ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அலங்கார விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பட்டாடைகளுடன் பவனி வரும் பணக்கார வர்க்கத்தினிரிடையே முகமெல்லாம் மிளிரிட தன் மனைவி தனலெட்சுமியுடன் நின்றிருந்தார், ரத்னவேலு.
அவர்களுடைய, 25வது மண விழாவின் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த கோடீஸ்வரரின் ஒரே மகளான யாழினி கழுத்திலும், காதிலும் வைரங்கள் ஜொலிக்க, தன் வயதுள்ள தோழியருடன் சிரித்துப் பேசியபடி இருந்தாள்.
''என்ன ரத்னவேலு மகளுக்கு கல்யாண வயசு வந்தாச்சு. எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?''
''கல்யாணங்கிறது ஆயிரம் காலத்து பயிர்னு சொல்வாங்க. ஒரே மகள் இல்லையா... நிதானமாக, பொறுமையாக அவளுக்கேத்த வரனாகப் பார்க்கணும்.''
சொல்லும் ரத்னவேலுவை, மேலும் கீழுமாகப் பார்த்தார், நண்பர்.
''நீங்க இப்படி சொல்லலாமா... உங்க கண் அசைவுக்கு எத்தனை பேர் காத்திருக்காங்க தெரியுமா? பெரிய, பெரிய பிசினஸ்மேன் எல்லாம் உங்க வீட்டில் பெண் எடுக்கத் துடிக்கிறாங்க. நீங்க சொல்றதைப் பார்த்தா சுயம்வரம் நடத்திதான் மகளுக்கு மாப்பிள்ளையை தேர்வு செய்வீங்க போலிருக்கு.''
''கிட்டத்தட்ட அதே மாதிரி தான்,'' என சிரித்தார், ரத்னவேலு.
சின்னதாக டைல்ஸ் கடை ஆரம்பித்தவர் உழைப்பு, விடாமுயற்சி மூலம் இன்று குவாரிக்கே சொந்தக்காரராக இருக்கிறார்.
'எல்லாம் நம் மகள் பிறந்த அதிர்ஷ்டங்க. நம்மை கோபுரத்தில் கொண்டு போய் வச்சிருக்கு. அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் வளர்க்கணும்...' இரண்டு வயது மகளைத் துாக்கிக் கொஞ்சியபடி பெருமையுடன் கணவரிடம் சொல்வாள், தனலெட்சுமி.
அது உண்மை என்பதை ஆமோதிப்பது போல மவுனமாக சிரிப்பார்.
'அம்மா, துணிக்கடைக்கு போறேன், எனக்கு பட்டுப்புடவை புது டிசைனில் வந்திருப்பதை வாங்கணும். அப்பாகிட்டே சொல்லி, பத்தாயிரம் வாங்கிக் கொடும்மா...'
யாழினி அம்மாவிடம் கேட்டதைக் காதில் வாங்கியபடி வந்தவர், 'என்ன யாழினி, போன மாசம் தான் அம்மாவை அழைச்சுட்டுப் போயி நாலு பட்டுப் புடவை வாங்கிட்டு வந்தே... அதுக்குள்ள அதெல்லாம் பழசாயிடுச்சா...'
சிணுங்கலுடன், 'போங்கப்பா... அதையெல்லாம் வேற, வேற பங்ஷனுக்கு கட்டியாச்சு. அடுத்த வாரம் என், 'ப்ரெண்ட்' கல்யாணம் வருதுப்பா... அதுக்கு புதுசா வாங்கிக் கட்டினால்தான் எனக்கு பெருமையா இருக்கும்...'
'ஆசைகள் இருக்க வேண்டியது தான். ஆனால், பேராசைகள் கூடாதும்மா... பீரோ நிறைய அடுக்கி வச்சிருக்கியே, அதில் ஒண்ணைக் கட்டிட்டுப் போகலாம் இல்லையா?'
மகளுடன் விவாதம் செய்யும் கணவனை முறைத்தவள், 'போதுங்க. கடல் போல இருக்கிற சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசு அவள் தான். அவளை ஏன் தடுக்கறீங்க?
'யாழினி, நீ கிளம்பு... நான் அப்பாகிட்டே வாங்கி தரேன். பத்தாயிரம் என்ன அதற்கு மேல் ஆனாலும் பரவாயில்லை. உனக்கு மனசுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிக்க...'
'என் செல்ல அம்மா...' அவள் கன்னத்தைக் கிள்ளி, சந்தோஷத் துள்ளலுடன் சென்றாள், யாழினி.
அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்து, ''உங்களுக்கென்ன பைத்தியமா... யாழினிக்குப் பொருத்தமான வரன்னு சொல்லி... இப்படியொரு இடத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்திருக்கீங்க... எனக்கு சுத்தமா பிடிக்கலை.''
''தனம், நம்ப மகள் கல்யாணமாகி சந்தோஷமாக வாழணுங்கிறதுதானே நம்ப விருப்பம். அப்ப தாராளமாக இந்த வரனை முடிக்கலாம்.''
''இல்லைங்க நம்ப அந்தஸ்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத குடும்பம். அப்பா, 'கவர்மென்ட்' வேலையிலிருந்து, 'ரிடையர்ட்' ஆனவர், பையன் வங்கியில் வேலை. கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கச்சி. சொந்தமாக ஒரு வீடு அவ்வளவுதான். எப்படிங்க இப்படியொரு இடத்தில் மகளைக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்க?
''எத்தனையோ கோடீஸ்வரங்க நம்மோடு சம்பந்தம் வச்சுக்கத் தயாரா இருக்காங்க. உங்களால் முடியாட்டி சொல்லுங்க நானே பார்க்கிறேன்,'' கோபமானாள், தனலெட்சுமி.
''இங்கே பாரு தனம். இந்த விஷயத்தில் நான் யார் பேச்சையும் கேட்கிறதாக இல்லை. நான் ஒண்ணும் பரம்பரை பணக்காரன் இல்லை. என் முயற்சியில் உயர்ந்து இந்த இடத்துக்கு வந்திருக்கேன். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகள் தெரிந்த எனக்கு வாழ்க்கையைப் பத்தியும் தெரியும். நான் எடுத்த முடிவு சரியானதுதான். என் மகள் பரம சந்தோஷத்தோடு வாழ்வாள்.''
அம்மாவின் மடியில் படுத்து கண் கலங்கும் மகளைப் பார்த்து, ''வருத்தமா இருக்கா யாழினி?''
''இந்த கல்யாணம் வேண்டாம்பா. அம்மா சொல்றதைப் பார்த்தா பயமாயிருக்கு.''
மகளின் தலையை அன்பாக வருடி, ''நம்மகிட்ட தேவையான பணமிருக்கு யாழினி. இந்த சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசு நீதான். நீ வாழ்க்கைப்படப் போற வீட்டில் செல்வம் நிறைஞ்சு இருக்கணும்ன்னு இல்லை. அன்பான குடும்பமாக இருக்கணும். பெரிய இடம்ன்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு நாளைக்கு மனசளவில் நீ கஷ்டப்படலாமா! வெளிப்பகட்டு மட்டும் வாழ்க்கை இல்லை யாழினி, அப்பா எப்பவும் உன் நல்லதை மட்டும்தான் நினைப்பேன். என் மேல் நம்பிக்கையிருந்தா... இந்த வரனுக்கு சம்மதம் சொல்லு.''
அரை மனதோடு யாழினி தலையாட்ட, கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்து முழுசாக மூன்று மாதம் முடிய, மகளைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு தனலெட்சுமிக்கு அதிகமாகியது.
''என்னங்க... எந்த வசதியும் இல்லாத இடத்தில் என் மகளைக் கட்டிக் கொடுத்துட்டீங்க. செல்லமாக வளர்ந்தவள், எப்படி இருக்காளோ தெரியலை... போய்ப் பார்த்துட்டு வரலாம்ன்னு ஒரு மாதமாக சொல்றேன், காதில் வாங்க மாட்டேன்கிறீங்க. இரண்டு நாளில் வருஷப் பிறப்பு வருது. எனக்கு கட்டாயம் யாழினியைப் பார்க்கணும்.''
''கல்யாணமான புதுசு தனம். அவளுக்கு புகுந்த வீடு புரிபட வேண்டாமா... இந்த சமயத்தில் நாம் போய் தொந்தரவு பண்ணக் கூடாது. உன் மகள் நல்லாதான் இருப்பா. அதான் அடிக்கடி போனில் பேசறியே... அப்புறம் என்ன?''
''இல்லைங்க. போனில் பிடிகொடுத்து பேச மாட்டேங்கிறா... எது கேட்டாலும் சரியான பதில் இல்லை... வேலையா இருக்கேன்மா... அப்புறம் பேசறேன்னு போனை வச்சுடறா... எனக்கு நேரில் பார்த்தால் தான் திருப்தியா இருக்கும்.''
''சரி... நீ போகணும்ன்னு முடிவு பண்ணிட்டே... என்ன சொன்னாலும் கேட்க மாட்டே... நாளைக்குப் போய் பார்த்துட்டு வருவோம். ஸ்வீட், பழங்கள் எல்லாம் நிறைய வாங்கிக்க... அப்படியே உன் மகளுக்கு பிடிச்ச கலரில் பட்டுப் புடவை வாங்கிக்க... வருஷப் பிறப்புக்குத் தரலாம்.''
''நீங்க சொன்னாலும், சொல்லாட்டியும் வாங்கதான் போறேன். எனக்கு நிறைய வேலை இருக்கு,'' பரபரப்புடன் உள்ளே சென்றாள்.
காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்த மகளை, கட்டியணைத்துக் கண்கலங்கினாள், தனலெட்சுமி. முகமெல்லாம் வியர்த்து, தலை களைந்திருக்கும் மகளைப் பார்த்தாள்.
'எப்படி இருந்தவள், இந்த மூன்று மாதத்தில் இப்படி மாறிவிட்டாளே... முகத்திலிருந்த, மினுமினுப்பு போன இடம் தெரியவில்லையே...'
''எப்படிம்மா இருக்கே?'' கேட்கும் அப்பாவை புன்னகையோடு பார்த்தவள், ''நல்லா இருக்கேன்மா... வாங்க வந்து உட்காருங்க,'' என்றாள்.
குடும்பமே அவர்களை வரவேற்றது.
''நீ உட்கார்ந்து பேசிட்டு இரு யாழினி... அம்மா, அப்பாவுக்கு நான் சாப்பாடு தயார் பண்றேன்,'' மாமியார் சமையலறைக்குள் நுழைய, மருமகன் அவர்களிடம் மரியாதையுடன் விடைபெற்று வேலைக்குக் கிளம்பினான். மகளுடன் தனித்து விடப்பட, ''சொல்லு யாழி... நீ இங்கே சந்தோஷமா இருக்கியா... உன்னை எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்களா?''
''என்னம்மா இது... இது என் வீடு... எனக்கு இங்கே எந்தக் குறையுமில்லை... நீயும், அப்பாவும் அறையில் ஓய்வு எடுங்க... நான் அத்தைக்கு சமையலில், 'ஹெல்ப்' பண்றேன்.''
அவள் உள்ளே போக, கணவனைப் பார்த்தாள், தனலெட்சுமி.
''எனக்கென்னவோ சரியாத் தெரியலைங்க... யாழினி இளைச்சுப் போயிட்டா... எதையோ நம்பகிட்டே மறைக்கிறா... நான் அப்பவே சொன்னேன். நீங்க தான் கேட்கலை.''
''போதும் தனம்... உன் உளறலை நிறுத்து,'' கண்டிப்புடன் சொன்னார், ரத்னவேலு.
சாயந்திரம் அங்கிருக்கும் கோவிலுக்கு சம்பந்தியுடன் கிளம்ப மகளையும் அழைத்தாள், தனம்.
''இல்லம்மா... அவர் வந்துட்டாரு, அவருக்குத் தேவையானதை நான் தான் செய்து தரணும். அத்தை, மாமாவோடு போயிட்டு வாங்க.''
மகளுடன் பேச வேண்டும், அவளுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைத்து வந்தவளுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக இருந்தது.
'துள்ளலும், சிரிப்புமாக இருந்த என் மகளா இது...' என நினைத்தபடி, ''இந்தாம்மா... நாளைக்கு வருஷப்பிறப்பு... உனக்காக பட்டுப் புடவை வாங்கிட்டு வந்தேன்,'' என்றாள், தனலெட்சுமி.
கண்கள் பளபளக்கப் பார்த்தவள், ''ரொம்ப நல்லாயிருக்கும்மா... எனக்குப் பிடிச்ச கலர்.''
மறுநாள் காலை.
சுவாமி அறையில் விளக்கேற்றி, கணவனுடன், மாமனார், மாமியார் காலில் விழுந்து கும்பிட்டாள், யாழினி. அவளைத் தொடர்ந்து, நாத்தனாரும் ஆசி வாங்க, அங்கு நிற்கும் அவர்களைப் பார்த்து, ''வாங்க சம்பந்தி, மகள், மருமகனை ஆசிர்வாதம் பண்ணுங்க,'' என்றாள், சம்பந்தியம்மா.
அப்போதுதான் மகளைக் கவனித்தாள், தனலெட்சுமி. அவள் வாங்கித் தந்த பட்டுப்புடவையை கட்டாமல், சாதாரண காட்டன் புடவையில் எளிமையாக தெரிந்த மகளை வருத்தத்துடன் பார்த்தாள், தனலெட்சுமி.
''சாயந்திரம் நாங்க கிளம்பறோம் யாழினி...'' என்ற அம்மாவைப் பார்த்த யாழினி,''வந்ததிலிருந்து பார்க்கிறேன். உன் முகமே சரியில்லை. என்கிட்டே என்னவோ கேட்கணும்ன்னு துடிக்கிற... என்னம்மா விஷயம்... தாராளமாகச் சொல்லு.''
''பழைய யாழினியை தேடி வந்தேன். அவ இப்ப என் கண்ணுக்குத் தெரியலை. சிரிச்சுப் பேசி எப்படி அரட்டையடிப்பே... அதெல்லாம் எங்கே போச்சு... வேலை, வேலைன்னு ஒண்ணு மாமியார் பின்னாடி போற, இல்லை புருஷன் பின்னாடி நிற்கிற... அம்மா உன்னைப் பார்க்க வந்த சந்தோஷம் கூட உன் முகத்தில் தெரியலை.
''நேரத்துக்கு ஒரு பட்டுப்புடவை கட்டும் நீ... நான் வாங்கிட்டு வந்த புடவையைப் பிரிச்சுக்கூட பார்க்கலை. உன்னோட சந்தோஷம், துள்ளல், மகிழ்ச்சி இதெல்லாம் எங்கே போச்சு, யாழினி. எனக்கு பயமாயிருக்கு. என் மகளோட சந்தோஷத்தைக் குழி தோண்டிப் புதைச்சுட்டோமோன்னு பயப்படறேன்.''
''என் செல்ல அம்மா... இப்படி உட்காரு,'' என்று, அவள் கைபிடித்து உட்கார வைத்தாள்.
''நம்ப வீட்டில் உன் மகளாக வாழ்ந்த அதே யாழினிதான்மா... இப்ப இந்த வீட்டு மருமகளாக வாழ்ந்துட்டு இருக்கேன். வெளியே தெரிய இருந்த என் சந்தோஷமும், துள்ளலும் இப்ப என் மனசில் குடிவந்துடுச்சும்மா.
''இப்ப நான் தனி மனுஷி இல்லம்மா. என்னோட உறவாக நீயும், அப்பாவும் ஏற்படுத்திக் கொடுத்தீங்களே, அவரோட மனைவியாக... அவருக்கு எல்லாமுமாக நானும், எனக்கு எல்லாமுமாக அவரும் வாழ்ந்துட்டுருக்கோம். நீ உன் பார்வையை மாத்திப் பாரும்மா... அப்ப என் சந்தோஷம் உனக்கு முழுசா தெரியும்.
''வருஷப் பிறப்பிற்காக நீ வாங்கி வந்த பட்டுப்புடவை எனக்கு ரொம்பவே பிடிச்சுது... இருந்தாலும் என் கணவர் எனக்கு, என் நாத்தனாருக்கு புதுப் புடவை எடுத்துத் தந்திருக்காரு. அதைக் கட்டினால்தான் எனக்கு, அவர் மனைவி, இந்த வீட்டின் மருமகள்ங்கிற நிறைவு கிடைக்கும். நீ வாங்கித் தந்த புடவை கட்டணும் அவ்வளவுதானே. இதோ போய் கட்டிட்டு வரேன். உன் மகளை ஆசை தீர ரசிச்சிட்டு போகலாம்,'' என்றபடி எழுந்து உள்ளே போனாள், யாழினி.
''தனம் இப்ப புரியுதா அவள் உன் மகள் மட்டுமில்லை. இந்த வீட்டின் மருமகள். பாலும், தேனுமாக சாப்பிட்ட உன் யாழினிதான், அதே சந்தோஷத்தோடு இந்த வீட்டில் பழைய கஞ்சியைக் கூட சாப்பிடத் தயாராக இருக்கா. அதை நீ புரிஞ்சுக்கிட்டா, உன் மகள் வாழற ராஜவாழ்க்கை உன் கண்ணுக்குத் தெரியும்,'' என்றார், ரத்னவேலு.
பட்டுப் புடவையில் முகமெல்லாம் மலர வரும் மகளை, ஆனந்தக் கண்ணீருடன் பார்த்தாள், தனலெட்சுமி.
பரிமளா ராஜேந்திரன்