'கேள்வி ஒன்றிருந்தால் பதிலும் உண்டு' எனும் நம்பிக்கையில் தன் ஓட்டத்தை துவக்கியவர் 36 வயது கஸ்துாரி பிரியதர்ஷினி. 'திருமண உறவில் பதில் கிடைத்துவிடும்' எனும் அவரது நம்பிக்கை பொய்க்க மறுபடியும் ஓட்டம்; துணையாய் நிற்கிறார் மகள்.
உங்கள் கேள்வி என்ன கஸ்துாரி?
'அடுத்த வினாடி என்ன நடக்கும்ங்கிற பயம் இல்லாம இந்த வாழ்க்கையை நிதானமா ரசிச்சு நம்மால வாழ முடியுமா?'
கஸ்துாரியின் இந்த பயத்திற்கு காரணம் அவரது பார்வை குறைபாடு; 'ரெடினிடிஸ் பிக்மென்டோசா' எனும் விழித்திறன் பிரச்னை; 2014ம் ஆண்டில் 90 சதவீத பார்வை திறனை இழந்திருக்கிறார்; அம்மா, அப்பா, மகள், மகனோடு வசிப்பது திருவள்ளூர், கரையான்சாவடியில்!
'கல்லுாரி வாழ்க்கை, விடுதியில கழிஞ்சது; அந்த ஐந்து ஆண்டுகள்ல ஒருநாளும் நான் இரவு உணவு சாப்பிட்டதில்லை; இருள் என் குறையை வெளிச்சம் போட்டு காட்டிரும்னு உணவுக்கூடத்துக்கே போக மாட்டேன். மிகக்குறைந்த பார்வையில ஓவியம் வரையுறது, வாசிக்கிறதுன்னு இருந்ததால மத்தவங்களுக்கு சந்தேகம் வரலை. இப்போ, அந்த பார்வையும் இல்லை!' வருந்தும் தாயின் தோள் தொட்டு, 'அதான் நான் இருக்கேன்லம்மா' ஆறுதல் தருகிறார் 13 வயது அபிராமி.
விழியாக மகள் - வரம் இல்லையா?
வங்கி பணிக்குப் போற நான் என்ன உடை உடுத்தணும், என்ன சாப்பாடு கொண்டு போகணும்னு எல்லாம் அபிராமிதான் பார்த்துக்குறா! 'பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டேன்மா'ன்னு சொன்னா ஆறுதல் சொல்றா; 'கவனமா போயிட்டு வாம்மா'ன்னு அடுத்தநாள் தைரியமா வழி அனுப்புறா! 'இவ்வளவு வலிகளை தாங்கிட்டு அவளே தைரியமா இருக்குறப்போ நமக்கென்ன'ன்னு யோசிக்க வைக்கிறா!
அபிராமிக்கு என்ன பிரச்னை?
ஒன்றரை வயசுல அவளுக்கு புற்றுநோய். என் கணவர் விலகிட்டார். அம்மா - அப்பா உதவியோட அவளை 6 வயசுல முழுமையா மீட்டெடுத்தேன். இன்னைக்கு, பரதநாட்டியத்துல தனி நபரா 4, குழுவா 2, ஹூலா ஹூப்ல ஒன்றுன்னு மொத்தம் ஏழு உலக சாதனைகளுக்கு அவ சொந்தக்காரி! அவளோட வலியை ஒப்பிடுறப்போ என் வலி ஒண்ணுமில்லை!
'என்னைப்பத்தி சொல்லவே இல்லையேம்மா' - 8 வயது மகன் முத்து பழனியப்பன் கோபித்துக் கொள்ள, 'ஹூலா ஹூப்ல இவனும் சாதனை பண்ணியிருக்கான்' மகனின் தலை வருடி சிரிக்கிறார் கஸ்துாரி.
'பாதுகாப்பா கூட்டுக்குள்ளேயே வாழ்ந்ததால இந்த உலகத்தை எதிர்கொள்ள நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த சிரமத்தை என் மகளும் மகனும் அனுபவிக்கக் கூடாதுங்கிறதுல விடாப்பிடியா இருக்குறேன். முக்கியமா, எங்களை 'வேண்டாம்'னு சொன்னவங்க ஆச்சரியப்படுற அளவுக்கு வாழணும்; என் மக துணையோட நிச்சயம் சாதிச்சு காட்டுவேன்!' - அம்மாவின் உறுதியை புன்னகையால் பங்கிட்டுக் கொள்கிறாள் அபிராமி.