மே 3 அட்சய திரிதியை
அட்சய என்றால், வளர்வது என்பது மட்டுமல்ல, என்றும் குறையாதது என்ற பொருளும் உண்டு. நம் வீட்டில் வளம் மட்டுமல்ல, நலமும் வளர வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொன்னது, இதனால் தான். இதற்கு, உணவே மருந்து என்ற கொள்கையை கடைப்பிடித்தனர், நம் முன்னோர். குறிப்பிட்ட காலங்களில், குறிப்பிட்ட உணவு மற்றும் பானங்கள் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
புரட்டாசி நவராத்திரி காலத்தில், பயிறு வகைகளை சாப்பிடுவது, தோல் நோயை தடுக்கும். சித்திரை, வேப்பம்பூ பச்சடி, கிருமிகளைக் கொல்லும். இதுபோல், அட்சய திரிதியை அன்று, கரும்புச்சாறு பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த விழாவை, 'வர்ஷி தபா' என்கின்றனர், ஜைனர்கள். வர்ஷி என்றால், எல்லையற்ற தெய்வீக அன்பைப் பொழிதல். தபா என்றால் தருணம். என்றும் குறையாத மாசற்ற அன்பை பிறரிடம் கொட்டும் திருநாள் என, இதை சொல்கின்றனர்.
ஜைனர்களின் முக்கிய தீர்த்தங்கரரான ரிஷபநாதர், தன் ஓராண்டு கால தவத்தை முடித்து, வளர்பிறை திரிதியை திதியன்று ஊர் திரும்பினார். அவருக்கு, ஹஸ்தினாபுரம் அரசரான ஷ்ரேயான்ஸ், கரும்புச்சாறு கொடுத்து உபசரித்தார். இந்த நாளை அட்சய திரிதியை என கொண்டாடுகின்றனர், மக்கள். இந்த நாளில் கரும்புச்சாறு பருகுகின்றனர். இதனால், உடல்நலம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
புதிய தொழில்கள் துவங்குவது, தங்கம், சொத்து வாங்குவது, தானிய விதைகள், பழங்கள், இனிப்பு தானம் செய்வது, நிச்சயதார்த்தம் நடத்துவது என, ஆனந்தமான விஷயங்களைச் செய்கின்றனர். வாழ்வின் வளர்ச்சிக்கு அடிகோலும் விழாவாக அட்சய திரிதியை விளங்குகிறது.
கணவன் நலமுடன் வாழ, பெண்கள் காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம் போன்றவற்றை அனுஷ்டிப்பது போல, அட்சய திரிதியை நன்னாளிலும் கணவனுடன் ஒற்றுமையாக வாழ, லட்சுமி நாராயணருக்கு தயிர் சாதம் படைத்து பூஜை செய்வது, பலமடங்கு பலன் தரும்.
ஜார்க்கண்ட் மாநில மக்கள், இந்த விழாவன்று கரும்புச்சாறு தானம் செய்து, தாங்களும் பருகுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான, சிவப்பணுக்களை அதிகரிக்கும் சக்தி கரும்புச்சாறுக்கு உண்டு. குறிப்பாக, திரிதியை திதியில், இதைப் பருகும் போது, எதிர்ப்பு சக்தி பல மடங்கு பெருகும் என்கின்றனர்.
அட்சய திரிதியை திங்கட் கிழமையில் வந்தால், அதிக நன்மை தருவதாக அமையும். இது, சிவன் மற்றும் சந்திரனுக்குரிய நாள் என்பதால், மனபலம் பலமடங்கு அதிகரிக்கும். அட்சய திரிதியை நன்னாளில், அனைவரும் நலமும் வளமும் பெற்று, வாழ பிரார்த்திப்போம்.
தி. செல்லப்பா