கேள்வி: இன்டர்நெட்டில் இருக்கையில், மைக்ரோசாப்ட் தளம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ டவுண்லோட் செய்து பயன்படுத்தச் சொல்லி பாப் அப் செய்தி கிடைக்கிறது. இந்த பிரவுசரில் ஏதோ பிரச்னை இருப்பதாகப் படித்தேன். இதனை இறக்கிப் பயன்படுத்தலாமா?
-டி.ஐஸ்வர்யா, சிவகாசி.
பதில்: நிச்சயமாக நீங்கள் புதிய பதிப்பு 9ஐப் பயன்படுத்தலாம். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் பிரவுசராக இருக்கும் பட்சத்தில், பதிப்பு 9ஐயே பயன்படுத்தலாம். நீங்கள் சந்தேகப்படும் பிரச்னைகள் எல்லாம், சோதனைத் தொகுப்பில் இருந்தன. அவை எல்லாம் சரி செய்யப்பட்டு தற்போது எந்த சிக்கலுமற்ற பிரவுசர் கிடைக்கிறது. பொதுவாக பிரச்னைகள் உள்ள பிரவுசரினை முழுமையான தொகுப்பாக ஒரு நிறுவனம் தர முன்வராது. மைக்ரோசாப்ட் அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தும் தொகுப்புகள் முழுமையான தொகுப்பாகத்தான் இருக்கும். எனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ஐ டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். இது மிக வேகமாக இயங்குவது மட்டுமின்றி, பாதுகாப்பானதும் கூட.
கேள்வி: நான் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதன் மூலம் ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பிரிண்ட் எடுக்க கண்ட்ரோல் + ப்பி கட்டளை கொடுத்தால், பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. பிரிண்ட் பிரிவியூ கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
-சி.உதயபாஸ்கரன், மதுரை.
பதில்: குரோம் பிரவுசரில் என்ன பதிப்பு பயன்படுத்துகிறீர்கள் என்று விவரம் தரவில்லை. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல குரோம் பிரவு சரில், பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். ஆனால் வரும் குரோம் பிரவுசர் பதிப்பு 13ல் நீங்கள் கேட்கும் பிரிண்ட் பிரிவியூ எனப்படும் அச்சு முன் பதிப்பு கிடைக்கிறது. பிரவுசர் விண்டோவின் வலது புறம் ஒரு சிறிய விண்டோ திறக்கப்படுகிறது. இதில் பிரிண்ட் பிரிவியூ மட்டுமின்றி, அச்சிடச் செல்கையில் நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளுக்குமான டயலாக் கொடுக்கப் பட்டிருக்கும். இது குரோம் பிரவுசருக்கான கூடுதல் பரிமாணமாக இருக்கும்.
கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். டெஸ்க்டாப்பினைக் காட்டுவதற்குக் கிளிக் செய்திடும் ஐகானை எப்படிப் பெற்று, டாஸ்க் பாரில் வைத்துக் கொள்வது? இதற்கான வழியைக் கூறவும்,
-தி.ஆசீர்வாதம், கோவை.
பதில்: இது குறித்துப் பல வாசகர்கள் கடிதம் மற்றும் போன் மூலம் கேட்டுள்ளனர். போனில் கேட்டவருக்கு பதில் கூறிவிட்டாலும், இதோ, இங்கும் அந்த பதிலைத் தருகிறேன். இதற்கெனத் தனி ஐகானை டாஸ்க் பாருக்குக் கொண்டு வர வேண்டாம். விண்டோஸ் 7 டாஸ்க் பாரிலேயே இது தரப்பட்டுள்ளது. உங்கள் திரையில், கீழ்ப்புறம் வலது ஓரமாக இது தரப்பட்டுள்ளது. இணைத்துள்ள சிறிய படத்தைப் பார்க்கவும். இந்த இடத்தில் கிளிக் செய்தால், உங்கள் டெஸ்க்டாப் காட்டப்படும். அந்த இடத்தில் உங்கள் மவுஸ் பாய்ண்ட்டரை வைத்திருந்தால், திறக்கப்பட்டுள்ள டெஸ்க்டாப், கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும். எவ்வளவு ஜாலி என்று இதனைப் பயன்படுத்தும் போது உணர்வீர்கள்.
கேள்வி: இணையத்தில் படம் ஒன்றை சேவ் செய்கையில், விண்டோஸ் அதனை பி.எம்.பி. பைலாக சேவ் செய்கிறது. இதனை ஜேபெக் பைலாக சேவ் செய்திட என்ன செய்ய வேண்டும்?
-சி. கிருத்திகா, சென்னை.
பதில்: இணைய தளத்தை உருவாக்கு பவர்கள், படங்களின் தரம் குறையாமல் காட்டப்பட, அதனை பி.எம்.பி. பைலாகவே பதிக்கிறார்கள். நீங்கள் அதனை சேவ் செய்திடுகையில் பி.எம்.பி. பைலாக விண்டோஸ் சேவ் செய்திடும். ஆனால், நீங்கள் விரும்பினால், அதனை ஜேபெக் அல்லது வேறு பார்மட்டிற்கு மாற்றி சேவ் செய்திடலாம். சேவ் செய்ய வேண்டிய படம் மீது ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் மெனு வழியாக சேவ் அஸ் என்ற பிரிவில் கிளிக் செய்யவும். அல்லது படத்தைக் காப்பி செய்திடவும். இனி நீங்கள் விரும்பும் பெயிண்ட் போன்ற புரோகிராமை இயக்கி, அதில் பேஸ்ட் செய்திடவும். அப்போது சேவ் செய்தால், உங்களிடம் ஆப்ஷன் கேட்கப் படும். அதில் கொடுத்துள்ள பார்மட்டில் எதனை வேண்டுமென்றாலும், தேர்ந் தெடுத்து சேவ் செய்திடலாம்.
கேள்வி: முன்பு ஒரு முறை ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க இணைய தளம் ஒன்றை பரிந்துரை செய்தீர்கள். எனக்கு பன்மை, அபாஸ்ட்ரபி பயன்படுத்துவது குறித்த சந்தேகம் தீர்க்க அந்த தளத்தின் முகவரியைத் தரவும்.
-கே. இளைய ராணி, திண்டிவனம்.
பதில்: நீங்கள் குறிப்பிடும் முந்தைய தளம் குறித்து எனக்கு நினைவில்லை. இருப்பினும் இப்போதைய உங்கள் பிரச்னைக்குச் சரியான தீர்வினை வழங்க இரண்டு தளங்கள் உள்ளன. அவற்றின் முகவரிகள் http://www.apostropheabuse.com/ மற்றும் http://www.apostrophecatastrophes.com/ இந்த தளங்களுக்குச் சென்றால், அனைத்து சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்படுகிறது.
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஆட்டோமெடிக் ஸ்குரோலிங் செய்வது சுலபம் என்றும், பெரிய டாகுமெண்ட்களில் இதனைப் பயன்படுத்துவது நல்லது என்றும் கூறுகின்றனர். இதனை எப்படி ஏற்படுத்துவது? எந்த மெனுவில் கிடைக்கிறது?
-சி. கமலா சேனன், உடுமலை.
பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் மவுஸ் மூலம் ஸ்குரோல் செய்திட வலது பக்கமும், கீழாகவும் ஸ்குரோல் பார் உள்ளன. ஆனால், மவுஸ் கொண்டு மிக வேகமாக ஸ்குரோல் செய்திடும் வசதியும் உண்டு. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.
கேள்வி: போல்டர் ஒன்றை மினிமைஸ் செய்து டாஸ்க்பாரில் வைத்திருக்கையில், பைல் ஒன்றை அதில் காப்பி செய்திட முடியுமா? நான் செய்து பார்த்தேன். முடியவில்லை.
-கா. சூரிய பிரகாஷ், கோவை.
பதில்: சூரிய பிரகாஷ், நீங்கள் எப்படி முயற்சித்தீர்கள் என்று ஒரு சிறிய குறிப்பு தந்திருக்கலாம். பரவாயில்லை. பைலை அப்படியே இழுத்து வந்து அந்த போல்டரின் மீது மவுஸின் பட்டனிலிருந்து அழுத்தத்தை எடுக்காமல் வைத்திருக்கவும். போல்டர் தானாகத் திறந்திடும். இப்போது அந்த விண்டோவில் பைலைப் போட்டுவிடலாம்.
கேள்வி: ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என்று சொல்கையில், இது ஏதேனும் தனி அமைப்பைச் சேர்ந்ததா? அல்லது வேறு பொருளைக் குறிக்கிறதா?
-டி. ஹம்சா ராஜன், திருப்பூர்.
பதில்: ஒரு புரோகிராமிற்கான சோர்ஸ் கோடினை (புரோகிராம் வரிகள்) அதனை எழுதியவர் மற்றவர் பார்க்கும்படியாகவும், படித்துத் திருத்தக் கூடிய வகையிலும் தருகிறாரோ அவை மட்டுமே ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என அழைக்கப்படுகின்றன. சோர்ஸ் என்பது மூல ஆதாரம். இந்த புரோகிராமின் மூல ஆதாரங்களை யாரும் கண்டு கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம் களின் (விண்டோஸ் மற்றும் ஆபீஸ்) சோர்ஸ் கோட் எவருக்கும் கிடைக்காது. ஆனால் ஓப்பன் ஆபீஸ், லினக்ஸ் சிஸ்டம், மொஸில்லா பிரவுசர் ஆகியவற்றின் சோர்ஸ் கோடினை யார் வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால் தான் புரோகிராம் டெவலப்பர்கள் இந்த சாப்ட்வேர் களில் இயங்கக் கூடிய வகையில் துணை புரோகிராம்களையும் ஆட் ஆன் தொகுப்பு களையும் எழுதி மக்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.
கேள்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பேட்ச் அப் பைல்களை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. அது எந்த நாள்?
-கே. தம்பிராஜ், புதுச்சேரி.
பதில்: இரண்டாவது செவ்வாய்க்கிழமை. உங்கள் சிஸ்டத்தில் ஆட்டோமேடிக் அப்டேட் என்பதைத் தேர்ந்தெடுத்து அமைத் திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், இந்த பைல்களைத் தானாகவே கம்ப்யூட்டர் டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளும். தானாகவே அவற்றை இன்ஸ்டால் செய்திடும் படியும், உங்களைக் கேட்டு இன்ஸ்டால் செய்திடும் வகையிலும், இதனை செட் செய்திடலாம்.
கேள்வி: Auto Responder என்பது என்ன? இதனை கம்ப்யூட்டரில் எதற்காகப் பயன்படுத்தலாம்?
-இ.சல்மா சுலைமான், காரைக்கால்.
பதில்: Auto Responder ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர் களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.