இதுதான் காதலென்பதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2022
08:00

''அப்பா...'' அழைத்தது, மகன் இல்லை; மகனின் தாய்.
எப்போதாவது மனைவியிடமிருந்து இப்படி அழைப்பு வரும், அன்பின் நெருக்கத்தில் கூட வந்ததில்லை. பரிதவிப்பில் வந்திருக்கிறது. 'என்ன செய்வது...' என்ற குழப்பத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது.
''சொல்லு லலிதா.''
''காபி சாப்பிடுறீங்களா?''
''சாப்பிடலாமே... நானே கலந்து எடுத்துட்டு வரேன்.''
வீட்டில், பிள்ளை இல்லாத நேரம். பேச அழைக்கிறாள் என்றால், பிரச்னையின் மையப்புள்ளி, அவனாக இருக்கலாம் என்று, மனம் கணக்குப் போட்டது.
கோவில் கோவிலாக போய் எத்தனையோ விரதங்கள் இருந்து, திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவன். ஒற்றைப் பிள்ளையாய் நின்றவன், லலிதாவின் முழு அன்புக்கும் பாத்திரமானவன். இன்ஜினியரிங் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.
காபி கலந்து, கண்கலங்க பால்கனியில் அமர்ந்திருந்தவளிடம் கொடுத்து, பரிவாக தலையை கோதி விட்டேன்.
''என்ன குழப்பம். சொன்னாதானே புரியும்?''
''ராகவ்வ நினைச்சா, ரொம்ப கவலையா இருக்குங்க.''
''விபரமா சொல்லும்மா,'' என்றபடி, நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.
''என்னமோ காதல்னு பேசிக்கிறாங்க. வயசுக் கோளாறு சரியாயிடும்ன்னு நெனைச்சேன். அப்பவே உங்ககிட்ட வந்திருக்கணும்.''
''இப்ப என்ன ஆச்சு? ராகவ்கிட்ட பேசுவோம்.''
''இல்லைங்க... இவன் போய், தன் காதலை சொன்னதுக்கு, அந்த பெண், 'பிடிக்கலே'ன்னு சொல்லிடுச்சாம். இவனும் விடாம அந்த பொண்ணோட தோழி மூலமா தொந்தரவு செஞ்சிருக்கான். அது ரொம்ப பெரிய இடத்து பொண்ணு போல.
''வகுப்புல, எல்லார் முன்னாடியும் கோபமா பேசி, கன்னத்துல அறைஞ்சுட்டாளாம். அதனால, ரொம்ப எரிச்சல்ல இருக்கான், ராகவ். ஏதாவது கேட்டா கோபமா பேசறான். போன வாரம் பூரா, காலேஜ் போகவே இல்லை. எப்ப பார்த்தாலும் மொட்டை மாடியில் உட்கார்ந்துருக்கான்.
''அவனோட நண்பர்களிடம் பேசினேன். 'அந்த பொண்ணு மேல ரொம்ப கோபத்துல இருக்கான். தற்கொலை பண்ணிக்குவானோ அல்லது அந்த பொண்ணை ஏதாவது பண்ணிடுவானோன்னு தோணுது'ன்னு சொல்றாங்க.''
மேலே பேச முடியாமல் தொண்டை கமறியது.
''ஏதாவதுன்னா?''
''அந்த பொண்ணு, இவனை பிடிக்கலைன்னு சொன்னதுல வந்த கோபம், அறைஞ்சதும், கொழுந்து விட்டு எரிஞ்சுட்டிருக்கு. ஐயனார் கடையில, 'ஆசிட் பாட்டில் இருக்கா'ன்னு கேட்டிருக்கான். நான் கேட்டேன்னு நெனைச்சு, கடைப் பையன்கிட்ட குடுத்து விட்டுருக்கார். எனக்கு பயமா இருக்குங்க.''
எனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்திருக்கிறது. பிள்ளை பாசம், லலிதாவின் கண்களை கட்டியிருக்கிறது. பெண்களை வளர்க்கும் போது, கவனமாக இருக்கும் பெற்றோர், பிள்ளை விஷயத்தில், கவலைப்படுவது இல்லை. ஒரு பெண்ணை மதிக்கவும், சரியான முறையில் அணுகவும், பிரிய நேரிட்டால் பக்குவமாக விலகவும் சொல்லித் தருவதில்லை.
செல்லமா வளர்த்து, கேட்டதையெல்லாம் வாங்கிக் குவித்து, தோல்வி என்று வரும்போது, எதிர்கொள்ள தெரியாமல், தற்கொலை என்று ஓடும் பிள்ளைகளை யார் நெறிப்படுத்துவது?
இப்போது எதையும் ஆராய்ந்து, குத்திக் காண்பிக்க முடியாது. எரியும் நெருப்பை அணைக்க வேண்டும். லலிதா சொன்னதை உள் வாங்கிக் கொண்டேன். இந்த வயதில், காதல் பெரிய விஷயமில்லை. நானும், அந்த வயதை கடந்துதானே வந்திருக்கிறேன்.
யதார்த்தம் புரியாத ஆசை. அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லையெனில் விலகிப் போகாமல், ஆத்திரம், கொலை செய்யும் அளவு எரிச்சல், தற்கொலைக்கு முயற்சிக்கும் கோழைத்தனம். இதை எப்படி சரி செய்வது?
பொதுவாகவே, ராகவ் அதிகம் என்னுடன் பேச மாட்டான். எதுவென்றாலும் அவன் அம்மா மூலமாக தான் துாது நடக்கும்.
''லலிதா, பைக் வேணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான், ராகவ். இந்த சனிக்கிழமை, மாடல் பார்த்து முடிவு செய்யணும்ன்னு சொல்லிடு. அந்த பெண் விஷயமா, என்கிட்ட சொன்னதை ராகவ்கிட்ட சொல்லாத...''
''ஏன், இங்க வீட்லயே வச்சு பேசலாமே.''
''என்கிட்ட பிரச்னைய சொல்லிட்ட. இனிமே நான், 'டீல்' பண்றேன்.''
சனிக்கிழமை மிகவும் குஷியாக அப்பாவுடன் காரில் கிளம்பினான், ராகவ்.
''இன்னிக்கு மாடல் பார்த்து, முடிவு பண்ணிடலாம். அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து, 'டெலிவரி' எடுத்துக்கலாம்.''
''ஓ.கே., டாடி.''
''என் நண்பரோட பையன் முகப்பேர், 'ஷோரூம்'ல இருக்கான். அங்க போயிடலாமா... ஆனா, போற வழியில ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு போகலாம்.''
''சரி டாடி.''
''காலேஜ் படிப்பெல்லாம் எப்படி போகுது கண்ணா?''
''நல்லா போயிட்டு இருக்கு.''
''அடுத்த மாசம் பரிட்சை வருதுபோல...''
''ம்...''
கையில், மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டான். உன் கேள்விகளின் எல்லை இதுதான் என்று சொல்லாமல் சொல்லி விட்டான். மவுனமாக வண்டியை ஓட்டினேன்.
நான் வழக்கமாக வாங்கும் மருந்து கடை வந்தது.
''ராகவ், 'மெடிக்கல் ஷாப்' போயிட்டு வரேன். நீ கார்லயே இரு.''
முன்பே தொலைபேசியில் சொல்லியிருந்தேன். தேவையான மருந்துகளை தயாராக வைத்திருந்தனர். சரி பார்த்து, பணத்தை கொடுத்து கிளம்பினேன்.
''எதுக்கு டாடி, இத்தனை மருந்து?''
''எனக்கில்லை கண்ணா, என் நண்பருக்கு வாங்கிப் போறேன். அவர் வீட்டுல குடுத்துட்டு போகணும். சின்ன வேலை இருக்குன்னு சொன்னேனே, இந்த வேலை தான் அது.''
பத்து நிமிடங்களில் நண்பர் ராமன் வீட்டை அடைந்தேன். என்னுடன் காரை விட்டு இறங்கினான், ராகவ்.
அழைப்பு மணி அடித்ததும், கதவை திறந்தாள், ராமன் மனைவி உஷா.
பராமரிக்கப்படாமல் இருந்தது, வீடு.
''மருந்து வாங்கிட்டு வந்தேன். ராமன் துாங்கறாரா?''
''இல்லைண்ணா, முழிச்சுட்டு தான் இருக்கார்.''
ராமனின் அறை கதவு திறந்தே இருந்தது. அவரை அழைத்தவாறே உள்ளே நுழைந்தேன்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென திரும்பினார். என் பின்னால் இருந்த ராகவை பார்த்ததும், பதட்டம், பரபரப்பு.
''வந்துட்டியா... அசோக், வாடா கண்ணுக்குட்டி, என் செல்லமே. உஷா, அசோக் வந்துட்டான் பாரு. பூரி பண்ணி வச்சுட்டியா?''
வேட்டி தடுக்க, எழுந்தார். முன்னால் நின்று கொண்டிருந்த என்னை தள்ளி விட்டு, ராகவை கட்டி முத்தமிட்டார். செய்வதறியாமல் திகைத்தான், ராகவ்.
பல நாட்களாக, 'ஷேவ்' பண்ணாத தாடியும், சுத்தம் செய்யாத உடையும், உடம்பும் சொல்லாத பல செய்திகளை சொன்னது.
ஓடி வந்தாள், உஷா.
''விடுங்க. இது, அசோக் இல்லை.''
இருவரையும் வலுக்கட்டாயமாக பிரித்து விட்டாள்.
''நீங்க ஹால்ல போய் உட்காருங்கண்ணா. இவரை படுக்க வச்சுட்டு வரேன். சாரி தம்பி, தண்ணி வேணும்ன்னா, 'பிரிஜ்'ல இருக்கு எடுத்துக்கப்பா.''
கணவனை இழுத்துச் சென்றாள். அதட்டினாள், அழுதவரை ஆறுதல்படுத்தினாள். மருந்துகள் கொடுத்து, சமாதானப்படுத்தி படுக்க வைத்தாள்.
வாங்கி வந்த மருந்துகளை தந்து, ஆறுதல் சொல்லிக் கிளம்பினேன்.
''யாருப்பா அசோக்... அங்கிளை பார்த்தா, மனநிலை சரியில்லாதவர் போல் தோணுது. என்னாச்சு அவருக்கு?'' அடுக்கடுக்கான கேள்விகள், ராகவிடமிருந்து வந்தன.
''ராமன் சாரோட பையன், அசோக்.''
''என்னாச்சு அவர் பையனுக்கு... இறந்துட்டாரா?''
''இல்ல, உயிரோட தான் இருக்கான்.''
''பின்ன, அங்கிள் ஏன் இப்படி இருக்கார்?''
''கார்ல உட்கார்ந்து பேச முடியல, கழுத்து வலிக்குது. அங்க பூங்கால, காத்தாட உட்காரலாமா?''
காரை ஓரமாக நிறுத்தி, இறங்கி நடக்க ஆரம்பித்தனர்; காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது.
''ராமன், உஷா, இரண்டு பேரும் எங்க கம்பெனியில தான் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஒரே பையன் அசோக். ரொம்ப செல்லமா வளர்த்தாங்க. காலேஜ்ல படிக்கும்போது, ஒரு பொண்ணை காதலிச்சிருக்கான், அசோக். அந்த பொண்ணு ரொம்ப நல்லா படிக்குமாம். மேலே படிச்சு முன்னேறணும்கிற எண்ணத்துல இருந்திருக்கு.
''அவனிடம், 'என் பின்னால சுத்தாத, எனக்கு ஆர்வம் இல்லை'ன்னு கண்டிச்சிருக்கு. இவன் புரிஞ்சுக்காம தொந்தரவு பண்ணியிருக்கான். செருப்ப எடுத்து காமிச்சிருக்கா. இவனுக்கு கோபம் வந்திருக்கு. 'என்னுடன் வாழலைன்னா யார் கூடவும் வாழக் கூடாது'ன்னு சொல்லி கத்தியை எடுத்திருக்கான்.
''பதட்டத்துல, அந்த பொண்ணு நகர்ந்து, கீழ விழுந்ததுல, தலையில அடிபட்டு செத்துடுச்சு. அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரும் இந்த கொலைக்கு சாட்சி.''
''அசோக் இப்ப எங்க?''
''ஜெயில்ல இருக்கான். 10 வருஷ தண்டனை. எவ்வளவோ பணம் செலவழிச்சு பார்த்தார், ராமன். அத்தனை சேமிப்பும் கரைஞ்சது தான் மிச்சம். இவங்க இரண்டு பேருக்கும் வேலை போயிடுச்சு. அக்கம் பக்கம் இருக்கிறவங்க, உறவுக்காரங்க எல்லாரும் ஒதிக்கிட்டாங்க.
''அசோக், ஜெயிலுக்கு போன அதிர்ச்சியில ராமன் இப்படி ஆயிட்டாரு. அசோக் வயசு பசங்களை பார்த்தா, உணர்ச்சிவசப்படுவார். நண்பர்கள் எல்லாம், சேர்ந்து உதவறோம். மருந்து, சாப்பாடு செலவுன்னு குடுக்கறோம். உஷாவை அழைச்சுட்டு ஜெயிலுக்கு போயிட்டு வருவோம்.
''ஒரு அன்பான தாயும், தந்தையும் இழந்துகிட்டு இருக்கிற வாழ்க்கையை, யாராலும் மீட்டுத் தர முடியாது. தன் அவசர புத்தியால் அப்பாவை பைத்தியமாவும், அம்மாவை நடை பிணமாவும் ஆக்கிட்டான்.''
அதிர்ச்சியில் உறைந்திருந்தான், ராகவ்.
''இதுக்கு பேரு காதலா? ஒரு பெண்ண காதலிக்கிறதுக்கு முன்ன, இது சரி வருமான்னு யோசிக்கணும். பெண்ணுக்கு பிடிக்கணும்; கட்டாயப்படுத்தக் கூடாது. காதலிக்கு பிடிக்கலைன்னா, ஏன் பிடிக்கலைன்னு யோசி. அவளுக்கு பிடிச்சா மாதிரி மாறு.
''அப்படியில்ல, 'நீ இல்லாம என்னால வாழ முடியும்'ன்னு விலகு. அவ முன்னாடி வாழ்ந்து காட்டு. உன் வேகத்தை படிப்பில் காண்பி. வாழ்க்கையில் மேல வர வழிய பாரு. உன்னை நம்பி கற்பனைகளோட இருக்கற அம்மா, அப்பாவை நினைச்சு பாரு... பொண்ணுக்கு பிடிக்கலைன்னா விலகணும். கொல்றதுக்கு உரிமை யார் குடுத்தாங்க?
''செத்துப் போன பெண் வீட்டுக்கும் போயிருந்தோம். காலைல காலேஜுக்கு போன பொண்ணு, பிணமா திரும்பி வந்தா, பெத்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அந்த பொண்ணை பத்தி அவங்களுக்கு எத்தனை கனவுகள் இருந்திருக்கும். அத்தனையும் உடைஞ்சு போக, அவங்க என்ன தப்பு செஞ்சாங்க.
''அந்த பொண்ணு செத்த அன்னைக்கு காலைல போட்டிருந்த நைட்டிய கூட துவைக்காம, காலண்டர்ல தேதிய கிழிக்காம, அறையை மாத்தாம அப்படியே வச்சிருந்தாங்க. அவங்க வீடும் அன்னிக்கு விழுந்தது தான்.
''அசோக்குக்கு மட்டும் வானவில் வாழ்க்கையா காத்திருக்க போகுது. ஜெயில் வாழ்க்கை என்ன சுகமான பஞ்சு மெத்தையா. தண்டனை முடிஞ்சு வெளிய வரும்போது, அவன் சாதிக்கப் போறது என்ன...
''இழந்த, 10 வருஷ வாழ்க்கை, சமூகத்தின் நிராகரிப்பு, பொலிவிழந்த தாய் - தந்தை, கரைஞ்சு போன பணம், கொலைகாரன்கிற பட்டம். காதலிச்ச பெண்ணை கொல்ல போறதுக்கு முன்ன இதையெல்லாம் யோசிச்சிருந்தா, இப்படி அவசர முடிவு எடுத்திருப்பானா... இப்ப இரண்டு குடும்பத்தையும் அழிச்சுட்டானே,'' என்றேன்.
'படிக்க வேண்டிய வயதில் கவனச் சிதறல் தரும் காதல் இருக்கிறதா... அந்த பெண் வேண்டாம் என்று மறுத்ததில் ஆத்திரம் கொண்டாயா... அந்த பெண்ணை ஏதாவது செய்ய நினைக்கிறாயா?'
இதெல்லாம் தகப்பன் கேட்கவுமில்லை; மகன் பதில் சொல்லவுமில்லை. இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்ற தந்தையின் ஆதங்கத்தை, தனயன் புரிந்து கொண்டான். தந்தையின் கைகளை கெட்டியாக பிடித்தான்.

ர. கிருஷ்ணவேணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
mahalingam - கூடுவாஞ்சேரி 603202,இந்தியா
27-மார்ச்-202212:08:15 IST Report Abuse
mahalingam நல்ல பையன். அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்து திருந்திவிட்டான். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X