அன்புள்ள அம்மா -
இல்லத்தரசி, வயது: 40, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளேன். 'பாலசேவிகா கோர்ஸ்' முடித்திருக்கிறேன். என் பெற்றோருக்கு இரு மகள்கள். நான் மூத்தவள். நானும், அம்மாவும் நெருங்கிய தோழிகள் போல பழகுவோம்.
என்ன விரும்பி கேட்டாலும் எனக்கு சமைத்து தருவாள், அம்மா. எனக்கான ஜாக்கெட்களை அம்மாவே, 'எம்ப்ராய்டரி' போட்டு தைத்துக் கொடுப்பாள். தினமும், மல்லிகைப் பூக்களை சரமாக கட்டி, என் தலையில் சூடி மகிழ்வாள். மொத்தத்தில், என்னை ஒரு இளவரசி மாதிரி வைத்திருந்தாள், அம்மா.
எனக்கு, 20 வயதில் திருமணமானது.
அரசு கருவூல ஊழியராக உள்ளார், கணவர். சிரிக்க காசு கேட்பார்; சதா யோசனையில்
இருப்பார்.
எங்களுக்கு, 18 மற்றும் 12 வயதில் இரு மகள்கள் இருக்கின்றனர்.
என் கணவர், ஒரு சுயநலவாதி. அரைக்கிலோ மட்டன் வாங்கி குழம்பு வைத்தால், ஒரு சிறு துண்டு கூட மீதம் வைக்காமல் அவ்வளவு கறியையும் அவரே சாப்பிட்டு விடுவார்.
காலுக்கு ஒரு தலையணை, பக்கவாட்டில் மற்றும் தலைக்கு இரு தலையணை வைத்து படுக்கை முழுவதையும் அவரே ஆக்கிரமித்து துாங்குவார். நானும், மகள்களும் தரையில்தான் படுத்து துாங்குவோம்.
வீட்டு பீரோ சாவியை அவரே வைத்திருப்பார். அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது, இன்று வரை எனக்கு தெரியாது. பணம், ஏ.டி.எம்., கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் எல்லாவற்றையும் ரகசியமாக கையாள்வார். வீட்டு செலவுக்கு பணத்தை கிள்ளி கொடுப்பார். கொடுத்த பணத்திற்கான கணக்கை இரவு கேட்பார்.
கணக்கை நான் சொல்லும்போது ஆயிரம் குறுக்கு கேள்விகள். தினம் துாங்கப் போவதற்கு முன், கணக்கு நோட்டில் வரவு - செலவு எழுதி, பீரோவில் வைத்து பூட்டுவார். ஆண்டிற்கு இரண்டு செட் ஆடைகள், அதுவும் அவர் ரசனைக்கு தான் எடுத்து தருவார்.
சினிமாவுக்கு கூட்டி செல்ல மாட்டார். 'டிவி'க்கு சன் டி.டி.ஹெச்.,
108 ரூபாய், 'பேக்' தான் போடுவார். 'டிவி' பார்க்க தினம் ஒருமணி நேரம் தான் அனுமதி. எனக்கு, 'நோக்கியா' பட்டன் போன் வாங்கி கொடுத்துள்ளார். அவரது கட்டளைகளை நிறைவேற்றதான் போன். அவரை
கேட்காமல், 'அவுட் கோயிங்' அழைப்புகள் கூடவே கூடாது.
அம்மாவிடம் வாரத்துக்கு ஒருமுறை,
10 நிமிஷம் பேச அனுமதிப்பார். ஆண்டிற்கு ஒரு முறை அம்மா வீட்டுக்கு போய் வரலாம். என் அம்மா வீட்டுக்கு வரமாட்டார். அபூர்வமாக வந்தாலும், அந்த வீட்டில் சாப்பிடாமல், ஹோட்டலில் தான் சாப்பிடுவார்.
மூத்த மகளை, பி.ஏ., வரலாறு பாடத்தில் தான் சேர்த்துள்ளார். மெடிமிக்ஸ் சோப்பை வாங்கி, நாலாய் வெட்டி தனக்கு ஒரு துண்டும், மீதி மூன்றை எங்களுக்கும் பகிர்ந்தளிப்பார். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் அவரிடம் முன் அனுமதி பெற்று தான் வரவேண்டும். ஒருவேளை உணவு தான் தர முடியும் என, கறாராக கூறி விடுவார்.
நண்பர்கள், உறவினர்களிடம் யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக் கூடாது என, பட்டியல் போட்டு தந்து விட்டார். மீறினால் நெருப்பு வார்த்தைகளால் அர்ச்சனை விழும்.
ஒரு சுயநல, கஞ்ச கட்டுப்பெட்டி பேயிடம் சிக்கியுள்ளேன். திருமணத்திற்கு முன் இளவரசியாக வலம் வந்த நான், தற்போது, ஆயுள் தண்டனை சிறைவாசி ஆகிவிட்டேன். மகள்களுடன் எங்காவது ஓடி விடலாமா என, மனம் யோசிக்கிறது.
கணவனுக்கு சோற்றில் விஷம் வைத்து கொன்று விடலாமா... அவன் இறந்து விட்டால், எனக்கோ, என் மகளுக்கோ கருணை அடிப்படையிலான அரசு வேலை தருமே என சிந்திக்கிறேன். மாட்டிக் கொள்ளாமல் கணவனை தீர்த்துகட்ட தொடர்ந்து திட்டம் போட்டு வருகிறேன்.
மகள்கள் பயந்து பயந்து வாழ்கின்றனர். மாற்று யோசனைகள் எதுவும் இருந்தால் தயங்காமல் கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,-
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
நீ, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு கூட படிக்காத இல்லத்தரசி. உன்னிடம் பொருளாதார பாதுகாப்பு இல்லை. பொருளாதார சுதந்திரம் இல்லாத நீயும், உன் மகள்களும் வீட்டை விட்டு போவது உகந்த செயல் அல்ல. பாலியல் சீண்டல்களால் சின்னாபின்னபட்டு போவீர்கள்.
உங்களை ஆதரிக்கும் நிலையில் உன் அம்மா இருந்தால், நீங்கள் மூவரும் அங்கு செல்லலாம். அம்மா வீட்டுக்கு போவதற்கு முன், அம்மாவின் உள்ளக்கிடக்கை அறிந்து செயல்படுவது நல்லது.
நீயும், மகள்களும் கணவனை விட்டு வெளியேறுவது அவனுக்கு எந்தவிதத்திலும் பாதிக்காது. அவன் தொடர்ந்து தன் போக்கிலேயே செயல்படுவான். எந்த பெண்ணையாவது சேர்த்து கொண்டு தொடர்ந்து வாழ்வான்.
கணவனை கொன்றுவிட்டு காலம் பூராவும் குற்ற உணர்ச்சியில் தத்தளிக்காதே. போலீசில் சிக்கி தண்டனை பெறுவாய். உன் மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ஆகவே, கொலைகாரியாகும் எண்ணத்தை தலை முழுகு. கணவனுக்கு எதிராக கலகக்காரி ஆகு. வீட்டுக்குள் இருந்துகொண்டே அஹிம்சா முறை போராட்டம் ஆரம்பி.
அரைக்கிலோ கறி வாங்கி குழம்பு வைத்தால், உங்களுக்குரிய பங்கை உரிமையாய் சாப்பிடுங்கள்; தரையில் படுக்காதீர்கள். படுக்கையில் கால் பங்கை கணவனுக்கு ஒதுக்கி, மீதியில் நீங்கள் படுங்கள். சம்பளத்தை முழுவதும் உன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்து.
பீரோ மாற்று சாவியை வலுக்கட்டாயமாக வாங்கு. வங்கி கணக்கு, இன்ஷூரன்ஸ், பி.எப்., கையிருப்பு, எல்லாவற்றையும் பற்றி கேள். மாதம் ஒரு முறை அம்மா வீட்டுக்கு போ. விரும்பியபோது அம்மாவை வீட்டுக்கு வரவழை.
மகளை பி.ஏ., வரலாற்று பாட பிரிவிலிருந்து, விலக்கி, விரும்பிய கோர்சில் சேர். உன் மகள் ரசனைக்கு ஆடைகள் வாங்கு.
ஓடினால் நாய்கள் துரத்தி குரைக்கும்; திரும்பி நின்று முறைத்தால், பயந்து பின்வாங்கும். பட்டன் போனை துாக்கி போட்டுவிட்டு, 'ஸ்மார்ட் போன்' வாங்கி, அம்மாவிடம் தினம் தினம் அளவளாவு.
சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்து. மவுனவிரதம் அனுஷ்டி, உண்ணாவிரத போராட்டம் நடத்து. அடங்க மறு, அத்து மீறு, சாத்வீகமாய் திருப்பி அடி.
வில்லத்தனங்களையெல்லாம் கைவிட்டு பொட்டி பாம்பாய் அடங்கி விடுவான், கணவன். சுயநலம், கஞ்சதனம் மற்றும் கட்டுப்பெட்டிதனம் இல்லாத வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதை, கணவனுக்கு ருசி காட்டு; வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்