தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
என் கணவருக்கு வயது 71. கோவையில செயல்பட்ட அந்த தனியார் நுாற்பாலையில 'விற்பனையாளர், வைண்டர் தொழிலாளி'ன்னு மொத்தம் அவருக்கு 29 ஆண்டு அனுபவம்!
1998ம் ஆண்டு நிறுவனம் கைமாறினதும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்தாங்க; நிறுவன திட்டக்குறிப்புல, '1988க்கு பிறகான பணிக்கால கிராஜூவிட்டி மட்டுமே தர முடியும்'னு அறிவிப்பு! முந்தைய 15 ஆண்டு கால தன் உழைப்புக்கும் சேர்த்து நியாயமான பணிக்கொடை கேட்டு கோவை, தொழிலாளர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார் என் கணவர்.
'சட்டப்படியான பணிக்கொடை 76 ஆயிரத்து 125 ரூபாயை வட்டியோட நிறுவனம் தரணும்'னு 15.09.2004ல உத்தரவிட்டாரு தொழிலாளர் துணை ஆணையர். இந்த ஆணையை எதிர்த்து நிர்வாகம் தொடுத்த மேல்முறையீடும் 30.10.2018ல சென்னை உயர் நீதிமன்றத்தால தள்ளுபடி ஆயிடுச்சு. கூடவே, வருவாய் வசூல் சட்டப்படி வட்டியுடன் அதை வசூலித்து தர அரசுத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு!
மாவட்ட ஆட்சியர், மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், உங்க தனிப்பிரிவுன்னு மனு போட்டு கோரிக்கை வைச்சாச்சு; எந்த முன்னேற்றமும் இல்லை!
'இது மக்களுக்கான அரசு'ன்னு நீங்க சொல்றது வார்த்தை அளவுல மட்டும்தானாய்யா?
- பணிக்கால பலன் கேட்டு 20 ஆண்டுகளாகப் போராடும் ஆலைத்தொழிலாளி சிவராமனின் மனைவி பானுமதி, வரதராஜபுரம், கோவை.