இளநீர் குடிக்கலாமே!
சமீபத்தில் உறவினர் ஒருவரின் வீட்டு காது குத்து விசேஷத்துக்கு சென்றிருந்தேன்.
ஆடு வெட்டி, சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. எப்படியும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும் என்று தெரிந்தது. ஆட்டு கறி வெந்து கொண்டிருந்த இடத்துக்கு சென்றேன்.
அந்த விசேஷத்திற்கு சமையல் செய்ய வந்திருந்தவர், என் நண்பர் என்பதால், அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
'என்னங்க... ஆட்டு கறி வேக ரொம்ப நேரமாகும் போலிருக்கே...' என்றேன்.
'இல்லைங்க... இங்க அறுத்தது எள ஆடு. அதனால, சீக்கிரம் வெந்திடும். சில இடங்கள்ல கொஞ்சம் வயசான, முத்தின ஆடுகளா இருக்கும். அதுதான் சீக்கிரம் வேகாது...' என்றார்.
'அப்போ என்ன பண்ணுவீங்க?' என்றேன்.
'சீக்கிரமா அத வேக வைக்கவும் ஒரு, 'டெக்னிக்' கைவசம் இருக்கு...' என்றவர், ஒரு வெளிநாட்டு பார்முலாவை வாங்கி, அதே வர்த்தக பெயரில் இந்தியாவிலேயே தயாரிக்கும் குளிர் பானத்தின் பெயரை சொல்லி, 'அத ரெண்டு பாட்டில் ஊத்தினா போதும். அரை மணி நேரத்தில எவ்வளவு முத்தின கறியா இருந்தாலும், பஞ்சு மாதிரி வெந்துடும்...' என்றார்.
எனக்கு அப்படியே துாக்கிவாரிப் போட்டது.
வேகாத கறியையே வேக வைக்கும் அளவுக்கு அமிலத்தன்மையும், வேண்டாத கலவைகளும் கொண்டதா அந்த குளிர் பானம். அப்படியானால், மிகவும் மிருதுவான நமது உணவு குழாய்களை அரித்து, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்குமோ!
அந்த குளிர் பானத்தை, விரும்பி குடித்து வந்த நான், இப்போதெல்லாம் இளநீர் அல்லது மோர் தான் குடிக்கிறேன்.
இனிமேலாவது வெளிநாட்டு குளிர் பானங்களை தவிர்த்து, மோர் அல்லது இளநீர் குடிப்பது நல்லது.
- கே.ஆனந்தன், தர்மபுரி.
இப்படியும் உதவலாம்!
நம் வீடுகளில் வாங்கும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், நாவல்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் முதலியவற்றை படித்து விட்டு, பழைய பேப்பர் கடையில் விலைக்குப் போடுவது வழக்கம். அதற்கு பெரிதாக பணம் கிடைத்து விடப்போவதில்லை.
என் வீட்டில் வாங்கும் வார, மாத இதழ் மற்றும் அக்கம்பக்கத்து தோழியர் வாங்கும் புத்தகங்களையும் அவர்கள் படித்த பின் சேகரிப்பேன். அவற்றை, பணம் கொடுத்து வாங்க வசதியில்லாத, ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர் விடுதிக்கும் தருவதை, பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்.
இதனால், அவர்கள் படித்து பயனடைவதோடு, மகிழ்ச்சியும் அடைகின்றனர். எல்லாரிடத்திலும் வாசிக்கும் பழக்கம் வளர்கிறது. ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக செலவிடுகின்றனர்.
மற்றவர்களும் இப்படி செய்யலாமே!
- ராதிகா ரவீந்திரன், சென்னை.
முதுமைக்கு மரியாதை!
அண்மையில், வட மாநில நண்பர் ஒருவர், தன்னுடைய காரில், அவருடைய பெற்றோரை, 10 நாட்களுக்கு ஒருமுறை வெளியில் அழைத்துச் செல்வதை பார்த்து, அவர்களின் உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து, விசாரித்தேன். அவர் சொன்ன விபரங்கள் மகிழ்ச்சி அளித்தது.
'கொரோனா தொற்று காரணமாக, நீண்ட நாட்கள் வீட்டிலேயே இருந்ததால், மனதளவில் ஒருவித சலிப்பு மற்றும் மனச்சோர்வுடன் இருந்தனர். அதனால், அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்று, விரும்பிய உணவு வகைகளை வாங்கி உண்ண வைத்து, விரும்பிய கோவில் மற்றும் இடங்களில் தனியாக சிறிது நேரம் அமர வைத்து, பின், வீட்டிற்கு அழைத்து வந்து விடுவேன்.
'இப்போது, அவர்கள் மனச்சோர்வு நீங்கி, புத்துணர்ச்சியுடனும், மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றனர். எங்களுடனும், பேரக் குழந்தைகளுடனும் உற்சாகமாக உரையாடுகின்றனர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது...' என்றார்.
முதுமைக்கு மரியாதையும், முதியவர்களுக்கான அன்பையும் அவர் வெளிப்படுத்திய விதத்தை, மனதார பாராட்டினேன்.
- டி. நரசிம்மராஜ், மதுரை.