ஜெயலலிதா பேட்டி சம்பந்தமாக, நான் கொடுத்த, 'டேப் - ரிக்கார்டர்' பதிவை கேட்ட, 'குமுதம்' ஆசிரியர் உடனே அருகிலிருந்த குறிப்பேட்டில், 'ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடர்... மனம் திறந்து சொல்கிறேன். 50 வாரங்கள்...' என்று எழுதினார்.
எனக்கு ஒரே ஆச்சரியம்.
'என்ன சார் ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, 50 வாரங்கள் கட்டுரை வரலாம் என்கிறீர்களே... எப்படி சார்...' என்றேன்.
'ஜெயலலிதா வீட்டிற்கு போவது எவ்வளவு கஷ்டம்; அவரை இந்த மாதிரி மனம் திறந்து பேச வைப்பது, சாதாரண விஷயம் இல்லை. இந்த முயற்சி சிறப்பாக வரும்...' என்றார், எஸ்.ஏ.பி.,
'ஜெயலலிதாவிடம் சொல்லிடலாமா?' என்றதற்கு, 'சொல்லுங்கள்...' என்றார்.
உடனே, ஜெயலலிதா வீட்டிற்கு போன் செய்து, 'மேடம்... இந்த தொடரை கட்டுரையாக போட்டுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார்...' என்றேன்.
அவர் நம்பாமல், 'எப்படி ரஜத்?' என்றார்.
ஜெயலலிதா கூறியதை எஸ்.ஏ.பி.,யிடம் சொன்னேன். யாரிடமும் நேரிடையாக பேசாத அவர், அன்று விதிவிலக்காக ஜெயலலிதாவிடம் பேசினார்.
'ரஜத் சொல்வது உண்மை தான். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்...' என்றார்.
பேட்டிக்கு நேரம் ஒதுக்கியதுடன், புகைப்படங்களை சேகரித்து கொடுப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டினார், ஜெயலலிதா. 'குமுதம்' இதழில் முதல் அத்தியாயம் வந்தவுடன், அவருக்கு நிறைய கடிதங்கள் வர ஆரம்பித்தன.
'கடிதங்களுக்கு பதில் எழுத உதவியாளரை வைத்துக் கொள்ளலாம்...' என்று ஜெயலலிதாவிடம் சொன்னேன்; அவரும் ஒப்புக் கொண்டார்.
எழுத்தாளரான என் அக்கா குயிலி ராஜேஸ்வரியிடம், 'உதவியாளராக ஒரு பெண் வேண்டும்...' என்று கேட்டார், ஜெயலலிதா. அவர் போனில் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எங்கள் வீட்டிற்கு ஒரு இளம் பெண் மற்றும் அவரது அப்பாவும் வேலை தேடி வந்தனர்.
அந்த பெண்ணை ஜெயலலிதாவின் வீட்டிற்கு அழைத்து போகச் சொன்னார், அக்கா. அந்தப் பெண்ணை உதவியாளராக வேலைக்கு அமர்த்தி கொண்டார், ஜெயலலிதா.
மேற்கு மாம்பலத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு தினமும் காரை அனுப்புவார். ஜெயலலிதா வீட்டிலேயே அவருக்கு உணவு மற்றும் நல்ல சம்பளம் அளிக்கப்பட்டது. பல மாதங்கள் ஜெயலலிதாவிற்கு உதவியாளராக, அந்தப் பெண் பணிபுரிந்தார். அதன்பின், அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் நிரந்தரப் பணி கிடைக்கவும் உதவினார், ஜெயலலிதா.
வித்தியாசமான சாதனை!
ஒரு உலக சாதனையை தமிழ் பத்திரிகைகளில் முதன்முதலாக பதிவு செய்த சிறப்பு, 'தினமலர் - வாரமலர்' இதழையே சாரும்.
சென்னை தியாகராய நகர், ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்த மூன்று மாணவர்கள், ஒரே சமயத்தில் இந்தியாவின் முப்படைகளுக்கும் தளபதிகளாக இருந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டு, அப்பள்ளி ஆசிரியர் டாக்டர்
எஸ்.திருவேங்கடசாரியை சந்தித்து பேட்டி எடுத்தேன். இந்த போட்டி, ஏப்., 18, 1999 'வாரமலர்' இதழில் வெளியானது.
பேட்டியில் திருவேங்கடசாரி கூறியது:
சுந்தர்ஜி, ராணுவத் தளபதியாகவும், அவருடைய அண்ணன் ஸ்ரீதர், இந்திய கப்பல் படை தளபதியாகவும், சுந்தர்ஜியுடன் அதே வகுப்பில் படித்த கிருஷ்ணசுவாமி, விமானப் படை தளபதியாக ஏர்வைஸ் மார்ஷலாக ஒரே சமயத்தில் பதவி வகித்தனர்.
நன்றாக படிக்க கூடிய மாணவன், சுந்தர்ஜி; முதல் ரேங்க் தான் வாங்குவான். கிரிக்கெட் ஆடுவதில் ஆர்வம். நிறைய சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு, லட்சியம் அவனிடம் உண்டு.
'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' 1984ல் நடந்தது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்து அங்கிருந்த தீவிரவாதிகளை வீழ்த்தியது. அப்போது, மேற்கத்திய, 'கமெண்டடின்' தலைமை பொறுப்பை ஏற்று இருந்தான், சுந்தர்ஜி. அரசு உத்தரவுப்படி தாக்குதலை செய்தான்.
சென்னை வந்து என்னை சந்தித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு அழுதான்.
'ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் போது, தீவிரவாதிகளுடன் சில அப்பாவிகள் கூட சுடப்பட்டிருப்பர். என் தலைமையில் தான் அந்த தாக்குதல் நடைபெற்றது.
நான் செய்தது பாவம் இல்லையா... அப்பாவி மக்கள் யாராவது இறந்திருந்தால் அதற்கு நான் தானே பொறுப்பு. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்...' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான், சுந்தர்ஜி.
'ராணுவத்தில் பணியாற்றுகிறாய். அந்த சமயத்தில் உன் கடமையை தான் செய்துள்ளாய். கடவுள் மீது பாரத்தை போட்டு கடமையை தொடர்ந்து செய்...' என்றேன்.
நல்ல அறிவாளி, சிறந்த பேச்சாளன், உழைப்பாளி மற்றும் எழுத்தாளன், சுந்தர்ஜி. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று, மகாராஷ்டிர மாநிலம், பூனே நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்று ஒரே பள்ளியில், ஒரே சமயத்தில் படித்த மூன்று பேர், அந்த நாட்டின் முப்படைகளுக்கும் தலைவராக இருந்ததாக, நான் கேள்விப்பட்டதில்லை.
— இவ்வாறு பள்ளி ஆசிரியர் கூறினார்.
சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்த பிட்மனுக்கு, பூஜை செய்த கதை தெரியுமா உங்களுக்கு?
— தொடரும்
'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலைக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு.
தன் முதல் மகனுக்கு, நேருவின் பெயரின் முன் பாதியை எடுத்து, ஜவகர் பழனியப்பன் என்று வைத்தார். அடுத்துப் பிறந்த மகளுக்கு நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் நினைவாக, விஜயலட்சுமி என்று பெயர் வைத்தார். தன் இன்னொரு மகளுக்கு நேருவின் மற்றொரு தங்கை கிருஷ்ணா ஹத்தி சிங் நினைவாக, கிருஷ்ணா என்று பெயர் வைத்தார்.
எஸ். ரஜத்