வணக்கம்,
நான் ரா.சத்யா. வேலுார் மாவட்டம், பென்னாத்துார் பக்கத்துல இருக்குற கணேசபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியோட இளைய மகள்.
* ஆண் கடல் - பெண் கடல்; சத்யாவுக்கு எது இஷ்டம்?
இதுவரைக்கும் நேர்ல கடல் பார்த்ததில்லையே!
* 'ஷாப்பிங்' அனுபவம் உண்டா?
ப்ப்ச்ச்ச்... ஆனா, வாழ்க்கையில ஒருதடவையாவது 'மால்' பார்க்கணும்னு ஆசை!
* எத்தனை ஜோடி தங்க கம்மல் வைச்சிருக்கீங்க?
ரெண்டு; ரெண்டுமே அடகு கடையில இருக்கு!
* பெரிய ஆசை ஏதாவது?
சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்; அப்புறம் கார் ஓட்டணும்!
* சினிமா... முதல் காட்சி அனுபவம்?
திரையரங்கம் பக்கமே போனதில்லை!
'கொரோனா'வால்...
ஊரடங்கு நேரத்துல அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருந்தோம். பசியோட உக்கிரத்தை தெரிஞ்சுக்கிட்டதும், வாழ்க்கையோட அருமை, அம்மா அப்பாவோட உழைப்பின் பெருமையை உணர்ந்ததும் அந்த நேரத்துலதான்!
ஒரே கடை
எங்க ஊருக்குள்ளே ஒரேயொரு மளிகை கடை. பேனா மட்டும் தான் அங்கே கிடைக்கும். நோட்டு வாங்கணும்... 'ஜெராக்ஸ்' எடுக்கணும்னா ஒரு கிலோ மீட்டர் கடந்து போகணும். இப்போ நான் கல்லுாரிக்கு வந்துட்டேன்; படிப்புல முன்னேறிட்டேன்; ஆனா, இன்னும் என்னோட ஊர் முன்னேறவே இல்லை!
வைராக்கியம்
நான் நான்காம் வகுப்பு படிக்கிறப்போ டீச்சர் 'ஸ்டெதஸ்கோப்' கொண்டு வந்திருந்தாங்க. எல்லாருடைய இதயத்துடிப்பும் அதுல கேட்டுச்சு. என் இதயத்துடிப்பு எனக்கு சரியா கேட்கலை. 'டீச்சர்... இன்னொரு தடவை கேட்கணுமே'ன்னு கை நீட்டினேன்; அவங்க தரலை. அன்னைக்கு நினைச்சேன்... 'டாக்டர் ஆகணும்'னு! இன்னைக்கு நான், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரியின் முதலாமாண்டு மாணவி!
வறுமை சாதிக்க வைக்குமா சத்யா?
மழை நேரங்கள்ல எங்க வீட்டுக்குள்ளேயும் மழை பெய்யும். கூலித்தொழிலாளிகளான அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ராத்திரி துாக்கம் தொலையுறதுக்கான முக்கியமான காரணம்... அடுத்தநாள் பசி பற்றிய பயம்! இந்த வாழ்க்கை சூழலால, பிளஸ் 2 முடிச்சதுமே அக்காவை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க!
இந்த வாழ்க்கைதான் நான் நல்லா படிக்க காரணம். ராத்திரி 2:00 மணிக்கு முழிப்பு தட்டினாலும் வீட்டுக்கு வெளியே சேர் போட்டு படிக்க ஆரம்பிச்சிடுவேன்; இப்பவும் அப்படித்தான்!
சத்யா... முதுகு வளைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளி; அதனாலென்ன... சத்யா சாதனைப் பெண்.