மிகயீலின் இதயம் நின்றுவிட்டது.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2011
00:00

மிகயீலின் இதயம் நின்றது கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அலுப்பூட்டும் இரவொன்றில் அழுகையை மறைப்பதற்கடையில் அவனுடைய இதயம் திடீரென நின்றுவிட்டது. அவன் மறைக்க விரும்பியது அழுகையை அல்ல; தோல்வியின் வலியால் வரும் புலம்பலைத்தான். பராமரிப்புக் குறைவால் சொத்தை விழுந்த பற்களைச் சரிசெய்துகொள்ள முடியாத அவனுடைய இரண்டு சிறு குழந்தைகளும் உதடுகளிலிருந்து பொறுக்கமுடியாத சாபங்களைப் பொழியும் மனைவியும் குடியிருக்கும் அவலமான தீமையுணர்வும் தரிச்திரமும் நிரம்பிய, சுவர்களில் உப்புநீர் கசியும் வீட்டில் அவனுடைய இதயம் நின்று விட்டது. அவனுடைய இதயம் நின்றுபோன அந்தக் கணம் எனக்கு நன்றாகத் தெரியும் நோய்வாய்ப்பட்ட நுரையீரலைப் போல் முனகிக்கொண்டும் ஆழமாக மூச்சு வாங்கிக் கொண்டும் வாழும் நகரத்தின் அண்டைவாசிகள் மூலம் அடுத்த நாள் பரவிய தகவலிருந்து தெரியவந்தது இது. மிகயீலின் இதயம் நின்ற அதே கணத்தில்தான் வியர்வை ஊறிய, பிரக்ஞையற்ற உறக்கத்திலிருந்து அவனுடைய வன்மமான கண்களால் திகிலடைந்து விழித்தேன். என் இதயத்தைத் துளைத்து, அவனுடைய உள்ளங்கையில் எப்போதும் வைத்துக்கொண்டிருந்து மெருகு குன்றிப்போயிருந்த மூர்க்கமான கத்தியல்ல வன்மமம் நிரம்பிய அவனுடைய கண்களே என் இதயத்தை துளைத்தவை. எனக்கு ஏற்பட்ட இந்த ஆழமான காயத்தைப் பற்றிஎதும் தெரியாமல் மது வாடையடிக்கும் வெப்ப மூச்சுக்களை வெளியேற்றியபடி என் அருகில் படுத்துறங்கி கொண்டிருக்கும் செமிராமிஸைப் பார்த்தேன். “மிகயீலின் இதயம் நின்றுவிட்டது’ என்று முனகினேன், பிறகு அதை நானே நம்ப விரும்பாமல் அந்த விதிவசமான வாக்கியத்தைத் திரும்பச் சொன்னேன் “மிகயீலின் இதயம் நின்றுவிட்டது . போர்வை மூடாத கால்களைச் சரிந்த வயிற்றையொட்டி இழுத்து இடுக்கிக்கொண்டாள். அவளுடைய விசாலமும் வசதியானதுமான படுக்கையில் முடங்கிக்கொள்ளப் பார்த்தேன். அது வீணாயிற்று. மறுபடியும் என்னால் உறங்க முடியவில்லை. அன்று முதல் நான் உறக்கமிழந்தேன். அமைதியிழந்தேன் என்று நீங்கள் சொல்லலாம். நான் உறங்க விரும்பினேன். உறக்கத்தின் ஆழமான, இனி வெறுமையில் புரள விரும்பினேன்.


குறைந்தபட்சம் படுக்கை நேரத்திலாவது மன வேதனையை மறக்க விரும்பினேன். இருந்தும் எதுவும் நடக்கவில்லை. நான் உறக்கத்தில் ஆழ்ந்த நொடிகள் மிகக்குறைவானவை. ஆனால் மிகயீலின் உயிர்க்களை இல்லாத முகத்தையும் அதீத வேட்கையால் வேகமாக முதுமையடைந்துவிட்டது தோற்றத்தையும் பிரித்துக்ககாட்டும் மெல்லிய புலம்பல் போன்ற நீண்ட அவனுடைய பழைய மோஸ்தர் மீசையையும் மறக்க அந்தச் சில நோடிகள் போதுமானவையாக இருந்தன. பலி மிருகத்தின் நிராதரவிலிருந்து எடுக்கப்பட்டவை போன்ற அவனுடைய மனத்திலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. அவை நீண்டகாலத்துக்கு முன்பிருந்தே என்மேல் சீற்றம்கொண்டிருந்தன. குறுகிய கணங்களுக்கு மிகயீலை மறந்திருப்பதில் நான் வெற்றியடைந்திருந்தேன்.


எனினும் என்னுடன் வசிப்பதாக நான் நம்பிய அவனுடைய ஆவியிடமிருந்து என்னால் தப்ப முடியவில்லை. ஒவ்வொரு நிலைக்கண்ணாடியிலும் நான் எப்போதும் காணும் மிகயீலின் நெகிழ்வான முகத்தையே பார்த்தேன். அந்த வெளிறிய ஆவியிடம் இந்த விநோதச் சுழலில் சிக்கிக்கொண்டதும் உண்மையில் ஓர் அந்நியனாக இருந்தும் கொதிப்பான ஒரு வாழ்க்கையின் பகுதியாக மாறியதும் தான் என்னுடைய ஒரே தவறு என்று சொன்னேன். ஆனால் அதன் பிறகும் படுக்கையில் மன வேதனையுடன் புரண்டேன். “இனிமையான, தடைபடாத நிம்மதியான உறக்கம் எனக்கு வாய்க்காதா?, என்று என்னையே கேட்டுக் கொண்டேன். உடனடியாக பதிலையும் சொல்லிக்கொண்டேன் “ஏனென்றால் நான் குற்றவாளி. நான் ஒன்றைத் திருடிவிட்டேன். என்னை பொறுத்தவரை அது பயனற்ற ஒன்று. அசிங்கமானது. ஆனால் அதை நான் திருடியிருக்கிறேன்” யாருக்கும் தெரியாத ஆனால் எனது இதயத்தைச் சின்னக்கீற்றாகக் கசியச் செய்துகொண்டிருக்கும் இந்த வலியிருந்து விடுபடுவதற்காக முதலில் செமிராமிஸை விட்டு விலகினேன். வருடக்கணக்காக என்னோடு அலைந்து அமைதியான இடத்தைத் தேடிக்கொண்டு கட்டிலுக்கு அடியில் தொந்தரவில்லாத மூலையில் கிடந்த என்னுடைய பெட்டியில் எனது உடைமைகளைத் திணித்துக் கொண்டிருந்தபோது மிகயீலின் வீட்டுக்குச் சில தெருக்கள் தள்ளியிருக்கும் பாழடைந்த தெருவின் கடைகெட்ட வீடுகளிலிருந்து, வெளிறிப் பழுப்பேறிய முகமுள்ள அவனுடைய ஏழை உறவினர்கள் போய் வருவதைபெண்களின் பரட்டை தலைகள் எட்டிப் பார்த்தன. எளிய ஈமச்சடங்கின் போது இரண்டு குழந்தைகளின் கைகளைப் பிடித்து நின்று அந்த ஒடிசலான பெண் நான் இனி என்ன செய்வேன்? என்று விடாமல் சொல்லி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் உருக்கமான வார்த்தைகளில் ஆறுதல் சொன்னார்கள். “இந்தப் பாழாய்ப் போன மரணம் மிகயீலின் விதி என்றார்கள். ஜன்னல் வழியாக செமிராமிஸைக் கண்களால் தேடிக்கொண்டிருந்தார்கள். இதயத்தில் ஆழமான வலியுடன் என்னுடைய பெட்டியை நிரப்பிக்கொண்டிருந்த போது “ இங்கேயே இருந்துவிடு என்று தான் சொன்னதற்கு எந்தப்பயனும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருந்த செமிராமிஸ் அமைதியாக இருந்தாள். எனக்கு மிகயீலுக்கும் இடையிலான விசித்திர யுத்தத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதில்லை. எனினும் அவளுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. இந்த மௌனப் பகைக்கு செமிராமிஸைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டும். மிகயீலை நான் பார்த்த முதலாவது இரவில் அவள் முகத்தில் தென்பட்ட பைசாசப் புன்னகைதான் இந்தப் பரிதாபகரமான சண்டையில் என்னைச் சார்பெடுத்துக்கொள்ளத்தூண்டியதாக நீங்கள் சொல்லலாம். இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சமாதானமாகவும் இருக்கலாம். அவளுடைய சொந்த அபிப்பிராயத்தில் தனக்குச் சரியென்று பட்டதை செமிராமிஸ் செய்திருப்பதற்கான சாத்தியமாகவும் இருக்கலாம். இதில் தப்பான விஷயம் நானாகவம் இருக்கக்கூடும். கோமாளித்தனமான உடையணிந்து பழைய மோஸ்தரிலான மீசை வைத்திருந்த மிகயீலை முதன் முதலாகப் பார்த்த அந்த இரவில் வன்மத்துடன் அவனைக் கவனித்தேன். நியாயமான துக்கங்கள் இழையோடினாலும் மிகையான உற்சாகத்தைக் காட்டும் இந்த இருண்ட மனிதர்களின் உலகத்தில் நான் வசிக்க முடியாதபடி ஒரு நாள் அவன் என்னை முறித்துப் போடுவான் என்பது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அந்த நாட்கள் ஒன்றியலேயே இந்த இடத்தைவிட்டுப் போயிப்பேன். நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவனல்ல என்று நன்றாகத் தெரிந்திருந்தும் போகவில்லை. ஏனென்றால் அந்த அந்நியத் தன்மையின் பாவனையை விரும்பியிருந்தேன் அதுவே வெளியேறுவதற்குச் சரியான தருணமாக இருந்தபோதும் சோம்பலின் சுகத்தால் நகர்த்திச் செல்லப் பட்ட என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.


ஓர் இலையும் அசையாத, நகரத்தின் எல்லா ஜன்னல்களும் விரியத் திறந்துகிடந்த கோடைக்கால இரவொன்றில்தான் மிகயீலை நான் முதல் முறையாகப் பார்த்தேன் செமிராமிஸ் இந்த நம்ப முடியாத நகரத்தை மிகவும் நம்பினாள்: எனென்றால் அவளுடைய தரித்திரக் காலத்தில் இந்த மாவட்டம்தான் ஆயிரக்கணக்கான இதய வேதனைகளுடனும் அவமதிப்புகளுடனனும் வாழ்ந்துகொண்டிருந்த அவளைத் தன்னுடைய சீழ்கட்டிய மார்புகளுக்கிடையில் வரவேற்றது. அதே நகரம் இப்போது வெப்பபத்தால் முனகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இரவும் அடித்து வதைக்கப்படும் பெண்களின் உடைந்த மூக்குகளிலிருந்து பெருகிய ரத்தத்தையோ அது என்னவோ மிகச் சாதாரணமான செயல் என்பதுபோல் எந்தத்தயக்கமில்லாமல் இளைத்தவர்கள் மீது வலுவானவர்கள் காட்டும் வன்முறையில் எதிரொலியையே உணரமுடியவில்லை. வன்முறையும் தீவினையும் நிரம்பிய இரவு வாழக்கையிலிருந்து நகரம் சிறிய ஓய்வெடுத்துக்கொண்டாற் போலிருந்தது. தெரு நாய்கள் அமைதியாக இருந்தன. பகல் பொழுதில் சூடேறியிருந்த நடைபாதைக் கல் தளங்களில் தெருப் போக்கிகள் படுத்துக் கிடந்தார்கர் ஈக்கள் கூடப் பறக்கமாலிருந்தன.வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து உடல்களை நீட்டிக்கொண்டோம். அறையின் காற்றோட்டமான உணர்வைத் தந்தது நாங்கம் பீரையும் வோட்காவையும் நான் செமிராமிஸின் தாராளமான மார்பகத்தின் மேல்- அது இப்போது உண்மையிலேயே மிருதுவாகியிருந்தது - தலையை வைத்துக்கொண்டிருந்தேன். அவள் ரசனையில்லாத ஆனால் ஆடம்பரமான மோதிரங்களணிந்த விரல்களால் என்னுடைய தலைமுடியை அளைந்துகொண்டிருந்தாள். செம்ரா என்னும் தன் பெயரை ஏன் செமிராமிஸ் என்று மாற்றிக்கொண்டாள் என்ற கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே நாங்கள் எந்த வகையிலும் எப்போதும் இணையானவர்களாக இருக்க முடியாது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்படி யோசிப்பது உண்மையாகவே என்னை மகிழச் செய்தது. தனக்குச் சொந்தமில்லாத இடங்களில் தைரியமாகச் சுற்றித்திரிகிற துணிச்சலான குற்றவாளியைப் போல உணர்ந்தேன். செமிராமிஸ், அவளுடைய பழைய புகைப்படங்களில் தோன்றுவது போல - ஒரு காலத்தில் மிக அழகாக இருந்தவள்- தன்னுடைய- பக்குவமான பருவத்தைக் கடந்துவிட்ட பின்னும் தன்னம்பிக்கை கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் இசைக்கூடப் பங்காளிக்குத் தேவை என்பதால் குடிகாரியாக மாறியிருந்தாள். காமத்தையும் பெண்மையையும் கொடுத்து யாரைக் கவைசப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுக்கொண்டிருந்தாள் என்பதையும் பொறுப்பில்லாத வெறுமையில் முடிவற்றுப் புரள்வதையும் இந்த உலகில் தன் குரலைக் கேட்கச் செய்வதில் வெற்றியடைந்த தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கை பற்றியும் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். உடம்பு குலையாமல் இருக்கும் வரை மட்டுமே இரவுகளின் உலகில் பிழைக்க முடியுமென்ற நிலையிலிருக்கும் பெண்களைக் காட்டிலும் செமிராமிஸ் புத்திசாலியாக இருந்தாள். மாதாசந்தரக் கட்டணங்களைச் சரியான நேரத்தில் செலுத்தும். அழகும் உறுதியுமுள்ள வீடுகளில் வசிக்கிறவர்களுக்கு. தாங்கள் மிக ஒழுங்கானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறவர்களுக்கு இது ஒரு போதும் புரியாது. அவளுடைய வாழ்க்கையில் அநேக ஆண்கள் நுழைந்திருந்தார்கள். அவர்களில் யாரையும் அவள் காதலிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து அவளுக்குப் பயன்படக்கூடிய எதையாவது அவளால் அடைய முடிந்தது. சிலரிடமிருந்து. நல்ல அறிவுரைகள்: சிலரிடமிருந்து அவளால் எவ்வளவு வசதியாகச் செலவழிக்க முடியுமோ
அந்த அளவு பணம். சிலரிடமிருந்து அவர்களுடைய வேட்கையை நீட்டித்துக்கொள்ளச் செய்யும் தியாகத்துக்காகச் சில நகைகள்: சிலரிடமிருந்து இனிய நினைவுகள். யாருடன் வாழ்ந்தாளோ அவர்களிடமிருந்து பாடங்களையும் கற்றுக்கொண்டாள். மிக இதமானவரும் அத்துடன் கொஞ்சம் மோசமானவரும் சிடுமூஞ்சியுமான,நன்றாகப்படித்திருந்த ஒரு முதிர்ந்த மனிதரின் வைப்பாட்டியாக இருந்தாள். அப்போது அவள் புதுமலர்ச்சியுடன் இருந்தாள். அந்தக் கோலாகலம்தான் இப்போதும் அவளை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அதில் அவள் மகிழ்ச்சியும் அடைகிறாள். அந்த முதியவர் சுருக்கமாக இதை அவளிடம் சொன்னார்: “செமாராக்காரர்கள் பாடுபட்டு உருவாக்கும் அலுப்பூட்டும் வீடு களையும் மகிழ்ச்சி தெரியும் வீடுகளையும் செமிராமிஸ்கள் சிதறடிக்கிறார்கள்.


தன்னுடைய வைப்பாட்டி அவளுடைய தலைக்குள்ளே இது போன்ற வேடிக்கையான வாக்கியங்களச் செதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி அவளிடம் இந்த வாசகத்தை மனப்பாடம் செய்யச் சொன்ன ஆசாமி கிறுக்கனா அல்லது செமாராப் பிரதேசத்தின் நடத்தைக்கு மாறாக இருக்க விரும்பும் உணர்வால் செமிராமிஸ் அதை மனப்பாடம் செய்தாளா என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தே ரோமப்புரிப் பெண்மையை விருப்பத்துடனும் தேர்ந்தெடுத்திருந்த செமிராமிஸின் வாயிலிருந்து இந்த வாசகம் வெளிவந்தபோது அழைப்பு மணி பரிதாபகரமான வற்புறுத்தலுடன் நீண்ட நேரம் ஒலித்தது. எச்சரிக்கையான உணர்ச்சிகளுக்குப் பொருந்திப்போகும். செமாராக்காரர்களின் முகத்தில் அபூர்வமாகக் காணப்படும் அந்தப் பைசாசப் புன்னகை செமிராமிஸின் முகத்திலும் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அவள் ஏன் கதவைத் திறக்கவில்லை. என்ற ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது மிகயீல் தான். மணியை அடித்துப் பார்த்து விட்டுப் போய்விடுவான் என்றாள். ஒருவன் திறக்காத வாசற்கதவின் அழைப்பு மணியை மன்றாட்டத்துடன் அடித்துக் கொண்டிருந்து விட்டுப் போனான். செமிராமிஸ் சோம்பேறித்தனமாக எழுந்து வெக்கையைப் பொருட்படுத்தாமல், இன்னும் கவர்ச்சிகரமாக இருக்கும் உடலில் ஒசிந்த அசைவுகளுடன் குளியலறைக்குப் போனாள். கறுப்பு உள்ளாடை அணிந்த அந்த உடல் அவளுக்குப் பழக்கமான எல்ல ஆண்களையும் ஈர்த்திருந்தது என்பதை அற்ப மகிழ்ச்சியுடன் தெரிந்து கொண்டிருந்தாள்.


மிகயீலுக்காகக் கதவைத் திறக்காததில் அவள் பேரானந்தம் அடைந்திருப்பதை நான் யூகித்தேன். அவளுடைய காலடிகள் ஷவரை நோக்கிப் போவதைக் கேட்டேன். நீரின் ஓசை என் ஆன்மாவை ஆசுவாசப்படுத்தியது. செமிராமிஸின் கண்நேரப் பைசாசப் புண்ணகை நினைவுக்கு வந்ததும். ஒரு காலத்தில் தனக்காக விரியத்திறந்து கிடந்த. இனி ஒரு போதும் திறக்காத கதவைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிய அந்த மனிதனை, மிகயீலைப் பார்க்க விரும்பினேன். நான் எந்த வாக்குறுதியும் கொடுத்திருக்கவில்லை என்றபோதும் அந்தக் கதவு எனக்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நான் விரும்பும் காலம்வரைக்கும். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருக்கச் செய்ய என்னாள் முடியும். இருந்தும் என்னைப் பொறுத்தவரை இது எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. செமிராமிஸ் புத்திசாலி. ஆனால் சாதாரணப் பெண். என்னைச் சட்டென்று மறுத்துவிடச் சிரமப்பட வேண்டியிருக்குமென்றாலும் அழுது புலம்பியபடி என்னைப் பின்தொடரும் பழைய பசப்புக்கரியிடமிருந்து எப்போது வேணடுமானாலும் என்னால் விலக முடியும். நான் விலகிப் போகாதற்கு, செமிராமிஸ் தன்னை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்திருக்கிறாள் என்பதல்ல: ஒரு புதிய இடத்தை, இருப்பிடத்தை ஒரு வித்தியாசமான உலகத்தைத் தேடுவதில் எனக்கிருந்த அதீத சோம்பல்தான் காரணம். நான் காணாமற்போன காரணம். நான் காணமேற்போன பிள்ளைகளில் ஒருவன். தோல்வியின் நோய்க்கூறான உணர்ச்சிகளுக்கும் எதிர்காலமின்மைக்கும் என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்தேன். அகந்தை என்பது ஒருவேளை, ஆன்மாவை முற்றிலும் இழந்த பின்னர் தோன்றும் ஆழமான வெறுமையில் ஒருவன் அனுபவிக்கும் கடைசி உணர்வாக இருக்கலாம். எனினும் இறுமாப்பு நிரம்பியவனாக இருப்பதிலிருந்து என்னைத் தடுத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. மிகயீலைப் பார்ப்பதற்காக, அல்லது அதைவிட எனக்கே என்னை வீறாப்பாகக் காட்டிக்கொள்ள, ஜன்னல் அருகே போனேன். கொஞ்சம் முன்பு எதிர்ப்பார்ப்புடன் தன்னம்பிக்கையான எட்டுகள் வைத்து எந்தப் படிகளில் வழியாகக் கிட்டத்தட்ட ஏமாற்றத்துடன் தலைகவிந்து இறங்கி, வேதனையால் கனத்த இதயத்துடன் அந்தக் குறுகிய தெருவுக்குள் நுழைந்துவிட்டிருந்தான் தெருவில் போய்க்கொண்டிருக்கும் போது தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்திருந்தால் அவனால் இனிமேல் நுழையவே முடியாத இந்த வீட்டில் வேறு ஒருவன் வசிப்பதைப் பார்க்க முடிந்திருக்குமோ? அவனுடைய இடத்தை பார்த்திருப்பானோ? எனக்குத் தெரியவில்லை. தெரு விளக்கின் வெளிச்சத்தில் எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன. நான் அவனுடைய கறுத்த விழிகளைப் பார்த்தேன். முகத்தில் தெரிந்த பதற்றத்தையும் முரட்டுத் தோற்றத்தையும் மீறி அவை மிகவும் சோகமாக இருப்பதாக எனக்கு தோன்றியது. அதிக எடையில்லாதத் கறுப்பு ஜாக்கெட்டை அணிந்திருந்தான் . வெள்ளைச் சட்டையின் காலரை மேலே இழுத்துவிட்டிருந்தான். சில விநாடிகள் என்னை அவன் உற்று பார்த்தான். மீசையை வருடினான். அவசரமாக எட்டுவைத்து நடந்து, வசால் முன்னால் நிறுத்தியிருந்த அவனுடைய அன்டோல் எஸ்டேட் காருக்குள் ஏறினான்.


காரின் மேற்கூரைவரை சமையலறைப் பாத்திரங்கள் அடுக்கியிருந்தை அப்போது நான் கவனிக்கவில்லை. என்னை ப் பார்க்காதது போல நடிக்க விரும்பினான் என்பது வெளிப்படையாக தெரிந்தது. பகைமையும், பற்றும் கலந்த உணர்ச்சி கூட இல்லாமல் வாழ்க்கையின் போக்குக்கு என்னை ஒப்புவித்து விட்ட விநோத போதையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய பழைய மூர்க்கமான மனநிலையையும் கடந்திருந்தேன். அலுப்படைந்து. ஜன்னல் அருகில் நின்று வெளிச்சத்தை வடிகட்டிக் காட்டும் அண்டை வீட்டு ஜன்னல் நிழல்களை வேவு பார்ததுக் கொண்டிருக்கும் கிழவன் ஒருவனிடமிருந்து எந்த வகையிலும் எங்களுடைய இரண்டாம் சந்திப்பில் மிகயீல் என்னை எதிரியாகவே பார்த்தான் என்பதைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. அவனுடைய நடத்தையில் ஒரு பரிதாபகரமான அவசரம் இருந்தது. நகைப்புரிக்குரிய வகையில் அவன் மறைக்க விரும்பிய வன்மமும் இருந்தது. அவன் தட்டிய கதவு திறக்கப்படவில்லை என்பதை முழுத்தெருவும் தெரிந்துகொண்டிருந்தில் அவன் அவமானமடைந்தான். என்னை பார்க்காமலிருப்பதாகப் பாவனை செய்தன் மூலம் அவனுக்கே உரிய வழியில் பெருந்தன்மையாக நடித்தான். அதன் மூலம் செமிராமிஸுக்கும் எனக்கும் இன்னொரு வாய்ப்பைக் கொடுத்தான்.


இந்தக் காரணத்தாலேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெருவைவிட்டு போய்விட விரும்பினான். எங்களுக்கு கிடையிலான குறுகிய நேருக்குநேர் சந்திப்பை உடனே மறக்கவும் மறக்க செய்யவும். விரும்பிக் காருக்குள் ஏறினான். சாவியைப் போட்டுத் திருப்பினான். ஆனால் நாள் முழுவதும் தெருக்களில் அலைந்து களைத்துப் போயிருந்த அந்த அனடோல் கிளம்பவில்லை. அவனுடைய உள்ளங்கைகள் வியர்த்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். மறுபடியும் சாவியைப் போட்டுத் திருப்பிக்கொண்டிருந்தும் கார் காயமடைந்த பறவையைப் போலக் கீச்சிட்டதே தவிர கிளம்ப மறுத்தது. அது அவனை மிகவும் எரிச்சல் அடையச் செய்தது. காரைக் கிளப்ப முடியாமல் அவர் கட்டாயமாக இறங்க வேண்டி வந்தது. வியர்வை சொட்ட ஒரு கையால் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து அனடோலைத் தள்ளத் தொடங்கினான். சுமை நிரம்பியிருந்தால் அதனால் நகர முடியவில்லை. அந்த உற்சாகமற்ற அன்டோல் நிறுத்தப்பட்டிருந்த வாசலிலேயே இருக்க மகிச்சிடைந்தது போலவும் நிரந்தர அமைதியில் இளைப்பாற விரும்பியது போலவும் தோன்றியது. அதன் விளைவாகவே சரிவில் சறுக்கி நகரவும் தொடங்கியது. மிகயீல் வேடிக்கையான எட்டுகளுடன் ஓடி காருக்குள் ஏறினான். அனடோல் உடனே மறைந்துவிடப்போவது போல் புறப்படும் நோக்கத்துடன் கொஞ்சம் முனகியது. அதன் விளைவாகவே புறப்பட்டது. அந்தப்பழைய எந்திரத்தின் இடி முழக்கம் தெருவில் எதிரோலித்துப் படிப்படியாக கேட்காமல் போயிற்று தெரு சற்று முன்பு நிலவிய வலிமையான அமைதிக்குத் திரும்பியது. நான் உள்ளே போனேன் மிகயீலின் நிலைமையை ஞாபகப்படுத்திச் சிரித்துக்கொண்டு செமிராமிஸின் விசாலமான படுக்கையில் மல்லாந்து படுத்தேன். உறங்கிப்போனேன். இப்போது அதைப்பற்றி யோசிக்கும்போது, தன்னுடைய ஒட்டை அனடோலைக் கிளப்பி , கிளப்பி, பிரதான சாலையில் போகும்போது மகியீல் காரை நிறுத்தி வினைல் உறை போட்ட ஸ்டியரிங் வளையத்தின் மேல் தலையைக் கவித்துக்கொண்டு கோபத்துடன் அழுதிருக்கலாம் என்று நினைத்தேன்.


தமிழில்: சுகுமாரன்
ஆங்கிலத்தில் ஸ்டெபானி அடெஸ்


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X