்தாள்.
மெல்ல முத்தமிட்டு, கண்ணீர் மல்க குழந்தையை பார்த்தான், வெங்கன்.
சிவகாமியைப் பார்த்து ரகசியமாய் சிரித்து, ''இனி, கணவனுக்கு கிடைக்காது குழந்தைக்குத்தான் முத்தம்.''
''அடச்சீ... போய்யா,'' நாணத்துடன் சிணுங்கினாள்.
மறுநாள் காலை பளீரென விடிந்ததும், சூரியன் வந்து விட்டான். தண்ணீர் வடிந்திருந்தது. குழந்தையின் வீறிட்ட அழுகுரலால், சிவகாமி வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிட்டது. ஆளாளுக்கு ஏதேதோ கூறினர்.
குழந்தையைக் காண்பித்துவிட்டு உள்ளே வந்த சிவகாமி, திடீரென ஏங்கி ஏங்கி அழுதாள். வெங்கன் காரணம் கேட்டும் சொல்லவில்லை.
பிறகு, முகத்தை துடைத்து, குழந்தையை அதன் கூடையிலேயே வைத்து எடுத்துக்கொண்டு கிளம்பியவளைப் பார்த்து அதிர்ந்தான், வெங்கன்.
''ஏய் சிவா... என்னம்மா?''
''கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்துட்டு வந்துடறேன்யா.''
அதிர்ந்து, ''லுாஸாடி நீ... பல ஆண்டுகளா சாமிகிட்ட வேண்டிகிட்டு, கோவில் கோவிலா போறே... அவரா கொடுத்ததுடி.''
''ஆமாய்யா... சாமி சரியான ஆளுக்குத்தான் கொடுத்திருக்கார். ஆனா, சரியில்லாத நேரத்துல கொடுத்திருக்காரே.''
''என்னடி சொல்றே, புரியும்படியா சொல்லித் தொலை,'' இவ்வளவு கோபமாக அவளிடம் இதுவரை அவன் கத்தியதில்லை.
''ஆமாங்க... இதே குழந்தை, சில ஆண்டுகளுக்கு முன் கிடைச்சிருந்தா, வாரியணைச்சு, உச்சி முகர்ந்து எடுத்திருப்பேன். இப்ப நம் நிலைய யோசிச்சு பார்த்தீங்களா... நடக்க முடியாம படுத்துக்கிடக்கிற நீங்க தான், என் முதல் குழந்தை. உங்க கால் எப்ப சரியாகும்ன்னு சொல்ல முடியாத நிலை. இந்த குழந்தைய, போலீஸ்ல ஒப்படைச்சா ஆயிரம் பேர் பார்த்துக்க வருவாங்க.
ஆனா, குழந்தை இங்கிருந்தா, உங்கள யாருங்க பார்த்துப்பா? நிச்சயம் நமக்கு நல்ல காலம் பிறக்கும்ங்க,'' நெஞ்சில் பொங்கிய ஈர உணர்வு, கண்களிலும் துளிர்த்தது.
குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள், சிவகாமி.
வானத்தில் மீண்டும் மழை மேகங்கள் திரண்டன.
ஆம், நீரின்றி அமையாது உலகம்!
கே. ஜி. ஜவஹர்